ஒளி, நிழல், வண்ணம், உணர்வு ஆகிய அனைத்தும் ஒன்றிணையும் கலையே திரைப்படம். இயக்குநர் உருவாக்கும் கதையை ஒளிப்பதிவாளர் ஒளியின் மூலம் காட்சிகளாக மாற்றுகிறார். அந்தக் காட்சிகளை ஒரே உலகமாகவும், ஒரே உணர்வாகவும், பார்வையாளர்களின் மனதில் பதியும் வகையில் மாற்றுபவரே கலரிஸ்ட். அவர் காட்சி மொழிக் கலைஞர் (Visual Storyteller).
திரைப்படத்தின் உணர்ச்சி, காலப்பின்னணி, கதாபாத்திரங்களின் மனநிலை மற்றும் இயக்குநரின் பார்வை ஆகியவற்றை வண்ணங்களின் மூலம் வெளிப்படுத்தும் முக்கியமான படைப்பாளி. ஒரு திரைப்படத்தின் இறுதித் தோற்றம் என்பது இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலரிஸ்ட் ஆகிய மூவரின் கூட்டுப் படைப்பாகவே உருவாகிறது.
ஃபிலிம் லேபிலிருந்து டிஜிட்டல் இன்டர்மீடியேட் வரை டிஜிட்டலுக்கு முன்பு, திரைப்படங்கள் ஃபிலிம் சுருளில் பதிவு செய்யப்பட்டன. படப்பிடிப்பு முடிந்ததும் அவை ஃபிலிம் லேபிற்கு அனுப்பப்பட்டு கலர் டைமிங் எனப்படும் செயல்முறையின் மூலம் நிறச்சமநிலை, பிரகாசம் (Exposure), அடர்த்தி (Density) ஆகியவை சரிசெய்யப்பட்டன.
இதன் முக்கிய நோக்கம் ‘விஷுவல் கன்சிஸ்டன்சி’. ஒரு திரைப்படம் பல நாட்கள், பல மாதங்கள், வெவ்வேறு நேரங்களிலும் வேறுபட்ட காலநிலைகளிலும் படமாக்கப்படுகிறது. காலை, மதியம், மாலை, மேகமூட்டம், வெயில் என ஒளியின் தன்மை மாறினாலும், திரையில் பார்ப்பவருக்கு அனைத்து காட்சிகளும் தொடர்ச்சியாக நடந்தது போலத் தோன்ற வேண்டும். அந்த ஒற்றுமையை உருவாக்குவதே கலர் டைமிங்.
அந்தக் காலத்தில், முழு ஃபிரேமின் நிறத்தை மட்டுமே மாற்ற முடிந்தது. ஆனால் டிஜிட்டல் இன்டர்மீடியேட் (DI) வந்த பிறகு ஒரு ஃபிரேமிற்குள் இருக்கும் நடிகரின் முகம், வானம், பின்னணி அல்லது குறிப்பிட்ட பொருளை மட்டும் தனியாகத் தேர்வு செய்து மாற்ற முடிந்தது. இதனால் கலரிங் என்பது ஒரு தொழில்நுட்பச் செயலாக இல்லாமல், காட்சியை மறுவடிவமைக்கும் கலை வடிவமாக மாறியது.
இந்திய சினிமாவில் டிஐ தாக்கம்: இந்திய சினிமாவில் டிஐ தொழில்நுட்பம் 2000- களில் அறிமுகமானது. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ப்ளாக்’ (2005) திரைப்படம் இந்திய அளவில் டிஜிட்டல் கலர் கிரேடிங்கின் கலைநயத்தை வெளிப்படுத்திய முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது.
தமிழில் ‘விருமாண்டி’ (2004) குறிப்பிடத்தக்க மைல்கல். ஒரே சம்பவத்தை 2 மனிதர்களின் பார்வையில் சொல்லும் அந்தப் படத்தில், 2 வெவ்வேறு கலர் பேலட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் வண்ணங்களும் கதை சொல்லும் மொழி என்பதை அந்தப் படம் நிரூபித்தது.
கலரிஸ்டின் பணி: சிறந்த திரைப்படங்களில் கலரிஸ்ட் முன் தயாரிப்பு நிலையிலேயே இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளருடன் இணைந்து பணியாற்றத் தொடங்குகிறார். படத்தின் மனநிலை, அது இயற்கையான தோற்றமா அல்லது ஸ்டைலிஷான தோற்றமா? எந்த வண்ணங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முடிவுகள் ஆரம்பத்திலேயே எடுக்கப் படுகின்றன. பிறகு ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர், மேக்கப் குழு, விஎஃப்எக்ஸ் குழு ஆகியோருடன் இணைந்து செட் நிறங்கள், உடை வண்ணங்கள், தோல் நிறங்கள் போன்றவை கதைக்கேற்ப திட்டமிடப்படுகின்றன.
கேமரா, லென்ஸ் மற்றும் எல்யுடி: படப்பிடிப்புக்கு முன் பல்வேறு கேமராக்கள், லென்ஸுகள், விளக்குகள் சோதனை செய்யப்படுகின்றன. ஆரி, ரெட், சோனி போன்ற கேமராக்கள் ஒவ்வொன்றும் நிறங்களை வெவ்வேறு விதமாகப் பதிவு செய்கின்றன. அதேபோல் Cooke, Zeiss அல்லது Vintage லென்ஸ்களும் தனித்துவமான காட்சி மொழியைக் கொண்டுள்ளன.
இந்தச் சோதனைகளின் அடிப்படையில் கலரிஸ்ட் ஒரு எல்யுடி- ஐ (Look Up Table) உருவாக்குவார். இதன் மூலம் Log-ஆக பதிவு செய்யப்படும் காட்சிகள், இறுதியில் எப்படித் தோன்றும் என்பதை படப்பிடிப்புத் தளத்திலேயே இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் பார்க்க முடியும்.
டிஐ மற்றும் கலர் கிரேடிங்: படம் எடிட் செய்யப்பட்ட பிறகு அது டிஐ ஸ்டூடியோவுக்கு வருகிறது. அங்கு முதலில் ஒவ்வொரு காட்சியின் எக்ஸ்போசர், கான்ட்ராஸ்ட், ஒயிட் பேலன்ஸ் ஆகியவை சரிசெய்யப்படுகின்றன. அதன்பிறகு கதாபாத்திரத்தின் முகம், பின்னணி, உடை போன்ற குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தனித்தனியாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
சில காட்சிகளில் முகத்துக்கு மட்டும் மென்மையான ஒளி சேர்க்கப்படும். சில காட்சிகளில் பின்னணி இருண்டதாக மாற்றப்படும். சில நேரங்களில் பிலிம் கிரைன் அல்லது விண்டேஜ் லுக்போன்ற காட்சி அமைப்புகளும் சேர்க்கப்படும். இவை கதையின் உணர்வை வலுப்படுத்துவதற்காகவே செய்யப்படுகின்றன.
வண்ணங்களின் உளவியல்: மனித மனதில் மிகப்பெரிய தாக்கத்தை வண்ணங்கள் ஏற்படுத்துகின்றன. வார்ன் டோன்ஸ் காதல், குடும்பம், நினைவுகள் மற்றும் கிராமத்து வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. கூல் டோன்ஸ் தனிமை, திகில், மர்மம் மற்றும் நகர வாழ்வை உணர்த்துகின்றன. Desaturated நிறங்கள் யதார்த்தமான மற்றும் தீவிரமான கதைகளுக்கு ஏற்றதாக அமைகின்றன. எனவே கலரிஸ்ட் பார்வையாளர்களின் உணர்ச்சிகளுக்கும் சேர்த்தே வண்ணம் தீட்டுகிறார்.
பல்வேறு திரைகளுக்கான இறுதி வடிவம்: இன்றைய படங்கள் ஓடிடி, தொலைக்காட்சி, மொபைல், ஐமேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வெளியாகின்றன. ஒவ்வொரு தளத்துக்கும் தனித்தனித் தொழில்நுட்பத் தரநிலைகள் உள்ளன. ஒவ்வொரு திரையிலும் வண்ணங்கள், பிரகாசம் மற்றும் காட்சியின் தரம் ஒரே மாதிரியாகத் தோன்ற வேண்டும் என்பதையும் கலரிஸ்ட் உறுதி செய்கிறார்.
இறுதி டெலிவரபிள்ஸ் (Deliverables): கிரேடிங் முடிந்த பிறகு திரையரங்குகளுக்கான டிசிபி (Digital Cinema Package) உருவாக்கப்படுகிறது. ஓடிடி தளங்களுக்காக ProRes, IMF, EXR போன்ற உயர்தர மாஸ்டர் ஃபைல்கள் தயாரிக்கப் படுகின்றன. இறுதியாக குவாலிட்டி கன்ட்ரோல் (QC) மூலம் ஒவ்வொரு ஃபிரேமும் பரிசோதிக்கப்படுகிறது. Dead Pixels, Flicker, Color Shift, Compression Errors போன்றவை உள்ளனவா என்பதை ஆய்வு செய்த பிறகே படம் வெளியீட்டுக்கு அனுப்பப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் உருவாக்கிய உலகுக்கு இறுதி வண்ணத்தையும், உணர்ச்சியையும், ஆழத்தையும் வழங்குபவர் கலரிஸ்ட். அவர் ஒரு திரைப்படத்தின் காட்சித் தொடர்ச்சியைப் பாதுகாத்து இயக்குநரின் பார்வையை முழுமைப்படுத்துகிறார்; ஒளிப்பதிவாளரின் உழைப்பை மேலும் மெருகேற்றுகிறார்; இறுதியில் எந்த திரையில், எந்த வடிவத்தில் படம் பார்க்கப்பட்டாலும் அதன் காட்சிமொழி ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறார்.
(புதன்தோறும் ஒளிகாட்டுவோம்)