சந்தோஷ் இராவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அந்தரன்’. பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார், மு.கி. சாம்ப சிவம், ரமேஷ் பாபு உள்பட பலர் நடித்ததுள்ளனர்.
‘அடவி’, ‘மனிதர்கள்’ படங்களைத் தொடர்ந்து ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்ப சிவம் தயாரிக்கிறார். ஹரி எஸ்.ஆர். இசையமைக்கும் இப்படத்துக்கு கிஷோர் ராமச் சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சி.வி.குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
படம் பற்றி சந்தோஷ் இராவணன் கூறும்போது, “இப்படத்தின் கதையைத் தயாரிப்பாளர் சாம்பசிவத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். 2 நாட்களில் ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது’ என்றார். பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, தனது நண்பர் ராஜேந்திர பிரசாத்துக்கு கதை சொல்லச் சொன்னார். சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த ஆதரவின் காரணமாகத்தான் இப்படத்தின் பணிகள் தொடங்கின. ‘அந்தரன்’ என்றால் ஒரு வேடன். மறைந்திருந்து தாக்குபவன் என்று பொருள்.
இத்துடன் நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களைக் கடந்து செல்கிறோம். அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகு தான் அதன் தீவிரத்தைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டது தான் இப்படம். அதைப் பற்றி இப்போது விரிவாகச் சொல்ல இயலாது. நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கைத் தழுவியது. படம் வெளியான பிறகு இதைப் பற்றிச் சொல்கிறேன். இது வழக்கமான படமாக இருக்காது” என்றார்.