பழம்பெரும் நடிகை செளகார் ஜானகியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.
வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த செளகார் ஜானகி இன்று பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சரத்குமார்: தமிழ்த் திரையுலகின் மூத்த மற்றும் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், இயல்பான நடிப்பாலும் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கிய கலை ஆளுமை அம்மையாரின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
நடிகை ராதிகா: செளகார் ஜானகி அம்மா மறைந்த செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். உறுதிமிக்க, சுதந்திரமான, மன உறுதி கொண்ட முன்னோடி அவர். எனது தந்தையார் எம்ஆர் ராதாவின் நெருங்கிய தோழியான அவருடன் பழகவும், இணைந்து பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்து. அவர்கள் இருவரும் ஒருவர் மீது மற்றவர் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அந்த சாதனை பெண்மணிக்கு அஞ்சலி.
ஏவிஎம் நிறுவனம்: பழம்பெரும் நடிகையும் ஈடு இணை இல்லாத கலைஞருமான செளகார் ஜானகியின் மறைவு எங்களுக்கு துயரத்தை அளிக்கிறது. 1955 முதல் 1987 வரை மூன்று மொழிகளில் எங்களின் திரைப்படங்களில் நடித்து ஏவிஎம் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான அங்கமாக இருந்தார். அவரது அசாத்திய திறமை, நளினம், சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் போற்றப்படும். அவரது குடும்பத்தினருக்கு எங்களின் இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
எஸ்.வி.சேகர்: செளகார் ஜானகி அம்மா வீ மிஸ் யு. என் தாயை விட ஒரு வயது சின்னவர். அவரது இறப்பு மனது ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. மிகச்சிறந்த வாழ்க்கை வாழ்ந்துவிட்டு சென்றுவிட்டார். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். டிஜிட்டல் உலகு உள்ளவரை வாழ்ந்து கொண்டிருப்பார்.
நடிகை சிம்ரன்: செளகார் ஜானகி அம்மாவுடன் இணைந்து பணியாற்றிய நாட்களை நினைத்து பார்த்து எனது மனம் வேதனை அடைகிறது. அவர் ஒரு சிறந்த நடிகை மட்டும் இல்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் சிறந்த மனிதர். அவரது மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
நடிகை சாக்ஷி அகர்வால்: சில கலைஞர்கள் நம்மை மகிழ்விப்பார்கள். சில கலைஞர்கள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிடுவார்கள். செளகார் ஜானகி அவர்களில் ஒருவர். இந்திய திரையுலகில் மிகப்பெரிய ஆளுமை, நளினம், திறமை மிக்க பெண்மணி அவர். தலைமுறைகளைக் கடந்த அவரின் பணம், இனி வரும் நடிகர்களுக்கு உத்வேகமாக இருக்கும். ஒரு நிஜமான ஆளுமைக்கு விடைகொடுப்பது மனதுக்கு வலி மிகுந்ததாக இருக்கிறது.அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
ஜூனியர் என்டிஆர்: தெலுங்கு மற்றும் இந்தியத் திரையுலகில் அழியாத முத்திரையைப் பதித்த சௌகார் ஜானகி மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது திரைப்பயணமும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோல் அரசியல் பிரமுகர்களும் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
கனிமொழி எம்பி: பழம்பெரும் திரைக்கலைஞர் சௌகார் ஜானகி மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது. தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் அவர். அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
அதிமுக பொதுச்செயலர் எடப்படி பழனிசாமி: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 400 படங்களில் நடித்து, தனது ஆற்றலை வெளிப்படுத்திய அவருடைய மறைவு என்பது திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அமைச்சர் அருண்ராஜா காமராஜ்: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தனது 94-வது வயதில் இன்று காலமானார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
சுமார் 70 ஆண்டு காலமாக பல தலைமுறைகளை கடந்து, கலை உலகில் நிலைத்த நட்சத்திரமாய் ஜொலித்தவர். அவரின் குடும்பத்தினருக்கும் திரை உலகத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாமக தலைவர் அன்புமணி: தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.
1952-ம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி தமிழ்த் திரையுலகின் அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர். ஏராளமான விருதுகளை வென்றவர்.
நடிகை சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்.முருகன், மத்திய இணையமைச்சர்: திரையுலகின் மூத்த நடிகையும், பழம்பெரும் கலைஞருமான சௌகார் ஜானகி மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
தனது தனித்துவமான நடிப்பாலும், ஆளுமையாலும் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளால் கவுரவிக்கப்பட்ட அவர், தனது கலைப்பணியால் தலைமுறைகள் பலவற்றை ஈர்த்தவர்.
அவரது மறைவு கலைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கே.அண்ணாமலை: மூத்த திரைக்கலைஞரும், சமூக சேவகியுமான செளகார் ஜானகி மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தனது தனித்துவமான நடிப்பாலும், சிறந்த திரை ஆளுமையாலும் பல தலைமுறைகளின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது மறைவு, திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.