ஜனவரி 23-ம் தேதி அஜித்தின் ‘மங்காத்தா’ மறுவெளியீடு ஆகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘மங்காத்தா’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. இப்போது வரை அஜித் ரசிகர்கள் மத்தியில் ‘மங்காத்தா’ படமென்றால் பெரிய உற்சாகமே இருக்கும். அந்தளவுக்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் ‘மங்காத்தா’.
பல்வேறு படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ‘மங்காத்தா’ படமும் இணைந்துள்ளது. ஜனவரி 23-ம் தேதி இப்படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி 1-ம் தேதி இருக்கும் என கூறப்படுகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமிராய், பிரேம்ஜி, வைபவ், மஹத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மங்காத்தா’. 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் 25 கோடியில் உருவாக்கப்பட்டு 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரிய லாபம் ஈட்டியது. இப்போதும் வெங்கட்பிரபுவிடம் அஜித்தை வைத்து ‘மங்காத்தா 2’ படத்தினை உருவாக்குங்கள் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.