சினிமாவில் எதுவும் எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது என்பது உலகறிந்த ஒன்று! இங்கு புகழ் பெற்றிருக்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் போராட்டத்துக்கு பிறகே அந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதில் நானும் விதிவிலக்கல்ல. பல்வேறு அவமானங்களைச் சந்தித்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.
என் வளர்ச்சியை தாமதப்படுத்தியதில் பலருக்கு பங்கு இருக்கிறது. அவர்களில் பிரபல இயக்குநர் ஒருவரும் உண்டு. அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை. என் நண்பர் ஒருவர் அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றினார். அந்த இயக்குநரின் படங்களில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதற்கு காரணம் என் நண்பர். நான் நிறைய பிட் வாய்ஸ்கள்தான் பேசிக்கொண்டிருந்தேன்.
ஓய்வாக இருந்தால் என் நண்பரின் அறைக்குச் செல்வேன். நிறைய பேசிக்கொண்டிருப்போம். ஒரு நாள், ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் ஆள் வேண்டும் என்று அவரிடம் கேட்டிருக்கிறார். புதுமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். நண்பர் என் பெயரை சிபாரிசு செய்திருக்கிறார்.
உடனே, “அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆச்சே, சும்மா வந்து மைக் முன்னால நின்னு பேசுற மாதிரி நின்னுட்டா என்ன பண்றது?” என்று கேட்டிருக்கிறார் இயக்குநர். என் நண்பர், “அப்படி நின்னுட்டா நான் அனுப்பிடறேன். வேற காட்சிகள் எடுக்கறதுக்கு இருக்கு, அதை எடுத்துக்கலாம். பிரச்சினையில்ல” என்று சொல்லியிருக்கிறார். இயக்குநர் விருப்பமே இல்லாமல் என்னை வரச்சொன்னார். நான் லொகேஷனுக்கு சென்றேன்.
யாராவது நடிக்க வாய்ப்பு கொடுத்துவிட மாட்டார்களா ? என்று அதிக எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் நான் அலைந்து கொண்டிருந்த காலம் அது. அந்த இயக்குநர் “ஓரளவுக்காவது பண்ணுவியா?” என்று கேட்டு விட்டு நடிக்கச் சொன்னார். நான் “நன்றாகவே நடிப்பேன்” என்று சொல்லிவிட்டு நடித்தேன். பெரியஷாட் ஒன்றை கம்போஸ் செய்துவிட்டு, “வசனம் பெருசா இருக்கு, பேசிருவியா?” என்று கேட்டார்.
“சீன் பூராவுமே என்னால பேச முடியும் சார்” என்றேன். என்னைப் பார்த்தவர், “இதை மட்டும் பேசு, போதும்” என்றார். அதில் எனக்கு மட்டும் தான் வசனம் வரும். என்னுடன் இன்னும் சிலரும் நடித்தார்கள். நான் ஒரே டேக்கில் பேசி முடித்தேன். அதைக்கண்டு செட்டில் இருந்தவர்கள் எல்லோருமே கைதட்டினார்கள். நான் வெளியில் வந்து நின்றிருந்தேன்.
அந்த இயக்குநர், “உன்னை நான்தான் வேண்டாம்னு சொன்னேன். இப்ப இந்த கேரக்டருக்கு உன்னைவிட்டா யாரும் பொருத்தமா இருப்பாங்களான்னு கற்பனை கூட பண்ணி பார்க்க முடியலை” என்றார். சந்தோஷம் சார் என்றேன். என் நண்பரான இணை இயக்குனருக்கும் மகிழ்ச்சி. 2 நாட்கள் படப்பிடிப்பு இருந்தது. நடித்தேன். பிறகு அதே இயக்குநர் இயக்கிய வேறொரு படத்தில் 2 காட்சிகள் இருந்தன.
அதிலும் என் நடிப்பைப் பாராட்டினார். இதற்கு இடையில என் நண்பருக்கும் அந்த இயக்குநருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு. அதை என் நண்பர் சொன்னார். பிறகு ஒரு நாள் அந்த இணை இயக்குநர் அறைக்குச் சென்ற போது என்னைப் பார்த்து அழுதார். என்ன ? என்று கேட்டேன். “எனக்கும் அவருக்கும் பிரச்சினை. நீங்க என் நண்பர் அப்படிங்கறதுக்காக உங்கள் காட்சிகளை, அந்த இரண்டு படத்துலயும் கட் பண்ணிட்டார்” என்றார். அன்று இரவு தூக்கம் வரவில்லை.
கண் கலங்கிவிட்டது. அழுதேன். மறுநாள் அந்த இயக்குநர் வீட்டுக்குச் சென்றேன். அவரிடம் “ஏன் சார் இப்படி பண்ணிட்டீங்க ?” என்று கெஞ்சலாம் என நினைத்துக் கொண்டிருந்த போது, அந்த இயக்குநரே வந்தார். “உங்க சீன்களை வைக்க முடியல. அடுத்த படத்துல தர்றேன்” என்று கூலாக சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
பிறகு இணை இயக்குநர் அறைக்குச் சென்றேன். அவர், “என்னையும் இயக்குநர் வரவேண்டாம்னு சொல்லிட்டார்” என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. பிறகு அந்த இயக்குநரை நான் சந்திக்கவே இல்லை. இணை இயக்குநரை அடிக்கடி பார்ப்பேன்.
பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. ஒரு டப்பிங் தியேட்டரில் நான் பேசப் போய்க்கொண்டிருந்தபோது, எதிரில் அந்த இயக்குநர் வந்தார். என்னைப் பார்த்ததும், “நாலு பேருக்கு தெரிய மாதிரி பெரிய நடிகராயாச்சு” என்றார். “என்னமோ இறைவன் செயல், எனக்குன்னு உள்ளது எனக்கு வரத்தானே செய்யும்” என்றேன். அவர் போய்விட்டார்.
சில வருடங்களுக்கு பிறகு ஒரு இடத்தில் அவரை சந்தித்தேன். என்னை கட்டிப்பிடித்துவிட்டுப் பக்கத்தில் இருந்தவர்களிடம், “என்னை எத்தனை நாளா இவருக்கு தெரியும்னு கேளுங்க” என்று சொன்னார். நான் கண்டு கொள்ளவில்லை. சினிமாவும் அரசியல் மாதிரிதான். நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. அந்த இணை இயக்குநர் பிறகு பெரிய படங்கள் இயக்கினார். அவர் படங்களில் நடித்தேன்.
இன்னொரு இயக்குநர் ஒருவர், சில படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். அவர் படத்தில் தமிழை தவறாக உச்சரிக்கச் சொன்னார். தமிழில் அந்த வார்த்தை நீங்கள் சொல்வது போலவராது என்றேன். “அந்த கேரக்டர் தமிழை தப்பா பேசற மாதிரி இருந்தா பேசறேன். மற்றபடி நீங்க சொல்றது சரியில்லை” என்றேன். அவர், “கேரக்டர்லாம் பேசறீங்களே, உங்களுக்கு தமிழ் தெரியுமா?” என்று கேட்டார். உடனே சங்கத்தமிழில் இருந்து ஒரு பாடலைச் சொல்லி, இந்தளவுக்குத் தமிழ் தெரியும் என்றேன். பிறகு, “நீங்கள் எனக்கு தமிழ் தெரியாது என்று சொன்னால் சொல்லிவிட்டு போங்கள், எனக்கு பிரச்சினையில்லை” என்றேன். இதற்காகவே அவர் என்னை அவமானப் படுத்தினார்.
இதே போல சினிமா துறையில் பலர் என்னை அவமானப் படுத்தி இருக்கிறார்கள். அதைக் கண்டு துவண்டு போகவில்லை. போராடிப் போராடிதான் இன்று இறைவன் புண்ணியத்தில் ஓரளவுக்கு வந்திருக்கிறேன். உழைக்கிறேன், உழைத்துக் கொண்டிருக்கிறேன். உழைத்துக் கொண்டே இருப்பேன். இன்று இளம் இயக்குநர்கள் “இந்த வசனத்தை எப்படி பேசலாம்?” என்று கேட்கிற அளவுக்கு என் மேல் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். இந்தளவுக்கு வாய்ப்பை கொடுத்திருப்பதற்காக இறைவனுக்கும் இயக்குநர்களுக்கும் நன்றி சொல்கிறேன்.
(திங்கள்தோறும் பேசுவோம்)