போதிய கவனம் பெறாத, அதேநேரம் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், தான் தேர்ந்தெடுத்த துறையில் உழைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் ஒளிப்பதிவாளர் - இயக்குநர் செழியன்.
திரைபடக் கலை, ஒளிப்படக் கலை, இசை, எழுத்து எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர். கடந்த மே மாதம் ஒரு திரையிடலுக்குச் சென்றிருந்தபோது, நெடு நாள் கழித்து அவரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 2 மாதங்கள் கூடக் கடந்திராத நிலையில் நேற்று அவர் காலமாகிவிட்டதாக செய்தி வந்தது.
உலக சினிமா திரைப்படம் என்பது ரசிக்க எளிதானது, ஆனால் அதன் நுட்பங்களைப் புரிந்துகொள்வது கடினம் என்று கூறப்படும் நிலையில், ஒரு கலையை நெருங்கிப் புரிந்துகொள்ள முயன்றால், அதன் அடிநாதத்தைப் பிடித்துவிட முடிந்தால் எல்லா கலையும் வசப்படும்.
கலைக்கு பிரம்மாண்டங்கள் தேவையில்லை, கதையும் அதை சிறப்பாக வெளிப்படுத்தும் கலைக் கூறுகளையும் ஒருவர் வளர்த்தெடுத்துக் கொண்டால் போதும் என்கிற நம்பிக்கையைப் பரவலாக விதைத்தவர்களில் ஒருவர் செழியன்.
திரைப்பட ரசனையை வெகுமக்களிடம் எடுத்துச்சென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர். உலக சினிமா என்பது திரைப்பட சங்கங்கள் போன்ற சிறு குழுக்களிலும் சிற்றிதழ்களிலும் மட்டும் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசவைத்தவர்.
ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்ற நூல், அவரது ‘உலக சினிமா’. சினிமாவையும் நாயகர்களையும் வழிபடக் கூடியவர்களாகக் கருதும் நம் மண்ணில், மாறுபட்ட கதைகளையும் அவற்றினுள் உட்பொதிந்து வைக்கப்பட்டுள்ள கருத்துகளையும் செழியன் கவனப்படுத்தினார். எல்லைகளைக் கடந்த மனித உணர்வுகளைக் கடத்தும் அந்தத் திரைப்படங்களின் சிறப்பை பரவலாக்கினார்.
எழுத்துத் திறன்:
அமைதியான சுபாவம் கொண்டவர். எப்போதும் ஒரு மெல்லிய புன்னகையுடன் வரவேற்பவர், பேசுபவர். தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தவர். காட்சி ஊடகம் சார்ந்து இயங்குபவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக இருப்பது பொதுவாக அரிது. தொடர் வாசிப்பு, சிறுகதை - கவிதை எழுதுதல் என வலுவான அடித்தளத்தை செழியன் கொண்டிருந்தார்.
மிகவும் கடினமானதாகக் கருதப்படும் மேற்கத்திய இசையை கற்பதற்கான ‘த மியூசிக் ஸ்கூல்’ கையேடுகள் தொகுப்பை வெளியிட்டவர். ஒருபுறம் ‘கல்லூரி’, ‘ரெட்டைச்சுழி’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ போன்ற சினிமாக்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், மற்றொருபுறம் செலவு குறைந்த, கலை சார்ந்த திரைப்படங்கள் என இரட்டைக் குதிரைகளில் பயணித்தார்.
கொண்டாடப்படாதவர்:
தனது ‘த பிலிம் ஸ்கூல்’ மூலம் சுயாதீனத் திரைப்படங்களை எடுப்பது தொடர்பாக, திட்டவட்டமான பயிற்சியை உருவாக்கி, அதற்கான மாணவர்களைத் திரட்டித் தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார். நிறுவனங்கள் செய்யவேண்டிய பணியை தனிநபராகச் செய்தார்.
பல்வேறு வகைகளில் தமிழ்த் திரைத் துறையில் இயங்கியவராக இருந்தும், போதிய வெளிச்சம் படாதவர். ஒருவகையில் அவர் தனித்தன்மையுடன் இயங்குவதற்கு அது காரணமாக இருந்தது என்று கூறலாம். அதேநேரம், ஆத்மார்த்தத்துடன் இயங்கும் திறமையாளர்களை நம் சமூகம் பெரிதாகக் கொண்டாடுவதில்லை.
அவருடைய எழுத்தோ, திரை முயற்சியோ இனிமேல் வரப்போவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், இனிய சுபாவம் கொண்ட ரசனையாளர், சக மனிதர்களிடம் ஏற்படுத்தியுள்ள வெறுமையை நிச்சயமாக நிரப்பிவிடவே முடியாது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த செழியன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான, ஒளிப்பதிவாளர் செழியனின் உடல் நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரைத்துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் போரூர் மின் மயானத்தில் நேற்று மாலை அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மறைந்த செழியனுக்கு பிரேமா என்ற மனைவி, அஜிதா என்ற மகள் உள்ளனர்.