துரந்தர்

 
தமிழ் சினிமா

மிட்-ஷாட், மீடியம்-ஷாட்: உரையாடல் மொழி மற்றும் உடலசைவுகளின் கலை | ஒளி என்பது வெளிச்சமல்ல 24

சி.ஜெ.ராஜ்குமார்

சினி​மா​வின் காட்சி அமைப்​பில், ஒளிப்​ப​தி​வாள​ருக்கு இருக்​கும் மிக​வும் நம்​பக​மான கரு​வி, மீடி​யம் ஷாட். வைட் ஷாட்​கள் சூழலை விவரிக்​கின்​றன; க்ளோஸ்​-அப் ஷாட்​கள் உணர்ச்​சிகளை ஆழமாகப் படம்​பிடிக்​கின்​றன.

ஆனால், இவை இரண்​டுக்​கும் இடையே பால​மாக இருந்​து, மனித உறவு​களை​யும் அவர்​களின் செயல்​ பாடு​களை​யும் மிக இயல்​பாகக் காட்​டு​வது மீடி​யம் ஷாட் மட்​டுமே.

பொது​வாக இடுப்​புக்கு மேல் தலை வரை காட்​டும் இந்​தச் சட்​டகம், சினி​மா​வின் “உரை​யாடல் மொழி” (லேங்​கு​வேஜ் ஆஃப் கான்​வர்​சேஷன்) என்று அழைக்​கப்​படு​கிறது.

உரை​யாடல்​களின் முக்​கி​யம்

சினி​மா​வில் இரு கதா​பாத்​திரங்​களுக்கு இடையி​லான உரை​யாடல் என்​பது அவர்​களுக்கு இடையி​லான அதி​காரப் போட்டி அல்​லது அன்​புப் பரி​மாற்​றம். மீடி​யம் ஷாட் ஒரு பார்​வை​யாளரை அந்த உரை​யாடலில் 3-வது நபராக அமர வைக்​கிறது.

க்ளோஸ்​-அப் ஷாட்​டில் முகம் மட்​டுமே தெரி​யும் என்​ப​தால், அந்த நபர் எங்கே இருக்​கிறார் அல்​லது யாருடன் பேசுகிறார் என்ற சூழல் சில நேரங்​களில் மறைந்​து​விடும்.

ஆனால் மீடி​யம் ஷாட்​டில், பேசுபவரின் முகத்​தோடு சேர்த்து அவர்​களின் கைகள், அவர்​கள் அமர்ந்​திருக்​கும் விதம் மற்​றும் அவர்​களுக்கு அரு​கில் இருப்​பவர் என அனைத்​தும் காட்​டப்​படும். இது உரை​யாடலுக்கு ஒரு நம்​பகத்​தன்​மை​யை​யும் தொடர்ச்​சி​யை​யும் வழங்​கு​கிறது.

          

மனிதர்​களை இணைக்​கும் பாலம்

ஒளிப்​ப​தி​வில் மீடி​யம் ஷாட் அல்​லது மீடி​யம் வைட் ஷாட்போன்ற அமைப்​பு​கள் 2 அல்​லது அதற்கு மேற்​பட்ட மனிதர்​களை ஒரே ஃபிரேமில் இணைக்​கின்​றன.

இதை ‘டூ-ஷாட்’ என்​றும் அழைக்​கலாம். கதா​பாத்​திரங்​களுக்கு இடையி​லான இடைவெளி (ஸ்​பேசி​யல் ரிலேஷன்​ஷிப்) அவர்​களின் மனநிலை​யைச் சொல்​லும்.

அவர்​கள் மிக நெருக்​க​மாக அமர்ந்து பேசுகிறார்​களா அல்​லது தூர​மாக நின்று தர்க்​கம் செய்​கிறார்​களா என்​பதை மீடி​யம் ஷாட் மிகத் தெளி​வாகக் காட்​டும்.

ஒரு ஃபிரே​முக்​குள் மனிதர்​களைப் பிணைப்​ப​தன் மூலம், அந்​தச் சூழலில் நில​வும் ‘கெமிஸ்ட்​ரி’ பார்​வை​யாளர்களுக்​குக் கடத்​தப்​படு​கிறது.

முக​பாவனை​யும் உடலசை​வும்

க்ளோஸ்​-அப் ஷாட்​டில் கண்​கள் மட்​டுமே பேசும்; மீடி​யம் ஷாட்​டில் முழு உடலும் பேசும். ஒரு நடிகர் சொல்​லும் வசனத்​துக்கு அவரது கண்​கள் ஓர் உணர்ச்​சி​யைக் காட்​டி​னாலும், அவரது கைகள் பதற்​றத்​தில் நடுங்​கலாம் அல்​லது கைகளை இறுக்​கிக் கட்​டிக்​கொண்டு ஒரு​விதத் தற்​காப்பு நிலை​யில் இருக்​கலாம்.

உடலசைவு​களைப் படம்​பிடிக்க மீடி​யம் ஷாட் அவசி​யம். ஒரு கதா​பாத்​திரம் பொய் சொல்​கிறதா அல்​லது உண்​மை​யாகவே வருந்​துகிறதா என்​பதை பார்​வை​யாளர் அறிந்​து​கொள்ள மீடி​யம் ஷாட் வழி​வகை செய்​கிறது. இது நடிப்​பின் பரி​மாணத்தை முழு​மை​யாக்​கு​கிறது.

சேவிங் பிரைவேட் ரையன்...

பல்ப் ஃபிக் ஷன்

ஹாலிவுட் மாஸ்​டர்​களின் பார்​வை​யில் மிட்​-ஷாட் உதா​ரணங்​கள்:

பல்ப் ஃபிக் ஷன் (1994) – உரை​யாடல்​களின் டைனமிக்ஸ்

இயக்​குநர் க்வென்​டின் டரன்​டினோ​வின் படங்​களில் வசனங்​களே பிர​தான கதா​பாத்​திரங்​கள். பல்ப் ஃபிக் ஷன் படத்​தின் புகழ்​பெற்ற டைனர் காட்​சிகளில், கதா​பாத்​திரங்​கள் அமர்ந்து பேசும்​போது மிட்​-ஷாட்​களை அவர் கையாண்ட விதம் அபார​மானது.

இடுப்​புக்கு மேல் எடுக்​கப்​படும் இந்த ஷாட்​கள், கதா​பாத்​திரங்​களின் உடல் மொழி மற்​றும் அவர்​களின் கைகளில் இருக்​கும் காபி கோப்பை போன்ற விவரங்​களைச் சேர்த்​துக்​காட்​டி, அந்த உரை​யாடலுக்கு ஓர் உயிரோட்​ட​மான ‘ரிதத்​தை’ கொடுக்​கின்​றன.

சேவிங் பிரைவேட் ரையன் (1998) – உணர்ச்​சி​யின் ஆழம்

இயக்​குநர் ஸ்டீவன் ஸ்பீல்​பெர்க் தனது போர்க்​களக் காட்​சிகளுக்​குப் புகழ்​பெற்​றவர். படத்​தின் இறு​தி​யில், வயதான ரையன், கேப்​டன் மில்​லரின் கல்​லறையைப் பார்க்​கும் காட்​சி​யில் மிட்​-ஷாட் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கும்.

இது ரையனின் முகத்​தில் இருக்​கும் குற்ற உணர்​வை​யும், நன்​றியை​யும் காட்​டு​வதோடு, பின்​னணி​யில் இருக்​கும் கல்​லறை​களின் வரிசையை​யும் காட்​டி, அந்​தத் தியாகத்​தின் கனத்தை பார்​வை​யாளர்​களுக்​குக் கடத்​துகிறது.

ஒளிப்​ப​தி​வாளர் மீடி​யம்​-ஷாட்டை அமைக்​கும்​போது, உடல் மொழி​யின் மிட்​-ஷாட்​டில் நடிகரின் தோள்​கள், கைகளின் அசைவு மற்​றும் அவர் நிற்​கும் தோரணை ஆகியவை நடிப்​பின் 50 சதவி​கித விவரங்​களைச் சொல்​கின்​றன.

இது கதா​பாத்​திரங்​களின் ‘சமூக இடைவெளியை’ விளக்​கு​கிறது. சமீபத்​தில் பெரு வெற்​றி​பெற்ற ஹிந்​தித் திரைப்​பட​மான துரந்​தரில் மிட்​-ஷாட் என்​பது பாது​காப்​பற்ற ஒரு வெளியை உரு​வாக்​கு​கிறது.

கதா​பாத்​திரத்​தைச் சுற்றி இருக்​கும் ஆபத்​தை​யும், அவர்​களின் உள்​மனப் போராட்​டத்​தை​யும் ஒரே சட்​டகத்​தில் இணைத்​து, த்ரில்​லர் உணர்வை படம் முழு​வதும் தக்​கவைக்​கிறது. இத்​திரைப்​படத்​தில் மிட்​-ஷாட்​கள் பயன்​படுத்​தப்​பட்ட விதம் குறித்த சில முக்​கிய குறிப்​பு​கள்:

ஒற்​றறி​யும் சூழலும் பாது​காப்​பற்ற உணர்​வும்

ஸ்பை த்ரில்​லர்​களில் ஒரு கதா​பாத்​திரம் எப்​போதுமே கண்​காணிக்​கப்​படு​கிறது என்ற உணர்வு இருக்க வேண்​டும். துரந்​தர் படத்​தில், மிட்​-ஷாட்​கள் கதா​பாத்​திரத்தை இடுப்​புக்கு மேல் காட்​டும்​போது, அவர்​களுக்​குப் பின்​னால் இருக்​கும் மர்​ம​மான நிழல்​கள் அல்​லது மங்​கலான (ப்​ளர்ட்) உரு​வங்​களை​யும் சேர்த்தே காட்​டும்.

இது “யாரோ பின்​னால் இருக்​கிறார்​கள்” என்ற அச்​சத்தை பார்​வை​யாள​ருக்​குத் தொடர்ந்து கொடுத்​துக்​கொண்டே இருக்​கும். உடல் மொழி​யில் ஒளிந்​திருக்​கும் ரகசி​யங்​கள் உளவாளி பொய் சொல்​கிறானா அல்​லது உண்​மையை மறைக்​கிறானா என்​பதை அவனது முகம் மட்​டும் சொல்​லாது.

இப்​படத்​தின் மிட்​-ஷாட்​களில், கதா​பாத்திரத்​தின் கைகள் துப்​பாக்​கியை நோக்​கியோ அல்​லது ரகசி​யக் கரு​வியை நோக்​கியோ செல்​வதை நாம் காணலாம். க்ளோஸ்​-அப்​பில் முகம் காட்​டும் அமை​திக்கு மாறாக, மிட்​-ஷாட்​டில் தெரி​யும் பதற்​ற​மான உடல் மொழி காட்​சி​யின் சஸ்​பென்ஸை அதி​கப்​படுத்​துகிறது.

ஒளிப்​ப​தி​வாளரின் சவால்: காம்​போசிஷன்

ஒளிப்​ப​தி​வாள​ராக, மீடி​யம் ஷாட்டை அமைக்​கும்​போது பின்​னணி​யில் கவனம் செலுத்​து​வது மிக முக்​கி​யம். பின்​னணி முழு​மை​யாக மங்​கலாக இருக்​கக் கூடாது, அதே நேரம் அது கதா​பாத்​திரத்தை விட அதி​கக் கவனத்தை ஈர்க்​க​வும் கூடாது.

லென்ஸ் தேர்வு - பொது​வாக 35 எம்​எம் முதல் 50 எம்​எம் வரையி​லான லென்​ஸ்​கள் மீடி​யம் ஷாட்​டுக்​கு பொருத்​த​மானவை. இவை மனிதக் கண் பார்க்​கும் அதே இயல்​பான கோணத்​தைத் தரு​கின்​றன.

கிராஃபிக் வெயிட்- ஃபிரேமில் கதா​பாத்​திரத்​துக்கு மேலிருக்​கும் இடைவெளி (ஹெட்​ரூம்) மற்​றும் அவர்​கள் பார்க்​கும் திசை​யில் இருக்​கும் இடைவெளி (லுக்​கிங் ஸ்பேஸ்) ஆகியவை காட்​சி​யின் தாளத்​தைத் தீர்​மானிக்​கின்​றன.

எடிட்​டிங் ரிதம்

எடிட்​டிங் மேஜை​யில் மீடி​யம் ஷாட்​கள் ‘மாஸ்​டர் ஷாட்​’டிற்​கும் ‘க்​ளோஸ்​-அப்​’பிற்​கும் இடையே ஒரு பாது​காப்​பான மாற்​றத்தை (ட்​ரான்​ஸிஷன்) வழங்​கு​கின்​றன.

ஒரு காட்​சி​யின் வேகத்தை (பேஸ்) நிலைநிறுத்​த​வும், பார்​வை​யாள​ருக்கு ஒரு நிதான​மான அனுபவத்​தைத் தரவும் எடிட்​டர்​கள், மீடி​யம் ஷாட்​களை அதி​கம் பயன்​படுத்​துகின்​றனர்.

மீடி​யம் ஷாட் என்​பது ஒளிப்​ப​தி​வாளரின் “பாது​காப்​பான புகலிடம்” (சேஃப் ஹேவன்). அது கதையை நகர்த்​துகிறது, மனிதர்​களை இணைக்​கிறது, மற்​றும் நடிப்​பின் நுணுக்​கங்​களை வெளிச்​சமிட்​டுக் காட்​டு​கிறது.

ஒரு முகத்தை மட்​டும் காட்​டா​மல், அந்த மனிதன் வாழும் சூழலை​யும் அவனது உடல் மொழியை​யும் இணைத்​துக் காட்​டு​வதன் மூலம், சினிமா ஒரு முழு​மை​யான கலை வடிவ​மாக மாறுகிறது. ஒவ்​வொரு மிட்​-ஷாட்​டும் ஒரு கதை சொல்​கிறது; அது மவுனத்​துக்​கும் சத்​தத்​துக்​கும் இடையி​லான ஓர் அழகான சமநிலை.

(புதன்​தோறும் ஒளி காட்​டுவோம்​)

- cjrdop@gmail.com

SCROLL FOR NEXT