விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தை வி.கேந்திரன் இயக்கியுள்ளார். மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராஜசேகர் தயாரிக்கும் இதில் நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’ நரேன், மது சூதன் ராவ், தீபா, இந்து மதி மணிகண்டன், ஷரவண சக்தி, மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மஞ்சு விரட்டுப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்ச் 6ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் விமல் பேசும்போது, “இயக்குநர் கேந்திரன் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, சொன்னபடியே எடுத்து விடுவாரா ? என்ற சந்தேகம் இருந்தது. இது கமர்ஷியல் படம்தான். ஆனால், கதை உள்ள கமர்ஷியல் படம். அதுவும் 4, 5 கதைகள் இருக்கும் படம். முதலில் இருந்து எல்லாவற்றையும் சொல்லி கிளைமாக்ஸ்சில் அனைத்தையும் கச்சிதமாக முடிப்பார்.
படப்பிடிப்பில் நிறைய காட்சிகளைப் படமாக்கிக் கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்பிக்கையே வரவில்லை. படம் பார்த்த பிறகு தான் எனக்குத் திருப்தியானது. அவர் என்னிடம் சொன்ன கதையை கச்சிதமாகப் படமாக்கி இருக்கிறார்.
இதில் நானும், நட்டி நடராஜும் சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, அவர் எதைப் பற்றியும் கவலைப்படாதே, அடிக்க வேண்டும் என்றால் அடித்து விடு, மிதிக்க வேண்டும் என்றால் மிதித்து விடு என சுதந்திரம் கொடுத்தார். அதனால் அந்த காட்சி அற்புதமாக வந்தது” என்றார்.
நட்டி என்ற நடராஜ் கூறும்போது, “சமூகப் பிரச்சினைகளைச் சொல்லி ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படம் கிராமத்தின் கதை. அதைச் சுற்றியுள்ள மக்களின் மனநிலை, உறவு முறைகளை பேசி இருக்கிறது. தயாரிப்பாளர் குறிப்பிட்டதை போல் ‘ஏரும் எங்கள் கடவுள்தான் எருதும் எங்கள் கடவுள் தான்’ என்பதை இந்தப் படம் பேசுகிறது” என்றார்.