தமிழ் சினிமா

டிஜிட்டல் மாஸ்டரிங், ரீமாஸ்டரிங்: திரைப்படத்தின் இறுதி வடிவமைப்பும் மறுபிறப்பும் | ஒளி என்பது வெளிச்சமல்ல 48

சி.ஜெ.ராஜ்குமார்

படப்​பிடிப்பு முடிந்த பிறகு திரைப்​படம் பார்​வை​யாளர்​களைச் சந்​திக்​கத் தயா​ராகிறது. எடிட்​டிங், கலர் கிரேடிங், பின்​னணி இசை, ஒலி மிக்​ஸிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) போன்ற அனைத்து பணி​களும் முடிந்த பிறகு, படம் திரையரங்​கு​கள், தொலைக்​காட்​சி, ஓடிடி தளங்​கள் மற்​றும் உலகம் முழு​வதும் வெளி​யிடப்​படு​வதற்​கான இறுதி வடிவம் உரு​வாக்​கப்​படு​கிறது. இந்த இறு​திக் கட்ட செயல்​முறையே டிஜிட்​டல் மாஸ்​டரிங் (Digital Mastering) எனப்​படு​கிறது.

பல ஆண்​டு​களுக்​குப் பிறகு ஒரு பழைய திரைப்​படத்தை மீண்​டும் வெளி​யிட வேண்​டிய சூழல் வந்​தால், அந்​தப் பழைய மாஸ்​டரை அப்​படியே பயன்​படுத்துவதில்​லை. அசல் ஃபிலிம் நெகட்​டிவ் அல்​லது சிறந்த தரத்​தில் இருக்​கும் மாஸ்​டரை வைத்​து, இன்​றைய தொழில்​நுட்​பத்​துக்கு ஏற்ப புதி​தாக உரு​வாக்​கப்​படும் வடிவமே டிஜிட்​டல் ரீமாஸ்​டரிங் (Digital Remastering) எனப்​படும்.

எளிமை​யாகச் சொன்​னால், டிஜிட்​டல் மாஸ்​டரிங் என்​பது ஒரு புதிய திரைப்​படத்​தின் முதல் இறுதி வடிவம். டிஜிட்​டல் ரீமாஸ்​டரிங் என்​பது பழைய திரைப்​படத்​துக்கு அளிக்​கப்​படும் புதிய தொழில்​நுட்ப மறு​பிறவி.

டிஜிட்​டல் மாஸ்​டரிங் என்​றால் என்ன?

ஒரு திரைப்​படத்​தின் அனைத்து படைப்​புப் பணி​களும் முடிந்த பிறகு, அது வெளி​யீட்​டுக்​குத் தயா​ராகிறது. இந்​நிலை​யில்​தான் ஒரு ஃபைனல் மாஸ்​டர் உரு​வாக்​கப்​படு​கிறது. இந்த ஃபைனல் மாஸ்​டரிலிருந்​து​தான் திரையரங்​கு​களுக்​கான DCP, OTT-க்​கான மாஸ்​டர், தொலைக்​காட்​சிக்​கான ப்ராட்​கேஸ்ட் காப்பி போன்ற பல்​வேறு வடிவங்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. இதைக் கட்​டிடம் கட்டி முடித்த பிறகு அதன் வரைபடத்தை பாது​காப்​பாக வைத்​திருப்​ப​தைப் போலக் கருதலாம். எதிர்​காலத்​தில் எந்த வடிவம் தேவைப்​பட்​டாலும் அதே மாஸ்​டரிலிருந்​து​தான் உரு​வாக்​கப்​படும்.

ரீமாஸ்​டரிங் ஏன் தேவை?

20, 30 ஆண்​டு​களுக்கு முன்பு வெளி​யான திரைப்​படங்​கள் அன்​றைய திரையரங்குகளுக்​காகத் தயாரிக்​கப்​பட்​ட​வை. ஆனால் இன்று திரையரங்​கங்​களின் தரம் மிக​வும் உயர்ந்​து​விட்​டது. 4கே திரைகள், ஐமேக்​ஸ், டால்பி அட்​மாஸ், ஹெச்​டிஆர் போன்ற புதிய தொழில்​நுட்​பங்​கள் வந்​து​விட்​டன. அதே நேரத்​தில், பல ஆண்​டு​கள் பழமை​யான ஃபிலிம் சுருள்​களில் கீறல்​கள், தூசி, நிறம் மங்​குதல் போன்ற பாதிப்​பு​களும் ஏற்​பட்​டிருக்​கும். அதனால் பழைய திரைப்​படங்​களை இன்​றைய தரத்​தில் மீண்​டும் வெளி​யிட, அவற்றை மறு​படி​யும் சீரமைக்க வேண்​டிய தேவை ஏற்​படு​கிறது. எனவே டிஜிட்​டல் ரீமாஸ்​டரிங் அவசி​ய​மாகிறது.

ரீமாஸ்​டரிங் எப்​படி நடக்​கிறது?

முதலில் திரைப்​படத்​தின் ஒரிஜினல் நெகடிவ் அல்​லது சிறந்த தரமுள்ள ஃபிலிம் சுருள் தேர்வு செய்​யப்​படு​கிறது. அது மிக உயர்​தரத்​தில் கணினிக்​குள் மாற்​றப்​படு​கிறது. பின்​னர் திரைப்​படத்​தில் இருக்​கும் கீறல்​கள், தூசி, ஃபிலிம் நடுக்​கம், மங்​கிய நிறங்​கள் போன்​றவை ஒவ்​வொன்​றாக சரி செய்​யப்​படு​கின்​றன. இது ஒரு புதிய திரைப்​படத்தை உரு​வாக்​கு​வதற்​காக அல்ல; பழைய திரைப்​படத்தை அதன் இயல்​பான அழகுடன் மீண்​டும் உயிர்ப்​பிப்​ப​தாகும்.

மீண்​டும் கலர் கிரேடிங்: ரெஸ்​டொரேஷன் முடிந்த பிறகு திரைப்​படம் மீண்​டும் டிஐ பிரிவுக்​குச் செல்​கிறது. இங்கு புதிய நிறங்​கள் சேர்க்​கப்​படு​வ​தில்​லை. மாறாக, அசல் ஒளிப்​ப​தி​வாளர் உரு​வாக்​கிய காட்​சி​யின் அழகைப் பாது​காத்​த​படி, இன்​றைய திரைகளில் இன்​னும் தெளி​வாகத் தோன்​றும் வகை​யில் நிறங்​கள் சமநிலைப்​படுத்​தப்​படு​கின்​றன. இதனால் பல ஆண்​டு​களுக்கு முன்பு எடுக்​கப்​பட்ட திரைப்​பட​மும், புதி​தாக எடுத்த படம் போல உயிரோட்​ட​மாகத் தோன்​றுகிறது.

ஒலிக்​கும் புத்​து​யிர்: பழைய திரைப்​படங்​களில் பெரும்​பாலும் மோனோ அல்​லது ஸ்டீரியோ ஒலி மட்​டுமே இருக்​கும். ரீமாஸ்​டரிங்​கின்​போது தேவையற்ற சப்​தங்​கள் நீக்​கப்​பட்​டு, வசனம், இசை மற்​றும் பின்​னணி ஒலிகள் தெளிவுபடுத்​தப்​படு​கின்​றன. தேவை​யான இடங்​களில் அவை டால்பி 5.1 அல்​லது டால்பி அட்​மாஸ் போன்ற நவீன ஒலி வடிவங்​களுக்​கும் மாற்​றப்​படு​கின்​றன. இதனால் பழைய திரைப்​படத்​தைப் பார்க்​கும்​போது புதிய ஒலி அனுபவ​மும் கிடைக்​கிறது.

கியூப், டிசிபி மற்​றும் கேடிஎம்: ஒரு திரைப்​படம் தயா​ரான பிறகு அது திரையரங்​கங்​களுக்கு அனுப்​பப்பட வேண்​டும். இந்​தி​யா​வில் இந்​தப் பணி​யில் கியூப் சினிமா முக்​கியப் பங்கு வகிக்​கிறது. ஃபைனல் மாஸ்​டரிலிருந்து திரையரங்​கு​களில் இயக்​கப்​படும் டிசிபி (டிஜிட்​டல் சினிமா பேக்​கேஜ்) உரு​வாக்​கப்​படு​கிறது. டிசிபி என்​பது ஒரு சாதாரண வீடியோ கோப்பு அல்ல. திரையரங்​கு​களில் இயக்​கு​வதற்​காகவே தயாரிக்​கப்​படும் ஒரு பிரத்​யேக வடிவம். பாது​காப்​பிற்​காக இந்த டிசிபி பூட்​டப்​பட்​டிருக்​கும். அதைத் திறக்க கேடிஎம்​ (கீ டெலிவரி மெஸேஜ்) என்ற டிஜிட்​டல் சாவி தேவைப்​படும். இதை மொபைல் போனுக்கு வரும் ஓடிபி போலப் புரிந்து கொள்​ளலாம்.

ஓடிபி இல்​லாமல் ஒரு செயலியைத் திறக்க முடி​யாது என்​பது போல, கேடிஎம் (KDM) இல்​லாமல் திரைப்​படத்​தை​யும் திரை​யிட முடி​யாது. மேலும், அந்த கேடிஎம் ஒரு குறிப்​பிட்ட திரையரங்​குக்கும், குறிப்​பிட்ட தேதிக்​கும், குறிப்​பிட்ட நேரத்​துக்கும் மட்​டுமே வேலை செய்​யும். இதனால் திரைப்​படங்​கள் சட்​ட​விரோத​மாக நகலெடுக்​கப்​படு​வது பெரு​மள​வில் தடுக்​கப்​படு​கிறது.

ஐமேக்ஸ் மற்​றும் பல்​வேறு வெளி​யீட்டு வடிவங்​கள்: தற்​காலத்​தில் ஒரு திரைப்படம் ஒரே வடிவத்​தில் மட்​டுமே வெளி​யிடப்​படு​வதில்லை. சாதாரண டிஜிட்​டல் திரையரங்​கு​கள், ஐமேக்ஸ் திரைகள், ஓடிடி தளங்​கள், தொலைக்​காட்​சிகள் என ஒவ்வொரு தளத்​துக்கும் தனித்​தனி மாஸ்​டர்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. பெரிய ஐமேக்ஸ் திரை​யில் கூட படத்​தின் தரம் குறை​யாமல் இருக்​கத் தேவை​யான மாற்​றங்​களும் செய்​யப்​படு​கின்​றன.

டிஜிட்​டல் மாஸ்​டரிங் என்​பது ஒரு திரைப்​படத்​தின் இறுதி அதி​காரப்​பூர்வ வடிவத்தை உரு​வாக்​கும் செயல்​முறை. டிஜிட்​டல் ரீமாஸ்​டரிங் என்​பது ஏற்கெனவே வெளி​யான ஒரு திரைப்​படத்​தை, அதன் அசலான கலைத்​தன்​மை​யைப் பாது​காத்​த​படி, இன்​றைய தலை​முறை​யின் திரையரங்கு​கள் மற்​றும் தொழில்​நுட்​பத்​திற்​கேற்ப மீண்​டும் உயிர்ப்​பிக்​கும் பணி​யாகும்.

அதனால்​தான் நாயகன், பாட்​ஷா, ஷோலே, தி காட்ஃ​பாதர் போன்ற காலத்​தால் அழி​யாத திரைப்​படங்​கள், பல ஆண்​டு​களுக்​குப் பிறகும் புதிய பொலிவுடன் திரையரங்​கு​களில் மீண்​டும் ஒளிர்​கின்​றன. டிஜிட்​டல் ரீமாஸ்​டரிங் என்​பது ஒரு தலை​முறை​யின் கலைப் பொக்​கிஷத்தை தரம் குறை​யாமல்​, உணர்​வு மாறாமல்​ பாது​காத்​து அடுத்​த தலை​முறைக்​கு கொண்​டுசெல்​லும்​ மிக முக்​கிய​மான தொழில்​நுட்​பமாகும்​.

(புதன்​தோறும்​ ஒளி​காட்​டுவோம்​)

SCROLL FOR NEXT