தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு, விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்ஃபி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.
மேலும், தமிழக முதல்வரான விஜய்க்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரான விஷால் தனது எக்ஸ் தளத்தில், “நமது மதிப்பிற்குரிய முதல்வர், நான் எப்போதும் அன்புடன் அழைப்பது போல தளபதி விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராகப் பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நமது துறையைச் சேர்ந்த ஒரு ஆளுமை அரசாங்கத்தை வழிநடத்துவதைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வருங்கால அமைச்சர்களுக்கும் நல்வாழ்த்துகள். இது நமது மாநிலத்தின் பொற்காலமாக அமையட்டும். அன்பிற்குரிய விஜய் சார், கடந்த 32 ஆண்டுகளாக எனக்கு அறிமுகமான ஒருவரை, இப்போது 'சார்' என்று மரியாதையுடன் அழைப்பதில் பெருமை கொள்கிறேன்.
ஒரு வாக்காளராக, உங்களிடம் பின்வரும் கோரிக்கையை முன்வைக்கிறேன்: ஒரு முதலமைச்சர் தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்குப் புறப்படும்போது, வெயிலில் தேவையின்றி நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும் பெண் காவலர்களின் நிலையை நீங்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். தயவுசெய்து அவர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆம், நிறைவேற்றப்பட வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள் பல உள்ளன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக மழைநீர் தேங்கி நிற்கும் அதே நிலையிலேயே இருக்கும் சாலைகளைச் சீரமைப்பது, எப்போதுமே எட்டாக்கனியாகவே இருக்கும் மழைநீர் வடிகால் வசதிகளைக் கொண்டுவருவது போன்ற அடிப்படைத் தேவைகளின் பட்டியல், ஒரு சாமானியனின் பார்வையில் நீண்டு கொண்டே செல்கிறது.
இருப்பினும், இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளில் நீங்கள் தனி கவனம் செலுத்தித் தீர்க்கும்போது, இதுவரை எந்தத் தலைவரும் செய்யாத ஒரு மகத்தான சாதனையை நீங்கள் நிகழ்த்திக் காட்டுவீர்கள். பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்ற, தேவையான நேர்மறை ஆற்றலையும் மன உறுதியையும் இறைவன் உங்களுக்கு நிறைவாக அருளட்டும்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.