சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நான் நடிப்பதற்கான இன்ஸ்பிரேஷனாகவும் நான் மலையாளத்தில் பேசுவதற்கு காரணமாகவும் இருந்தவன் என் நண்பன் பிரசாத். பட்டாபி கதாபாத்திரத்துக்கான காரணகர்த்தாக்களில் அவனும் ஒருவன். எங்கள் வீட்டைத் தாண்டி நான்கைந்து வீடுகள் தள்ளி அடுத்த வீட்டில் வசித்து வந்தான். என் வீட்டுக்கும் நண்பன் கோபி வீட்டுக்கும் நடுவில் இருந்தது அவன் வீடு.
தாய்மொழி தமிழ்தான் என்றாலும் கேரளாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் நானும் அவனும் மலையாளத்தில்தான் பேசிக் கொள்வோம். என் மலையாளப் பேச்சு சிறப்பாக மாறுவதற்கு அவனிடம் பேசிப் பழகியதே காரணம். என் நண்பன் கோபியும் நானும் எந்த அளவுக்கு ஒன்றாக சுற்றினோமோ, அந்தளவுக்குப் பிரசாத்தும் என்னுடன் ஒன்றாக சுற்றுவான்.
அவனுடைய அப்பா பத்மநாபன், மயிலாப்பூரில் ஆட்டோ கன்சல்டன்டாக இருந்தார். அந்த காலத்தில் செல்போன் கிடையாது என்பதால் ‘லேண்ட்லைனி’ல் ஃபோன் வந்தாலோ அல்லது அவர் யாருக்காவது பேசினாலோ, “பத்மநாபன் ஃபிரம் மைலாப்பூர்” என்றுதான் ஆரம்பிப்பார்.
அவர் இப்படிச் சொல்வதை நானும் அவனும் அவர் அருகில் இல்லாதபோது கேலி செய்து சிரிப்போம்! பிரசாத்தும் நானும் திடீரென்று பாரிஸ் கார்னர் போவோம். அங்கு டீ குடித்துவிட்டு எதையாவது பேசிக்கொண்டு நடந்தே ராயப்பேட்டை வருவோம்.
அடிக்கடி சினிமாவுக்கு செல்வது எங்கள் வழக்கம். அன்றிரவு கமல் அண்ணாவின் ‘மூன்றாம்பிறை’ படம் பார்க்க சத்யம் தியேட்டருக்கு குஷியாக கிளம்பினோம்.(ரூ.2.90 தான் ஹை க்ளாஸ். காசில்லாத காரணத்தால் நாங்கள் ரூ. 1.10 டிக்கெட்தான்) கோவிந்தன் என்ற இன்னொரு பால்காரர் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு நாள் இரவு, மது போதையில் தள்ளாடியபடி அவர் வீட்டுக்கு வெளியே ஒரு குப்பைத்தொட்டியில் காலை தூக்கி வைத்து நின்று கொண்டிருந்தார்.
அவர் எப்படி என்றால், ஒரு சர்பத் கிளாஸில் அரை கிளாஸுக்கு சாராயத்தை ஊற்றி வைத்திருப்பார். அருகில் கோலி சோடா இருக்கும். அதைத் திறந்து வைத்திருப்பார். கேஸ் வெளியே போய் வெறும் தண்ணீராகத்தான் அது இருக்கும். யாராவது அவரை தாண்டி சென்றால், “ஏய் எங்க போய்னுகிற?” என்று கேட்பார். “கடைக்கு போறேன் நைனா” என்று சொன்னால் பின்னால் திரும்பி அந்த மது கிளாஸை பார்த்துவிட்டு, “ஒண்ணியும் இல்ல.. நீ போ” என்பார். யார் போனாலும் அதையேதான் செய்வார்.
பிறகு கோலி சோடாவில் கொஞ்சம் குடித்துவிட்டு, அந்த சோடா பாட்டிலுக்குள் மதுவை ஊற்றுவார். ரோட்டை பார்த்தவாறு நின்று குடிப்பார். “ஏன் இப்படி பண்ற நைனா?” என்று கேட்டால், “நாம குடிக்கிறோம்னு யாருக்கும் தெரியக்கூடாதுடா” என்பார். கேட்பவர்கள் சிரிப்
பார்கள். ஐம்பது மில்லி குடித்து விட்டு அவர் பண்ணுகிற அலப்பறை தாங்க முடியாது. இப்போதும் அவர் போதையில் நின்றதால் பிரசாத்திடம், “டேய், கோவிந்தன் நைனா தண்ணி போட்டுட்டு நிற்கிறாரு. அந்தப் பக்கம் பார்க்காம, சத்தம் போடாம வா. பிடிச்சுட்டாருன்னா தொந்தரவாகி போவும்” என்று பிரசாத்திடம் சொன்னேன். சரி என்று அமைதியாக வந்தான்.
அப்போது எதிரில் அந்தப் படத்தை பார்த்துவிட்டு தெருக்கார பையன் ஒருவன் வந்தான். அவனைக் கண்டதும் உற்சாகத்தில் இவர் நிற்பதை மறந்து விட்டு பிரசாத், “படம் எப்படி?” என்று அவனிடம் சத்தமாக கேட்டு விட்டான். அவனும், “சூப்பர்டா...” என்றார். “யார் டைரக் ஷன்?” என்று இவன் கேட்டதும், “பாலுமகேந்திரா” என்றான் அந்த பையன். போதையிலிருந்த கோவிந்தன் நைனா இதைக்கேட்டதும், “இவன் என்ன பெரியாளா, அவன் என்ன பெரியாளா? நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்... பாலு மகேந்திரா?” என்று கத்த ஆரம்பித்தார்.
பிறகு தொடர்ந்து, “நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன், பாலு மகேந்திரா” என்றார். எதையாவது சொல்லிவிட்டு அந்த வார்த்தையை முடிக்கும்போது, “பாலு மகேந்திரா” என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஏன் அப்படி சொன்னார் என்று இன்று வரை எனக்கு புரியவில்லை. பிறகு அவர் கவனிப்பதற்குள் நாங்கள் தாண்டி வந்துவிட்டோம்.
“உன்னை பேசாம வான்னுதானே சொன்னேன். யாரு டைரக்டரா இருந்தா உனக்கென்ன?” என்று கேட்டேன். “யாருன்னு தெரிஞ்சுக்கிறதுல என்னடே தப்பு?” என்றான் அவன். பிறகு படம் பார்த்து விட்டு நள்ளிரவு வீட்டுக்கு திரும்பினோம். (நடந்தேதான்..) அவனுடைய வீட்டை ஒட்டி ஒரு சந்து உண்டு. அதற்குள்தான் கோவிந்தன் நைனா வீடு.
இவன் வீட்டுக்கு போகும் போது அப்போதும் அவர் ஓரத்தில் நின்று எதையோ உளறியபடி கடைசியில், “பாலு மகேந்திரா, பாலு மகேந்திரா” என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவனிடம், “இன்னைக்கு நீ சிக்குனடா” என்று சொல்லி விட்டு என் வீட்டுக்கு சென்று விட்டேன்.
மறுநாள் காலையில், என் வீட்டுக்கு கீழே நின்று, “டே பாஸ்கர், டே பாஸ்கர்...” என்று கத்திக் கொண்டிருந்தான். நான் தூக்கக் கலக்கத்தில் மாடியிலிருந்து எட்டிப் பார்த்து, “என்னடா?” என்றேன். “கீழ வாடே” என்றான். இறங்கி வந்து என்னடா? என்றேன். “இனிமே உங்கூட சினிமாவுக்கு வரக்கூடாதுடே..” என்றான். ஏன்? என்று கேட்டேன். “நைட்டு போயிட்டே இருந்தேன். எங்க வீட்டுக் கதவை தட்டினதும், கோவிந்தன் “திருடன் திருடன்“னு கத்திட்டாருடா.
எல்லா வீட்டுலயும் லைட்டை போட ஆரம்பிச்சுட்டாங்க. நான் பயந்து அவர் வீட்டு சந்து வழியா ஓடிப்போயி எங்க வீட்டு பின்பக்கச்சுவர்ல ஏறி குதிக்க நினைச்சேன். சுவர் உயரமா இருந்ததால முடியல. ஒரு இடத்துல கீழே கருப்பா, மேடை மாதிரி இருந்துச்சு. நான் அது மேல ஏறி சுவர்ல கால் வச்சேன் பாரு, அது எருமைமாடுன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. டமார்னு அது எழுந்துப்புடுத்துடே... நான் அப்படியே என் வீட்டுக்குள்ள பொத்துன்னு குப்புற விழுந்துட்டேன். கை, கால்ல அடி. இங்க பாருடா கை, காலு வீங்கிருக்கு” என்று காண்பித்தான். இருவரும் விலா நோக சிரித்தோம்.
பிறகு நான் போரூருக்கு குடிபெயர்ந்து விட்டேன். தீவிரமான ஐயப்ப பக்தனான அவனை சந்திக்க முடியவில்லை. அவனும் எங்கோ சென்று விட்டான். இப்போது போனில் தொடர்பில் இருக்கிறான். நாமக்கல்லில் உள்ள கோயில் ஒன்றில் அர்ச்சகராக இருக்கிறான். நீண்ட காலத்துக்கு பிறகு,
சமீபத்தில் அவனைச் சந்தித்து பழங்கதை பேசி, சிரித்து மகிழ்ந்துவிட்டு வந்தேன்.
இப்படி நானும், அவனும், கோபியும் சென்னையில் சுற்றாத இடமில்லை. பார்க்காத திரைப்படங்கள் இல்லை. அதெல்லாம் இப்போது மலரும் நினைவுகளாக இருக்கின்றன. எப்போதாவது தனியாக அமர்ந்தால் எங்கள் சிறுவயது சேட்டைகளும் ஜாலியாக அடித்த அரட்டைகளும் மனதுக்குள் நீந்திக்கொண்டிருக்கும். என் மலையாளப் பேச்சுக்கு பலர் பேர் காரணம் என்றாலும் இவனும் ஒரு காரணமாக இருந்தான். சில படங்களில் இவனுடைய ஸ்டைலையும் மேனரிசத்தையும் பயன்படுத்தி இருக்கிறேன்.
( திங்கள்தோறும் பேசுவோம் )