தமிழ் சினிமா

நடன இயக்​குநர் – அசை​வின் அழகியல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 49

சி.ஜெ.ராஜ்குமார்

திரைப்​ படத்​தில் இடம்​பெறும் பாடல் காட்சி பல நேரங்​களில் கதையை முன்​னோக்கி நகர்த்​துகிறது; சில நேரங்​களில் கதா​பாத்​திரங்​களின் மனநிலை​யை, காதலை, கொண்​டாட்​டத்​தை, வேதனையை, வார்த்​தைகளைக் காட்​டிலும் வலிமை​யாகச் சொல்​கிறது.

இதை உரு​வாக்​கும் 2 முக்​கிய​மான கலைஞர்​கள்,நடன இயக்​குநர் மற்​றும் ஒளிப்​ப​தி​வாளர். ஒரு​வர் இசைக்கு உடல்​மொழியை உரு​வாக்​கு​கிறார்; மற்​றொரு​வர் அதை திரை​யில் உயிர்ப்​பிக்​கிறார். ஒரு​வர் இல்​லாமல் மற்​றொரு​வரின் பணி முழுமை பெறாது. சிறந்த பாடல் காட்​சிகள் எப்​போதும் இந்த இரு​வரின் ஆழமான புரிதலின் விளை​வாகவே உரு​வாகின்​றன.

பாடலின் சூழல்: திரைக்​கதை​யில் ஒரு பாடல் எதற்​காக வரு​கிறது என்​ப​தைப் புரிந்து கொள்​வதே படைப்​பாக்​கத்​தின் முதல்படி. இசையமைப்​புக்​குப் பிறகு, நடன இயக்​குநர் திரைப்பட இயக்​குநரிடம் கேட்​கும் முதல் கேள்​வி: “இந்​தப் பாடலின் சூழல் என்​ன?” அது​தான் நடன அமைப்​பை​யும், காட்​சி​யமைப்​பை​யும் தீர்​மானிக்​கிறது. கதா​நாயக​னின் அறி​முகப் பாடலுக்​குப் பயன் படுத்​தப்​படும் கேமரா கோணங்​களும் நடன அசைவு​களும், சோகப் பாடல் அல்​லது மென்​மை​யான காதல் பாடல்​களுக்கு முற்​றி​லும் மாறு​பட்​ட​தாக இருக்​கும்.

பாடல் வகைகளும் காட்சி அணுகு​முறை​யும்: பாடலின் தன்​மை​யைப் பொறுத்தே நடன அமைப்​பும், ஒளிப்​பதிவாளரின் கேமரா மொழி​யும் மாறுகின்​றன.

நடனப் பாடல்​கள் முழுக்க நடனத்தை மைய​மாகக் கொண்​ட​வை. காதல் பாடல்​களில் நடனத்​தை​விட உணர்ச்​சிக்கே முதன்மை முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​படு​கிறது. கேமரா மென்​மை​யாக​வும், நளின​மாக​வும் நகரும். குளோஸ்​-அப், மீடி​யம் ஷாட் மற்​றும் பரந்த நிலப்​பரப்​புக் காட்​சிகளின் மூலம் காதலின் ஆழமான உணர்​வு​களை ஒளிப்​ப​தி​வாளர் வெளிப்​படுத்​து​வார்.

காட்​சித்​தொகுப்​புப் பாடல்​கள் (Montage Songs): இவ்​வகைமை​யில் முறை​யான நடன அசைவு​கள் இருக்​காது. கதை​யின் காலப்​போக்​கு, வாழ்க்கை மாற்​றம், பயணம், வெற்​றி, தோல்வி போன்​றவை சிறு காட்​சிகளாகத் தொகுக்​கப்​பட்டு எடிட்டிங், ஒளிப்​ப​திவு, இசை ஆகியவை இணைந்து உணர்​வு​களை உரு​வாக்​கு​கிறது.

தாள நயமும் ‘பார் கணக்​கு​களும்’: பதிவு செய்​யப்​பட்ட பாடலை பலமுறைகேட்டு அதன் ரிதம், டெம்​போ, பீட், எமோஷன் மற்​றும் பாடலின் வரி​களை ஆழமாக ஆராய்​வார் நடன இயக்​குநர். இவர்​கள் இசையை, 2, 4, 8 ஆகிய எண்​ணிக்​கைகளைக் கொண்ட அடிப்​படைத் தாளக் கட்​டமைப்பை (Bar Counts) முதன்​மைத் தளமாகக் கொள்​கின்​றனர்.

இந்த 8 எண்​ணிக்​கைகளே ஓர் அடிப்​படை இசை அலகு(Bar). ஒரு முழுப் பாடல் 16, 32, அல்​லது 64 பார் கணக்​கு​களாகப் பிரிக்​கப்பட்​டு, ஒவ்​வொரு பகு​திக்​கும் தனித்​தனி உடலசைவு​கள் வடிவ​மைக்​கப்​படுகின்​றன. படப்​பிடிப்​பின்​போது செட்​டில் இந்த மொழியே ஒளிப்​ப​திவுக் குழு​வுக்​கும் பயன்​படுத்​தப்​படு​கிறது:

“12-வது பாரில் கிரேன் உயரும்​...”

“24-வது பாரில் ஹீரோ என்ட்ரி ”

“40-வது பாரில் ஸ்மோக் எஃபெக்ட் ” எனக் கணக்​கிடு​வதன் மூலம் இசை, நடனம், ஒளிப்​ப​திவு, மற்​றும் எடிட்​டிங் அனைத்​தும் ஒரே சீரான தாளத்​தில் இயங்​கு​கின்றன.

பல துறை​களின் ஒருங்​கிணைப்பு: ஒரு பிரம்​மாண்​ட​மான பாடல் காட்​சி​யில் நடன இயக்​குநர், ஒளிப்​ப​தி​வாளர், ஆடை வடிவ​மைப்​பாளர், கலை இயக்​குநர், மேக்​கப் குழு மற்​றும் வி.எஃப்​.எக்ஸ் சூப்​பர்​வைசர் ஆகியோர் இணைந்து செயல்​படு​கின்​றனர்.

ஒளிப்​ப​தி​வாளரின் பங்கு மற்​றும் லென்ஸ் தேர்​வு​கள்: ஒரு சிறந்த நடனத்தை திரை​யில் எவ்​வாறு காட்ட வேண்​டும் என்​பதை ஒளிப்​ப​தி​வாளரே தீர்​மானிக்​கிறார்.

வைடு லென்​ஸ்: 21 எம்​எம் முதல் 35 எம்​எம் வரையி​லான லென்​ஸுகள் இடவெளி ஆழத்தை அதி​கரிக்​கும். குதித்​தல், சுழலுதல் போன்​றவை மிக​வும் வேக​மாக​வும் பிரம்​மாண்​ட​மாக​வும் காட்​சி​யளிக்​கும்.

டெலி​போட்டோ லென்​ஸ்: 85 எம்​எம் முதல் 135எம்​எம்+ வரையி​லான லென்​​ஸுகள் பின்​னணி​யை​யும் முன்​னணி​யை​யும் ஒன்​றுக்​கொன்று நெருக்​க​மாகக் காட்​டும். குழு நடனங்​களில் அனைத்துக் கலைஞர்​களும் சீரான வரிசை​யில் இருப்​பது போன்ற அடர்த்​தி​யான தோற்​றத்தை உரு​வாக்​கும்.

கேம​ரா​வும் ஒரு நடனக் கலைஞரே: சிறந்த பாடல் காட்​சிகளில் கேமரா, நடனக் கலைஞ​ராகவே மாறுகிறது.

ஸ்டெடிகேம்: நடனக் கலைஞர்​களோடு சேர்ந்து 360 டிகிரி​யில் நகர்ந்​து, பார்​வை​யாள​ரும் அந்​தக் கூட்​டத்​துக்​குள் இருப்​பது போன்ற நேரடி உணர்​வைத் தரும்.

டாலி: கலைஞர்​களின் நகர்​வுக்கு இணை​யாக ட்ராக்​கில் நகர்ந்​து, அசைவு​களின் தொடர்ச்​சி​யை​யும் நளினத்​தை​யும் அழகாகக் காட்​டும்.

டெக்னோகிரேன்: மேலிருந்து கீழ் நோக்கி அல்​லது கோணங்​களை மாற்றி நகர்ந்​து, பெரிய அளவி​லான குழு வடிவங்​களை உயரத்​திலிருந்து காட்​டும்.

ஹேண்ட்​ஹெல்ட்: தெரு நடனம், ஹிப்​-ஹாப் காட்​சிகளில் கலைஞர்​களைப் பின் தொடர்ந்​து, காட்​சி​யின் இயல்​பான சுறுசுறுப்​பை​யும் வேகத்​தை​யும் அதி​கரிக்​கும்.

அதிநவீன தொழில்​நுட்​பம்

எஃப்​.பி.​வி.ட்​ரோன்: நடனக் கலைஞர்​களுக்கு மிக அரு​கில், மிக வேக​மாகப் பறந்து சென்று வழக்​கத்​துக்கு மாறான சுழல் கோணங்​களை கொடுக்​கிறது.

மோஷன் கன்ட்​ரோல் ரிக்: ஒரே கேமரா நகர்வை மில்​லிமீட்​டர் பிச​காமல் பலமுறை திரும்​பச் செய்​து, ஒரே கலைஞர் பல வடிவங்​களில் வந்து நடன​மாடும் காட்​சிகளைத் துல்​லிய​மாகப் படமாக்க உதவு​கிறது.

எல்​.இ.டி வால்​யூம் / விர்​சுவல் புரொடக் ஷன்: வெளி​நாடு​களுக்​குச் செல்​லாமலே, 360 டிகிரி எல்​இடி திரைகளின் முன்​னால் தத்​ரூப​மான பின்​னணி​யில், ஒளியமைப்​பை​யும் இசையை​யும் ஒருங்​கிணைத்து படப்​பிடிப்பை நடத்த இது பயன்​படு​கிறது.

படப்​பிடிப்​புக்கு முந்​தைய ஒத்​திகை: நடன இயக்​குநர் கண்​ணாடி ஒத்​திகை அரங்​கில் (Mirror Studio) நடனத்தை வடிவ​மைப்​பார். ஆனால் கேமரா அதை வேறு கோணத்​தில் பார்க்​கும். படப்​பிடிப்​புக்கு முன்பே நடன இயக்​குநரும் ஒளிப்​ப​தி​வாள​ரும் இணைந்​து, தரைக்​கோடு குறி​யீடு (Floor Marking), கேமரா நகர்​வுத் திட்​ட​மிடல் (Camera Blocking),லென்ஸ் சோதனை (Lens Test), காட்​சிப் பிரிப்பு (Shot Division) ஆகிய​வற்​றைத் திட்​ட​மிடு​வார்​கள். இதில் ஸ்டெடிகேம் ஆபரேட்​டர் மற்​றும் கிரேன் ஆபரேட்​டருக்​குத் தனி​யாக ‘கேமரா ஒத்​தி​கை’ நடத்​தப்​படும்.

எடிட்​டரின் பங்கு: ஒரு பாடல் முழு​மை​யாக உயிர் பெறு​வது எடிட்​டிங் டேபிளில்​தான். நடன இயக்​குநர் பார் கணக்​கு​களில் வடிவ​மைத்த அசைவு​களும், ஒளிப்​ப​தி​வாளர் படமாக்​கிய கேமரா நகர்​வு​களும், இசை​யின் பீட்​டுக்கு ஏற்ப கட் செய்​யப்​படும்​போது மட்​டுமே பாடலின் முழுத் தாக்​க​மும் உரு​வாகிறது. சரி​யான கணக்​கில் செய்​யப்​படும் ஒரு கட், நடனத்​தின் வேகத்​தை​யும் உணர்ச்​சி​யை​யும் பல மடங்கு உயர்த்​தும்.

மறக்க முடி​யாத திரைச் சான்​றுகள்:

லா லா லேண்ட்: ஒளிப்​ப​தி​வாளர் லைனஸ் சேன்ட்க்​ரென் (Linus Sandgren), நடன இயக்​குநர் மேண்டி மூர் (Mandy Moore) இணை​யில் உரு​வான ‘Another Day of Sun’ மற்​றும் ‘A Lovely Night’ ஆகிய பாடல்​களில் கேம​ரா​வும் நடன​மும் ஒரே மூச்​சில் தடை​யின்றி இயங்​கு​வதைக் காணலாம்.

ஆர்​.ஆர்​.ஆர் (நாட்டு நாட்​டு): ஒளிப்​ப​தி​வாளர் கே.கே.செந்​தில்குமார், நடன இயக்​குநர் பிரேம் ரக் ஷித் ஆகியோரின் ஒருங்​கிணைப்பில் உரு​வான ஆஸ்கர் வென்ற இப்​பாடலில், வேகமான காலடி அசைவு​களும் அதற்​கேற்ப நகர்ந்த கேம​ரா​வும் மாபெரும் வரவேற்பைப் பெற்​றன. ஒரு பாடல் காலத்​தைக் கடந்து மக்​களின் நினை​வில் வாழ்​வதற்​குக் காரணம் இசையைக் காட்​சி​யாக மாற்​றிய நடன இயக்​குநரும், அந்​தக் காட்​சிக்கு உயிர் கொடுத்த ஒளிப்​ப​தி​வாள​ரும்​தான்.

(புதன்​தோறும் ஒளி​காட்​டுவோம்​)

SCROLL FOR NEXT