த்ரிஷா
சென்னை: நடிகை த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் பள்ளிகள், விமான நிலையங்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீடுகளுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், டிஜிபி அலுவலக முகவரிக்கு நேற்று வந்த இ-மெயிலில், நடிகை த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தேனாம்பேட்டை போலீஸார் நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, இது புரளி என தெரிய வந்தது. இதேபோல், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.