நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது.
‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது. அதே போல ‘ஜெயிலர் 2’ படத்தில் ‘அலபோலலோ’ என்ற பாடலுக்கு பூர்ணா நடனம் ஆடியுள்ளார். மலையாள நடிகையான அவர், தமிழில், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், கொடிவீரன், சவரகத்தி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நடனம் எப்போதும் என் வாழ்க்கையின் ஓர் அங்கம். நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால்தான் சினிமாவுக்கு வந்தேன். இப்போது துபாயில் நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். சிறு வயது முதலே நடனமாடி வருகிறேன். எனது முழு சினிமா வாழ்க்கையிலும், அந்தந்த மொழிகளில் சூப்பர் ஹிட்டான பாடல்கள் எனக்குக் கிடைத்துள்ளன. திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பிறகு, ஜெயிலர் 2 படத்தில் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
எனது நடனத்துக்காக என்னை அங்கீகரிக்கும் ஒரு நாளுக்காக எப்போதும் விரும்பி இருக்கிறேன். எல்லாமே சரியான நேரத்தில் நடக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை, எனக்கு 2 குழந்தைகள் பிறந்த பிறகு இது நிகழ வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கலாம்.
தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடலுக்கும் நான் ஆடிய ‘அலபோலலோ’ பாடலுக்கும் ஒப்பீடுகள் வருவது பற்றி கேட்கிறார்கள். அது தவிர்க்க முடியாதது. அது எனக்குத் தெரியும், ஆனால் தமன்னாவின் பாடலும் எனது பாடலும் வெவ்வேறு ஸ்டைல். முற்றிலும் வேறுபட்டவை” என்றார்.