நட்டி நட்ராஜ், ஷிரித்தா ராவ், சாந்தினி தமிழரசன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘டிஎன் 2026’. இதன் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார்.
உமாபதி ராமையா இயக்கியுள்ள இப்படத்தை கேஆர்ஜி கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி, தீபக் ரவி தயாரித்துள்ளனர். ஏப்.10-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு, அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட அரங்கில், நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தம்பி ராமையா கூறும்போது, “இந்தக் கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் உமாபதி இந்தப் படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்தப் படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை.
அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாகப் புரிந்து கொள்வீர்கள். படத்தை முழுமையாகப் பார்த்த பிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்றார்.