தமிழ் சினிமா

கட்-அவே ஷாட்டுகள்: காட்டாத காட்சிகளின் கலை | ஒளி என்பது வெளிச்சமல்ல 25

சி.ஜெ.ராஜ்குமார்

சினிமா என்​பது, திரை​யில் எதைக் காட்​டு​கிறோம் என்​ப​தோடு எதை காட்​டா​மல் விலக்குகிறோம் என்​ப​தா​லும் அதன் மாயம் உரு​வாகிறது. அந்த ‘வில​கல்’ கலை​தான் கட்​-அவே ஷாட்.

ஒரு முதன்​மைக் காட்​சி​யில் இருந்து (சப்​ஜெக்ட் ஏ) சட்​டென்று வேறொரு விவரத்​துக்​குச் (சப்​ஜெக்ட் பி) சென்​று, மீண்​டும் பழைய காட்​சிக்​குத் திரும்​புவது – இந்த இடைச்​செரு​கல்என்ற கதை சொல்​லல் மூலம் தாளத்​தைக் கட்​டுப்​படுத்​தும், பார்​வை​யாளரின்உளவியலை வழிநடத்​தும், எதிர்​பார்ப்பை உரு​வாக்​கும் நுட்​ப​மான உத்​தி.

திசைத்​திருப்​பலின் தத்​து​வம்: எதிர்​பார்ப்​பின் கட்டமைப்பு

ஒரு கதா​பாத்​திரம் கதவைத் திறக்க முனைகிறது. பார்​வை​யாளர் அவன் முகத்​தில் என்ன இருக்​கிறது என்று எதிர்​பார்க்​கிறார். அந்த நேரத்​தில் இயக்​குநர் அவனது முகத்​தைக் காட்​டா​மல், சுவரில் தொங்​கும் கடி​காரத்​தின் நொடி​காட்டி ஓடு​வதைக் காட்​டு​கிறார்.

அல்​லது ஒரு பூனை திடீரென தலை​யைத் திருப்​புவது. அந்​தச் சிறிய வில​கல் – ஒரு நொடி மட்​டுமே நீடித்​தா​லும் – இதயத் துடிப்பை இரட்​டிப்​பாக்​கும். இது ஒரு ‘தாமதக் கலை​யியல் (ஆர்ட் ஆஃப் டிலே).

          

திரை​யில் நிகழும் செயலை நேரடி​யாகக் காட்​டா​மல்,அதற்கு முன் ஓர் உளவியல் இடைவெளியை உரு​வாக்​கு​வது. இந்த இடைவெளியே சஸ்​பென்​ஸின் உயிர். கட்​-அவே ஷாட் இங்கு பார்​வை​யாளரின் மூச்​சைக் கட்​டுப்​படுத்​தும் மறை​முக இயக்​குநர்.

மிஷ்கின் பாணி: முகங்​களைக் காட்​டா​மல் உணர்ச்​சிகளைச் சொல்​லுதல்

தமிழ் சினி​மா​வில் கட்​-அவே ஷாட்​டு​களைத் தனித்​து​வ​மாகப் பயன்​படுத்​திய இயக்​குநர்​களில் முக்​கிய​மானவர் மிஷ்கின். அவரது படங்​களில், முகங்​களைக் காட்​டா​மல் உணர்ச்​சிகளைச் சொல்​லும் முயற்சி தெளி​வாகத் தெரி​யும்.

‘பி​சாசு’ மற்​றும் ‘யுத்​தம் செய்’ திரைப்​படங்​களில், வன்​முறைக் காட்​சிகளின் உச்​சத்​தில் கூட அவர் நேரடி அடிதடியை காட்​டு​வ​தில்​லை. பதிலாக, உடைந்த கண்​ணாடி, தரை​யில் கிடக்​கும் குழந்​தை​யின் பொம்​மை, சுவரில் நீளும் நிழல் – இவையே கட்​-அவே-க்​களாகக் காட்​டப்​படும்.

இது ஒரு நுண்​ணிய அறிகுறி: ‘ஒளி என்​பது வெறும் வெளிச்​சமல்​ல.’ நிழல், அமை​தி, பொருளின் தனிமை – இவை சேர்ந்து ஓர் உளவியல் பரப்பை உரு​வாக்​கு​கின்​றன. பார்​வை​யாளர் அந்த இடைவெளி​யில் தன் கற்​பனை​யால் காட்​சியை நிரப்​பிக்​கொள்​கிறார். இங்கே இயக்​குநர் காட்​டு​வது குறைவு; உணர வைப்​பது அதி​கம்.

காட்​டா​மல் காட்​டும் வித்தை

பிரம்​மாண்​ட​மான வெடிப்பு காட்​சி, கார் விபத்துஅல்​லது பெரும் கட்​டடம் சரிவது ஆகிய​வற்றை நேரடி​யாகப் படமாக்​கு​வது பொருட்​செல​வுமிக்க தொழில்​நுட்ப முயற்​சி. ஆனால் திறமை​யான இயக்​குநருக்கு கற்​பனையே மிகச் சிறந்த வி.எஃப்​.எக்ஸ் என்​பது தெரி​யும்.

வெடிப்பு நிகழும் நொடி​யில், கேமரா நேரடி​யாக தீப்​பொறிகளைப் பார்க்​காமல், வானில் பயத்​தில் பறக்​கும் பறவை​களைப் பார்க்​கலாம். அல்​லது ஜன்​னல் கண்​ணாடி அதிர்​வில் உடைவதை மட்​டும் காட்​டலாம்.

அடுத்த ஷாட்​டில் புகைமூட்​டம், சிதறிய சாம்​பல் இவற்​றைக் காட்​டு​வதன் மூலம் பார்​வை​யாளரின் மனதில் முழு வெடிப்​பும் தானாக உரு​வாகி​விடும்.

இந்த உத்​தி, செல​வைக் கட்​டுப்​படுத்​து​வதோடு மட்​டுமல்ல, நம்​பகத்​தன்​மை​யை​யும் அதி​கரிக்​கிறது. ஏனெனில் மனக்​காட்சி எப்​போதும் திரைக்​காட்​சியை விடப் பெரிது.

திருப்​பங்​களின் ரகசி​யம்: தி வில்​லேஜ்

ஹாலிவுட்​டில் கட்​-அவே ஷாட் ஒரு ‘மறைப்​புக் கரு​வி’ ஆக பயன்​படுத்​தப்​பட்ட சிறந்த உதா​ரணம் ‘தி வில்​லேஜ்’ திரைப்​படம். இயக்​குநர் மனோஜ் நைட் சியாமளன் சிறிய விவரங்​களைக் கட்​-அவே-​யாகச் சேர்த்​து, உண்​மையை மறைத்து வைத்​தார்.

சிவப்பு நிறக் கதவின் கைப்​பிடி, குளிரில் மூச்சு, பனி​யாக மாறு​வது, சுவரில் தொங்​கும் ஒரு ஓவி​யம், ஆகியவை அப்​போது சிறிய விஷ​யங்​களாகத் தோன்​றி​னாலும், இறு​தித் திருப்​பத்​தின் போது அவை முழுக் கதை​யின் அஸ்​தி​வார​மாக மாறுகின்​றன.

கட்​-அவே இங்கு ஒரு திசைத்​திருப்​பல் அல்ல; அது ஒரு மாயத் திரை. பார்​வை​யாளர் உண்​மை​யைப் பார்த்​துக்​கொண்​டே, ஆனால் அதை உணராமல் இருக்​கச் செய்​யும் உத்​தி.

தாளம் மற்​றும் நேர அளவு: சிறியதும் நீண்​டதும்

கட்​-அவே ஷாட் எவ்​வளவு நேரம் நீடிக்​கிறது என்​பதும் மிக முக்​கி​யம். சிறிய கட்​-அவே (1–3 விநாடிகள்): வேக​மான ஆக் ஷன் அல்​லது டென்​ஷன் காட்​சிகளில் பயன்​படுத்​தப்​படும். இவை ‘பல்​ஸ்’போல செயல்​படும். துடிப்பு வேக​மாகும். பார்​வை​யாள​ருக்கு சிந்​திக்க நேரமில்​லை; உணர்ச்​சியே முதன்​மை.

நீண்ட கட்​-அவே (5 விநாடிகளுக்கு மேல்):

உளவியல் காட்​சிகளில் இவை ஆழத்தை உரு​வாக்​கும். ஒரு காலி​யான அறை, அதன் ஒரு மூலை​யில் தொங்​கும் பழைய புகைப்​படம், காற்​றில் அசை​யும் திரை ஆகிய காட்​சிகளைப் பார்த்​துக்​கொண்​டிருக்​கும் பார்​வை​யாளரை, இந்த நீண்ட அமைதி நிறுத்தி சிந்​திக்க வைக்​கிறது.

இங்கு தாளம் மெது​வாகிறது; உணர்ச்சி கனமாகிறது. ஒளிப்​ப​தி​வாள​ருக்கு இங்கு மிக முக்​கிய​மானது ‘கி​ராஃபிக் வெயிட்’ – காட்​சி​யின் காட்​சி​யியல் எடை. முதன்​மைக் காட்சி சோக​மாக இருந்​தால், கட்​-அவே​யும் அதே நிறத் தன்​மை​யிலும் நிழல் அமைப்​பிலும் இருக்க வேண்​டும். இல்​லை​யெனில் காட்​சி​யின் ரிதம் முறி​யும்.

காட்​டாத காட்​சிகளின் கலை

சினிமா என்​பது காட்​சிகளின் வரிசை மற்​றும் உணர்ச்​சிகளின் ஒழுங்​கு. அந்த ஒழுங்​கைக் கட்​டுப்​படுத்​தும் மவுனக் கருவிதான் கட்​-அவே ஷாட். அது பார்​வை​யாளரை ஒரு நொடி திசைத் திருப்​பி, அடுத்த நொடி​யில் அதிச​யத்தை உரு​வாக்​கும்.

ஒரு மாயாஜாலக்​காரன் கைக்​குட்​டையை அசைத்து கவனத்தை மாற்​று​வது போல, இயக்​குநர் கட்​-அவே ஷாட்​டைப் பயன்​படுத்​துகிறார். ஆனால் அந்​தக் கைக்​குட்​டை​யின் பின்​னால் இருக்​கும் அறி​வியல் – தாளம், ஒளி, நிழல், உளவியல் – ஆகிய​வையே உண்​மை​யான கலை. அந்த நொடி​யில் தான் சினி​மா​வின் மாயம் உயிர்ப்​பெடுக்​கிறது.

கட்​-அவே மற்​றும் இன்​சர்ட் ஷாட்: ஒரு நுட்​ப​மான வேறு​பாடு

திரைக்​கதை மற்​றும் படத்​தொகுப்​பில் ‘கட்​-அவே’ மற்​றும் ‘இன்​சர்ட்’ ஷாட்​கள் பெரும்​பாலும் ஒன்​றாகக் கருதப்​பட்​டாலும், அவற்​றுக்​கிடையே தெளி​வான வேறு​பாடு உண்​டு. இன்​சர்ட் ஷாட் என்​பது அதே சூழலுக்​குள் (சேம் சீன்) இருக்​கும் ஒரு குறிப்​பிட்ட விவரத்​தைக் காட்​டு​வது; உதா​ரண​மாக, ஒரு கதா​பாத்​திரம் செய்தி கேட்​கும்​போது அவரது முக​பாவனையைக் காட்​டு​வது அல்​லது போனில் வரும் தகவலை க்ளோஸ்​-அப்​பில் காட்​டு​வது.

ஆனால், கட்​-அவே ஷாட் என்​பது அந்​தச் சூழலை விட்டு வெளி​யேறி (லீவ்ஸ் த சீன்), வேறொரு காலத்​துக்கோ அல்​லது இடத்​துக்கோ பார்​வை​யாளரை அழைத்​துச் செல்​வது. பொது​வாக, இன்​சர்ட் ஷாட்​கள் பெரும்​பாலும் மிக நெருக்​க​மான பிம்​பங்​களாகவோ (க்​ளோஸ்- அப்) அல்​லது மைக்ரோ விவரங்​களாகவோ மட்​டுமேஅமை​யும்.

ஆனால், கட்​-அவே ஷாட்​கள் அப்​படிப்​பட்ட வரம்​பு​களுக்கு உட்​பட்​டவை அல்ல. அவை ஒரு சிறிய பொருள் முதல் ஒரு பிரம்​மாண்​ட​மான நிலப்​பரப்பு (வைட் ஷாட்) வரை எந்​த வொரு காட்சி அளவிலும் (ஷாட் வால்​யூம்) அமைய​லாம்.

இன்​சர்ட் என்​பது காட்​சி​யின் ஒரு பகு​தி​யைத் துல்​லிய​மாகப் பார்ப்​பது; கட்​-அவே என்​பது காட்​சி​யின் போக்கை மாற்​றியமைக்​கும் சுதந்​திர​மான நகர்​வு. சுருக்​க​மாகச்​ சொன்​னால், இன்​சர்ட்​ ஷாட்​ காட்​சி​யின் ஆழத்​தைக்​ கூட்​டு​கிறது; கட்​-அவே ஷாட்​ கதை​யின்​ எல்​லை​யை விரிவுபடுத்​துகிறது.

- cjrdop@gmail.com

(புதன்தோறும் ஒளி காட்டுவோம்)

SCROLL FOR NEXT