பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ எப்படி? - ‘அதிகார போட்டிக்கான அரசியல்’

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ எப்படி? - ‘அதிகார போட்டிக்கான அரசியல்’
Updated on
1 min read

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

‘தி வோல்ட் ஆஃப் வேட்டுவம்’ என்ற அந்த வீடியோவை இயக்குநர் ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கதில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘ஒரு தொலைநோக்கு பார்வை, அதை செயல்படுத்துபவரின் வலிமையைப் பொறுத்தே ஆற்றல்மிக்கதாக மாறுகிறது. பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதை வெளிச்சத்துக்கு கொண்டு வர எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டு ‘வேட்டுவம்’ படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார்.   

சுமார் 5 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ, ‘அழிவு என்பது முடிவு அல்ல. புதியதின் தொடக்கம்’ என்கிற புத்தரின் பொன்மொழியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து ரஞ்சித்தின் குரல், ‘கடந்த காலத்தில் மக்கள் வாழ்வில் உண்டான தாக்கம், நிகழ்கால மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றம், அதன் விளைவாக இயற்கை எதிர்கால மக்களின் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என மூன்று காலங்களைப் பற்றி பேசுகிறது’ என படத்தின் உலகைப் பற்றி விளக்குகிறது.

தொடர்ந்து, உணவுத் தேவை அல்லது தற்காப்புக்காக ஒரு விலங்கைக் கொல்வது வேட்டை. தங்களின் அதிகாரம் அல்லது பலத்தை நிரூபிக்க நடக்கும் சண்டையே ‘வேட்டுவம்’ என படத் தலைப்புக்கு விளக்கமும் கொடுக்கிறது.

படத்தில் நடித்திருப்பவர்கள் அதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்ட விதம் காட்சிகளாக விரிகிறது.

படத்தின்  மையக் கருவாக காட்டப்பட்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான மல்லர் கம்பம், ‘இந்திர விழா’ அறிவிப்பு பற்றி வரும் காட்சிகள், மல்லர் கம்பம் விளையாட்டுக்கு நடிகர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் ‘வேட்டுவம்’ குறித்து பா.ரஞ்சித் காட்ட இருக்கும் உலகத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது.

நீலம் பரொடக்‌ஷன் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, வி.ஆர்.தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், கலையரசன், மைம் கோபி, குரு சோமசுந்தரம், ஷபீர் கல்லாரக்கல், ஜான் விஜய், சாய் தீனா, ஆனந்த் சாமி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு டிசம்பரில் இப்படம் வெளியாக இருக்கிறது.

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ எப்படி? - ‘அதிகார போட்டிக்கான அரசியல்’
Hen: ஒரு கோழியின் பார்வையில்… | ஓடிடி திரை அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in