சினிமாவின் தொடக்கக் காலத்திலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக, கருப்பு-வெள்ளை என்பது சினிமாவின் ஆத்ம மொழியாகவே மலர்ந்திருந்தது. இன்று நாம் கோடிக்கணக்கான வண்ணங்கள் கொண்ட டிஜிட்டல் திரைகளில் படம் பார்த்தாலும், கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவு என்பது இன்றும் “வலிமையான கலைத் தீர்மானமாக” (ஆர்டிஸ்டிக் சாய்ஸ்) உருவெடுத்துள்ளது.
நவீன சினிமாவில் கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவு கதையை வகைப்படுத்தவும், காலகட்டங்களை உருவாக்கவும், மனித உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தவும் சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
கதையை வகைப்படுத்துதல் (செக்மெண்டிங் நரேடிவ்ஸ்) - சமகால சினிமாவில் கருப்பு-வெள்ளை என்பது வெறும் அழகியல் சார்ந்தது மட்டுமல்ல; அது கதையின் வெவ்வேறு உலகங்களை அல்லது உணர்வு நிலைகளை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுகிறது.
கேசினோ ராயல் 2006: ஜேம்ஸ்பாண்ட் படமான இது, கருப்பு-வெள்ளைக் காட்சியுடன் தொடங்கும். இது பாண்டின் வழக்கமான பளபளப்பான உலகுக்கு முற்றிலும் மாறானது.
ஓர் உளவாளியாக பாண்ட் தனது ‘007’ அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பான அந்த ஆரம்ப காலக்கட்டத்தை, அதன் கரடுமுரடான (க்ரிட்டி) தன்மையோடு காட்ட இந்த மோனோக்ரோம் தளம் உதவியது. இது பார்வையாளரை ஒரு கிளாசிக் ‘ஃபிலிம் நோயர்’ உலகுக்கு அழைத்துச் சென்று, பாண்டின் தொடக்க கால தீவிரத்தை உணர்த்துகிறது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’: துணிச்சலான முடிவு: 1993-ல் ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' திரைப்படத்தை கருப்பு-வெள்ளையில் எடுக்க ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த முடிவு ஹாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனென்றால் யூத இனப்படுகொலையின் (ஹோலோகாஸ்ட்) கொடூரத்தை வண்ணங்களில் காட்டினால் அது கமர்ஷியல் சினிமா போல அழகியலாக (ப்யூட்டிஃபை) மாறிவிடும் என்று அவர் அஞ்சினார்.
அந்தத் துயர நிகழ்வுகளின் நிஜமான சாட்சியங்களை நாம் பெரும்பாலும் பழைய ஆவணப்படங்கள் மூலமே பார்த்திருக்கிறோம். அதே ஆவணப் படத் தன்மையை (டாக்குமென்ட்ரிஃபீல்) இப்படத்துக்கு கொடுக்க கருப்பு-வெள்ளை உதவியது.
அந்த முழுமையான கருப்பு-வெள்ளை பரப்பில், ஒரு சிறுமி அணிந்திருக்கும் வண்ண உடை பார்வையாளர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்க்கும்.
அந்த நிறம் அங்கே ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கான மரணங்களுக்கு மத்தியில் ஒரு தனிமனித உயிரின் இழப்பு தரும் தாக்கத்தை உரக்கச் சொன்னது சிவப்பு நிறக் கோட் அணிந்த சிறுமியின் இறுதிக்காட்சி.
பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் ‘ஈடா’: மவுனத்தின் வடிவம்: 2013-ல் வெளியான போலந்து நாட்டுத் திரைப்படமான ஈடா, கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவின் நவீனப் புரட்சி எனலாம். இப்படத்தில் 4:3 என்ற பழைய திரை விகிதம் (அஸ்பெக்ட் ரேஷியோ) பயன்படுத்தப்பட்டது. ஒளிப்பதிவாளர் லூகாஸ் ஜால், கதாபாத்திரங்களை ஃபிரேமுக்கு மிகவும் கீழே வைத்து, மேலே அதிக வெற்றிடத்தை (நெகடிவ் ஸ்பேஸ்) விட்டுப் படம்பிடித்திருப்பார்.
நிறங்கள் இல்லாத பெருந்திரையில், அந்த வெற்றிடம் கதாபாத்திரங்களின் தனிமையையும், அவர்களுக்கிடையிலான இடைவெளியையும், கடந்த காலத்தின் அழுத்தங்களையும் மிகத் துல்லியமாகப் பிரதிபலித்தது.
அல்போன்சோ க்வாரோனின் ‘ரோமா’ : நினைவுகளின் துல்லியம்: 2018-ல் வெளியான ‘ரோமா’ திரைப்படம் கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. இது கடந்த காலத்தைப் பற்றிய படம் என்றாலும், இது ‘பழைய பாணி’ (விண்டேஜ் லுக்) படம் அல்ல. இதற்காக 65எம்எம் டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
இதில் கருப்பு-வெள்ளை என்பது மங்கலாக இல்லாமல் மிகத் துல்லியமாக (அல்ட்ரா ஷார்ப்) இருக்கும். இயக்குநர் அல்போன்சோ க்வாரோன் தனது சிறுவயது நினைவுகளை நவீன பார்வையில் மீள் உருவாக்கம் செய்தார்.
பிரம்மயுகம்
நிறங்கள் இல்லாதது பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறடிக்காமல், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவரங்களையும், பாத்திரங்களின் உணர்வுகளையும் கூர்ந்து கவனிக்கவைத்தது.
தொழில்நுட்பப் புரட்சி: ‘ஓபன்ஹைமர்’ - கிறிஸ்டோபர் நோலன் தனது ‘ஓபன்ஹைமர்’ (2023) திரைப்படத்தில் கருப்பு-வெள்ளையை புதிய தொழில்நுட்ப உச்சத்துக்கு எடுத்துச் சென்றார். படத்தில் ஓபன்ஹைமரின் அகநிலை சார்ந்த பார்வையை (சப்ஜெக்டிவ்) நிறங்களிலும், லூயிஸ் ஸ்ட்ராஸ் தொடர்பான புறநிலை நிகழ்வுகளை (ஆப்ஜெக்டிவ்) கருப்பு-வெள்ளையிலும் அவர் பிரித்துக் காட்டினார்.
இதற்காகவே, வரலாற்றிலேயே முதன்முறையாக ஐமேக்ஸ் தரத்தில் கருப்பு-வெள்ளை ஃபிலிம் சுருள்கள் அவருக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டன. இது தொழில்நுட்பம் வளர்ந்தாலும், கருப்பு-வெள்ளை வழங்கும் அந்த ஆழமான நேர்மைக்கு இன்றும் மதிப்பிருக்கிறது என்பதை நிரூபித்தது.
இந்திய சினிமாவில் ‘பிரம்மயுகம்’- மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம் முழுமையாகக் கருப்பு–வெள்ளையில் உருவாக்கப்பட்டது ஒரு துணிச்சலான கலைத் தீர்மானம். 18-ம் நூற்றாண்டின் கேரளப் பின்னணி, அமானுஷ்ய சூழல் மற்றும் அதிகாரத்தின் இருண்ட பக்கங்களைக் காட்சிப்படுத்த கருப்பு-வெள்ளை மிகச் சரியான ஊடகமாக அமைந்தது. தொழில்நுட்பம் எத்தனைகோணங்களில் முன்னேறினாலும், ஒரு கதையின் ஆன்மாவை ஏந்த, கருப்பு-வெள்ளையே இன்றும் சிறந்த மொழியாக இருக்கிறது.
நினைவுகளின் உலகம்: ஏன் கருப்பு வெள்ளை? - சினிமாவில் நினைவுகள் (ஃப்ளாஷ் பேக்) அல்லது கடந்த காலத்தைக் காட்ட கருப்பு-வெள்ளை ஒரு குறியீடாகவே மாறிவிட்டது.
நிறம் = நிகழ்காலம் / யதார்த்தம்
கருப்பு–வெள்ளை = நினைவு / கடந்த காலம்
ஒரு காட்சி கருப்பு–வெள்ளையாக மாறும்போது, பார்வையாளரின் மனம் அது ‘நினைவின் உலகம்’ என்பதை உடனடியாக உணர்ந்து கொள்கிறது. அது நிகழ்காலத்திலிருந்து நம்மைத் துண்டித்து, காலத்தின் அடுக்குகளுக்குள் அழைத்துச் செல்கிறது.
ஏன் கருப்பு–வெள்ளை படங்கள் காலத்தைத் கடந்து நிற்கின்றன? - பல வண்ணப் படங்கள் 50 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் போது அதன் நிறங்கள் மற்றும் ‘ஃபேஷன்’ காரணமாகப் பழையதாகத் தெரியலாம். ஆனால் கருப்பு–வெள்ளை படங்கள் எப்போதுமே டைம்லெஸ் (காலமற்றது).
தேவையில்லாதவற்றை நீக்குதல்- இது பார்வையாளரைத் தேவையற்ற வண்ணச் சிதறல்களில் இருந்து விடுவித்து, ஒளியின் தரம் மற்றும் பிம்பத்தின் வடிவம் (ஃபார்ம்) மீது கவனம் செலுத்த வைக்கிறது.
உணர்வின் பரிசுத்தம்- நிறங்கள் இல்லாத திரை, மனித முகத்தில் இருக்கும் ஒவ்வொரு சுருக்கத்தையும், கண்களில் தேங்கும் ஒவ்வொரு துளி நீரையும் இன்னும் ஆழமாகப் பதிவு செய்கிறது.
நிறம் கண்ணைக் கவரும்; கருப்பு–வெள்ளை மனதைத் தொடும்: தொழில்நுட்பம் வளரலாம், 8கே அல்லது 12கே தரம்வரலாம். ஆனால், பிம்பங்களின் அரசனான கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவு, சினிமாவின் மவுனமான, ஆனால் மிக வலிமையான மொழியாகவே என்றும் நிலைத்திருக்கும். சில கதைகள் வண்ணங்களால் சொல்லப்படக் கூடாதவை; அவை ஒளியினாலும் நிழலினாலும் மட்டுமே சொல்லப்பட வேண்டியவை. அந்த இடத்தில்தான் கருப்பு-வெள்ளை ஓர் அழியாத கலையாக வாழ்கிறது.
(புதன்தோறும் படம் பார்ப்போம்)
- cjrdop@gmail.com