நடன இயக்குநர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம், ‘செவல காள’. விங்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அறிமுக இயக்குநர் பால் சதீஷ் இயக்குகிறார். இதில் நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார். சம்பத் ராஜ், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஆக் ஷன் படமான இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், காமெடி காட்சிகளை இன்னும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு நினைத்தது. இதையடுத்து இப்போது தனியாக காமெடி டிராக்கை படமாக்கி இணைத்துள்ளனர்.
இதுபற்றி இயக்குநர் பால் சதீஷ் கூறும்போது, “இப்போது பெரும்பாலான படங்களில் காமெடி காட்சிகள் இருப்பதில்லை. பார்வையாளர்களுக்கு அது தேவையாக இருக்கிறது. இதில் இன்னும் காமெடி காட்சிகள் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதன்படி சேர்த்துள்ளோம். அது இடைச்செருகலாக இல்லாமல், கதையின் முக்கிய திருப்பங்களுடன் தொடர்புடையதாக அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.