புராண கால வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம், ‘பகவான்’. மித்தாலஜிகல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை சு.காளிங்கன் இயக்கியுள்ளார்.
அம்மன்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரித்துள்ள இதில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், யோக் ஜேபி, ஆடுகளம் முருகதாஸ் என பலர் நடித்துள்ளனர். முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு ப்ரசன் பாலாவும் பின்னணிக்கு யுவராஜும் இசை அமைத்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் காளிங்கன் கூறும்போது, “இந்தப் பிரபஞ்சத்தில் புரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. எல்லோரும் பகவானை வணங்குகிறோம். இந்த முழு பிரபஞ்சத்தை இயக்குபவர் பகவான் என்றால், அவர் யார்? அவர் வெறும் உருவமா ? இல்லை வேறெதுவுமா ? அப்படியெனில் இல்லுமினாட்டி யார் ? இந்த கேள்விகளுக்கான பதில் தான் இப்படத்தின் மையம். ஒரு சாதாரண கதையாக இல்லாமல், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.
நாம் அறிந்த மகாபாரத கதையின் ஒரு பகுதியும் இதில் வரும். இதில் ரசிகர்களுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. நாம் பொதுவாகக் கவனிக்காமல் இருக்கும் சாதாரண உயிரினமான பல்லி முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறுகிறது. படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.