தமிழ் சினிமா

உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’

ப்ரியா

எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா, துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யாருக்கும் தெரியாத பெரிய நிழல் வணிகம், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

இதில் இப்படம் குறித்து நடிகர் வெற்றி பேசியதாவது: ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம். பொதுவாக பிளாக் கோல்டு என்றால் கச்சா எண்ணெய் அல்லது மிளகு என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் நாங்கள் குறிப்பிடுவது மனிதர்களின் தலைமுடியைத்தான்.

தலைமுடிக்குப் பின்னால் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மிகப்பெரிய வணிகமும், அதன் பின்னணியில் இயங்கும் வலையமைப்பும்தான் இந்தப் படத்தின் கதைக்களம். இந்தப் பின்னணியில் ஒரு குடும்பக் கதையையும், அப்பா - மகன் இடையிலான உணர்வுபூர்வமான உறவையும் இணைத்து இயக்குநர் தீரன் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமான கதைக்களத்துடன் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகியுள்ளது” இவ்வாறு வெற்றி பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT