தமிழ் சினிமா

தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சைக்கு ‘மண்டாடி’ இயக்குநர் விளக்கம்

‘சுஹாஸ் பற்றி மட்டுமே பேசினேன்’

ப்ரியா

‘‘மண்டாடி’ பட வெற்றி விழாவில் நான் சுஹாஸ் பற்றியும், அவர் எதிர்கொண்ட இனவெறி தொடர்பான பேச்சுகள் குறித்து மட்டுமே பேசினேன். தெலுங்கு ரசிகர்கள், தெலுங்கு மக்களை குறிக்கும் நோக்கம் என் பேச்சில் இல்லை’ என இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘மண்டாடி’ பட வெற்றி விழா நிகழ்ச்சியில் நான் பேசியது குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன். நடிகர் சுஹாஸ் மற்றும் நிறம் காரணமாக அவர் எதிர்கொண்ட இனவெறி கருத்து தொடர்பாக நான் பேசியது, சுஹாஸை பேசிய அந்த நபரையும் அவர் சொன்ன வார்த்தைகளை மட்டும்தான் குறிப்பிட்டேன். எனது பேச்சில் தெலுங்கு மக்கள், தெலுங்கு ரசிகர்கள், ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகை சுட்டிக்காட்டும் நோக்கம் எதுவும் இல்லை.

‘மண்டாடி’ பட வெளியீட்டுக்கு முன்பாக  ஹைதராபாத்தில் நடந்த விழாவில், நாட்டில் இன்றைக்கு தெலுங்கு சினிமாதான் முன்னணியில் உள்ளது. தெலுங்கு சினிமா உலகம் மற்றும் ரசிகர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என வெளிப்படையாக பேசியிருந்தேன்.

என் மீதும் என்னுடைய ‘மண்டாடி’ படத்தின் மீதும் மிகுந்த அன்பு செலுத்திய மக்களுக்கு எதிராக நான் ஒருபோதும் பேச மாட்டேன். என்னுடைய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கு சினிமா மற்றும் தெலுங்கு மக்களின் மீதான என் அன்பு என்றும் மாறாது.

நான் சுஹாஸுக்கு ஆதரவாகவும் அவரிடம் நிறம் குறித்துப் பேசிய அந்த தனிநபரைப் பற்றி மட்டும் தான் பேசினேனே தவிர ஒட்டு மொத்த தெலுங்கு சமூகத்தைப் பற்றி பேசவில்லை’ என்று  விளக்கம் அளித்துள்ளார்.

செப்டம்பர் 17-ம் தேதி நடந்த மண்டாடி பட வெற்றி விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, ‘சுஹாஸ் சார், படப்பிடிப்பின்போது கருப்பாக இருப்பதால் நானெல்லாம் ஒரு ஆளா வருவேனான்னு எங்கள் ஊரில் என்னைக் கேட்டிருக்கிறார்கள் என வருத்தப்பட்டு இருக்கிறீர்கள். அதற்கு நான் படம் வெற்றி பெறும்போது மேடையில் பதில் சொல்கிறேன் என சொல்லி இருந்தேன்.

கருப்பா இருந்தா மேல வரமுடியாதுன்னு சொன்ன அந்த நபருக்கு சொல்லிக் கொள்கிறேன்... கருப்பு பற்றி தமிழகத்தில் பேசாதீர்கள். அதெல்லாம் இங்கு இல்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு நீங்க அவரை அங்கே கூப்பிடவில்லை என்றால், நாங்கள் அவரை இங்கேயே வைத்துக்கொள்வோம். தமிழகத்தில் இன்று எல்லாருக்கும் சுஹாஸைத் தெரியும். சாட்டை புலி என்பது எங்களுக்கு ஓர் உணர்வு’ என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT