தமிழ் சினிமா

‘அனலி’யில் ஆக்‌ஷன் ஹீரோயின்: சிந்தியா லூர்டே தகவல்

செய்திப்பிரிவு

சிந்தியா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகை சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ‘அனலி’.

அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில், சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சிந்தியா லூர்டே கூறும்போது, “‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களுக்குப் பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. கொஞ்சம் தனித்துவமானதாக இருக்கும்.

90-களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக முழுநீள ஆக்‌ஷன் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்கத் தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன். ஆக்‌ஷன் காட்சிகளில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன்.

இதில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்திலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என கற்றுக்கொண்டேன்” என்றார். இந்தப் படம் ஜன.2-ம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

SCROLL FOR NEXT