தமிழ் சினிமா

பாரதிராஜா: காட்சி அழகியலின் முன்னத்தி ஏர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 37

சி.ஜெ.ராஜ்குமார்

தமிழ் சினி​மா​வின் வரலாற்றை பார​தி​ராஜாவுக்கு முன், பார​தி​ராஜாவுக்​குப் பின் என்று பிரித்​துப் பார்க்​கலாம். அவர் புதிய கதைகளைச் சொன்ன இயக்​குநர் மட்​டுமல்ல; தமிழ் சினி​மா​வின் காட்சி மொழியையே (Visual Language) மாற்​றிய​வர்.

அவரது வருகை கதை​யிலும், கதா​பாத்​திரங்​களி​லும் மட்​டுமல்​லாமல், கேமரா எங்கு நிற்க வேண்​டும், எதைப் பார்க்க வேண்​டும், ஒளியை எவ ​வாறு பயன்​படுத்த வேண்​டும், இயற்​கையை எப்​படிக் கதை சொல்​லலின் ஒரு பகு​தி​யாக மாற்ற வேண்​டும் என்​ப​தி​லும் மாபெரும் மாற்​றத்தை ஏற்​படுத்​தி​யது.

பார​தி​ராஜாவுக்கு முன்​பும் வெளிப்​புறப் படப்​பிடிப்​பு​கள் (Outdoor Shooting) தமிழ் சினி​மா​வில் இருந்​தன. அந்த நாள், பாசமலர், தில்​லானா மோக​னாம்​பாள் போன்ற படங்​களில் சில காட்​சிகள் வெளிப்​புறங்​களில் படமாக்​கப்​பட்​டிருந்​தன.

ஆனால் அவை பெரும்​பாலும் பாடல் காட்​சிகள் அல்​லது குறிப்​பிட்ட சில காட்​சிகளுக்​குள் மட்​டுமே இருந்​தன. படத்​தின் முக்​கிய கதை சொல்​லல் ஸ்டூடியோ செட்​டு​களையே சார்ந்​திருந்​தது. இந்த அணுகு​முறையை முற்​றி​லு​மாக மாற்றி புதிய வரலாற்​றைப் படைத்​தவர் பார​தி​ராஜா. அவர் கிராமங்​களைக் கதை சொல்​லும் கருவி​களாக மாற்​றி​னார்.

ஸ்டூடியோ​விலிருந்து நம் வாழ்​வு​களுக்​குள்

எழு​பதுகளின் தமிழ் சினிமா பெரும்​பாலும் ஸ்டூடியோக்​களை மைய​மாக வைத்தே இயங்​கியது. பெரிய செட்​டு​கள், செயற்கை மரங்​கள், வர்​ணம் பூசப்​பட்ட பின்​னணி​கள், கட்​டுப்​படுத்​தப்பட்ட விளக்​கு​கள் ஆகிய​வையே திரைப்​படங்​களின் அடை​யாளங்​களாக இருந்​தன.

‘16 வயதினிலே’ திரைப்​படம் வெளி​யான​போது பார்​வை​யாளர்​கள் முதல் முறை​யாக ஓர் அசலான கிராமத்​தைத் திரை​யில் பார்த்​தார்​கள். அரி​தா​ரம் பூசாத முகங்​கள்.

மண் சாலைகள், குடிசை வீடு​கள், வெயி​லில் கரு​கிய முகங்​கள், ஒற்​றையடிப் பாதைகள், உண்​மை​யான வயல்​வெளி​கள், களத்​தில் மேயும் மாடு​கள் என அனைத்​தும் ஆவணப்​படத் தன்​மை​யுடன் பதிவு செய்​யப்​பட்​டன. முழு கிராம​முமே கதை​யின் ஒரு முக்​கியக் கதா​பாத்​திர​மாக மாறியது.

நிலப்​பரப்​பும் கதா​பாத்​திரம்

பார​தி​ராஜாவுக்கு முன் இயற்​கைக் காட்​சிகள் பெரும்​பாலும் அழகுக்​காகப் பயன்​படுத்​தப்​பட்​டன. ஆனால் அவர் நிலப்​பரப்பை உணர்ச்​சிகளு​டன் இணைத்​தார். ‘அலைகள் ஓய்​வ​தில்​லை’ திரைப்​படத்​தின் கடல், காதலின் பரந்த தன்​மை​யை​யும் சமூகத் தடைகளை​யும் பிர​திபலிக்​கும் ஓர் உயிருள்ள கதா​பாத்​திரம்.

‘கடலோரக் கவிதைகளில்’ கடற்​கரை, மீனவக் கிராமம், கடற்​காற்று ஆகியவை கதை​யின் உணர்​வோடு ஒன்​றிணைகின்​றன. ‘முதல் மரி​யாதை’​யின் ஆற்​றங்​கரை, படகு, பரந்த வயல்​வெளி​கள் கதா​பாத்​திரங்களின் அமை​தி​யை​யும் ஏக்​கத்​தை​யும் வெளிப்​படுத்துகின்​றன. இவ்​வாறு சூழல் மற்​றும் மனிதர்​களை ஒரே உணர்​வுத் தளத்​தில் இணைத்​தவர் பார​தி​ராஜா.

இயற்கை ஒளி​யின் மறுமலர்ச்சி

பார​தி​ராஜா சூரியனை தனது முதன்மை ஒளியமைப்​பாள​ராக மாற்​றி​னார். காலை ஒளி, நண்​பகல் வெயில், மாலைச் சூரியன், மேகமூட்​டம் போன்ற இயற்கை மாற்​றங்​கள் அவரது திரைப்​படங்​களில் காட்​சி​யின் மனநிலையை நிர்​ண​யித்​தன.

கோல்​டன் ஹவர்

சூரியன் மறை​யும் நேரத்​தில் கிடைக்​கும் தங்க நிற ஒளியை அவர் தொடர்ந்து பயன்​படுத்​தி​னார்.

பேக் லைட்​டிங் மற்​றும் சில்​ல​வுட்

சூரியனைப் பின்​னணி​யாக வைத்து கதா​பாத்​திரங்​களை நிழல் உரு​வங்​களாகக் காட்​டிய காட்​சிகள் அவரது திரைப்​படங்​களின் அடை​யாள​மாகவே மாறின. இன்று இந்​திய சினி​மா​வில் பொது​வாகக் காணப்​படும் இந்த அணுகு​முறை அக்​காலத்​தில் பெரிய காட்​சிப் புது​மை​யாக இருந்​தது.

கேமரா அசைவு​களின் புதிய இலக்​கணம்

பான் மற்​றும் ஜூம் இணைவு - ஒரு பரந்த காட்​சி​யில் இருந்து கேமரா நகர்ந்து அதே நேரத்​தில் ஜூம் செய்து கதா​பாத்​திரத்​தின் முகத்​தில் இருக்​கும் உணர்ச்​சியை நெருக்​க​மாகப் பதிவு செய்​யும் இந்த உத்தி பார்​வை​யாளரை காட்​சிக்​குள் இழுத்​துச் செல்​லும்.

பொருளி​லிருந்து மனிதருக்கு - ஒரு பூ, தாலி, மாட்டு வண்​டிச்​சக்​கரம் அல்​லது ஓடும் நீர் போன்​றவற்​றில் தொடங்​கும் ஷாட் மெது​வாக மனிதர்​களை நோக்கி நகர்ந்து கவித்​து​வ​மான காட்சி அமைப்பை வழங்​கியது.

கண்​களி​லிருந்து கதையைச் சொன்ன இயக்​குநர்

இவரது படங்​களில் வசனங்​களை விட பார்​வை​கள் அதி​கம் பேசும். இதற்​காக, திடீர் ஜூம்​-இன், நீண்ட லென்ஸ் பயன்​பாடு, ஆழமற்ற ஃபோகஸ், இயற்கை பேக் லைட்​டிங் போன்ற உத்​தி​களைப் பயன்​படுத்​தினர் ஒளிப்​ப​தி​வாளர்​கள். ஒரு காதல், வலி, அவமானம் அல்​லது ஏக்​கம், பல நேரங்​களில் கண் பார்​வை​யிலேயே வெளிப்​படுத்​தப்​பட்​டது.

நீண்ட ட்ராலி ஷாட்​டு​கள்: உயிருள்ள நிலப்​பரப்​பு​கள்

பார​தி​ராஜா​வின் மற்​றொரு முக்​கியப் பங்​களிப்பு நீண்ட ட்ராலி ஷாட்​டு​கள். வயல்​வெளி​கள், சாலைகள், கிராமத்​துத் தெருக்​கள், கடற்​கரை ஓரங்​கள் வழி​யாக கேமரா நீண்ட தூரம் பயணிக்​கும்.

கிழக்கே போகும் ரயில்...

இந்த ட்ராலி ஷாட்​டு​கள், ஒரு கிராமத்​தின் வாழ்க்​கையை அறி​முகப்படுத்​துகின்​றன. மனிதர்​களின் உறவு​களை விளக்​கு​கின்​றன. சூழலின் உயிரோட்​டத்தை உணர்த்​துகின்​றன. பின்​னாளில் பல இந்​திய இயக்​குநர்​கள் இந்த அணுகு​முறையைத் தழு​வினர்.

மனிதனைச் சூழலுக்​குள் கரைத்த காட்சி மொழி

பார​தி​ராஜா​வின் திரைப்​படங்​களில் கதா​பாத்​திரங்​கள் இயற்​கையி​லிருந்து தனி​யாகத் தெரி​யாது. பரந்த வயல்​வெளி​யில் நடக்​கும் மனிதன், கடற்​கரை​யில் சிறிய உரு​வங்​களாகத் தெரி​யும் காதலர்​கள், நதிக்​கரை​யில் அமர்ந்​திருக்​கும் முதி​ய​வர் போன்ற காட்​சிகள் மனித வாழ்க்கை இயற்​கை​யின் சிறு பகுதி என்​பதை உணர்த்​துகின்​றன.

பி.எஸ்​.நி​வாஸ்: இயற்​கை​யின் கவிஞர்

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், போன்ற படங்​களில் ஒளிப்​ப​தி​வாளர் பி.எஸ்​.நி​வாஸ், பார​தி​ராஜா​வின் காட்​சிக் கனவு​களுக்கு வடிவம் கொடுத்​தார். இயற்கை வெளிச்​சம், உண்​மை​யான சரும நிறங்​கள், கிராமத்து யதார்த்​தம் ஆகிய​வற்றை அவர் அற்​புத​மாகப் பதிவு செய்​தார்.

அவரே சிகப்பு ரோஜாக்​கள் திரைப்​படத்​தில்​ நகர்ப்​புறத்​ த்ரில்​லருக்​கான லோ-கீ ஒளியமைப்​பை​யும்​ உரு​வாக்கி தனது பல்​துறை திறமை​யை நிரூபித்​தார்​.

(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)

- cjrdop@gmail.com

SCROLL FOR NEXT