தமிழ் சினிமா

‘திரெளபதி 2’ விவகாரம்: மன்னிப்புக் கேட்ட சின்மயி - பின்னணி என்ன?

ஸ்டார்க்கர்

‘திரெளபதி 2’ விவகாரத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார் பாடகி சின்மயி. இதன் பின்னணி என்னவென்று தெரிய வந்துள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரெளபதி 2’. ஜிப்ரான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ’எம்கோனே’ வெளியாகியுள்ளது. இதனை சின்மயி பாடியுள்ளார். இதனை இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள்.

இது தொடர்பாக மன்னிப்புக் கேட்டுள்ள சின்மயி, “எம்கோனே பாடலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஜிப்ரான், நான் ஜிங்கிள் பாடும் நாட்களில் இருந்து 18 வருடங்களாக எனக்குத் தெரிந்த ஓர் இசையமைப்பாளர். அவரது அலுவலகத்தில் இருந்து இந்தப் பாடலைப் பாட அழைத்தபோது, வழக்கம் போலச் சென்று பாடினேன்.

எனக்கு சரியாக நினைவிருக்கும் பட்சத்தில், இந்தப் பாடல் பதிவின்போது ஜிப்ரான் இல்லை. பாடலை எப்படி பாட வேண்டும் என்பது குறித்து எனக்கு தெரிவித்தார்கள். நான் பாடல் பதிவை முடித்துவிட்டு வெளியேறினேன். இப்போதைய சூழல் பற்றி எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். ஏனென்றால் சித்தாந்தங்கள் எனக்கு முற்றிலும் முரணாக உள்ளன. இதுதான் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மோகன்ஜி, “‘திரெளபதி 2’ படத்தில் என்னுடன் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகளை குறிவைக்காதீர்கள். என்னுடைய படம் எதைப் பேசினாலும், அது எனது சொந்த படைப்பு மற்றும் கருத்தியல். உங்களுடைய இலக்கு நான். எனது திட்டங்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்களை குறிவைக்காதீர்கள். இது ஒருவித கோழைத்தனம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT