பட்டாபிக்குள் வந்த அப்பாவி நண்பன்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 11

பட்டாபிக்குள் வந்த அப்பாவி நண்பன்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 11
Updated on
2 min read

​நான் நடித்த பட்டாபி கதா​பாத்​திரத்​துக்​கான காரணகர்த்​தாக்​களாக மூன்று பேரை சொல்​லி​யிருந்​தேன். பலசாலி​யான குப்​பப்பா ஒரு​வர் என்​றால், இன்​னொரு​வன் அப்​பா​வித்​தன​மான என் நண்​பன் கோபி.

ராயப்​பேட்டை அம்​மையப்ப முதலி தெரு​வில், எங்​கள் வீட்​டிலிருந்து பத்து வீடு தள்ளி இருந்​தது, கோபி​யின் வீடு. எப்​போதும் என்​னுடன்​தான் இருப்​பான் கோபி. அவ்​வளவு நெருக்​க​மான நண்​பன்.

அவனுடைய தந்தை வெங்​கட்​ராமன், மவுண்ட் ரோட்​டில் உள்ள தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் வேலை பார்த்​தார். காலை​யில் எங்​கள் வீட்டை அவர் தாண்​டிச் செல்​கிறார் என்​றால், மணி ஏழே கால் என்று அர்த்​தம்.

அந்த நேரத்தை அவர் எப்​படிச் சரி​யாகத் தொடர்​கிறார் என்​பது எங்​களுக்கு ஆச்​சரிய​மாக இருக்​கும். அவர் அப்​படியே நடந்து பழைய ஓடியன் தியேட்​டர், மிட்​லண்ட் தியேட்​டர் வழி​யாக சென்று மவுண்ட் ரோட்​டில் உள்ள அலு​வல​கத்​துக்கு செல்​வார்.

மாலை​யிலும் சரி​யாக ஆறரை மணிக்கு வீட்​டுக்கு வந்​து​விடு​வார். கோபி​யின் அம்மா கற்​பகம். என் வீட்​டில் அம்​மாவோ, அப்​பாவோ, அல்​லது நாங்​கள் குடும்​ப​மாக எங்​காவது வெளி​யில் கிளம்​பு​கிறோம் என்​றால், “டேய் போய் கற்​பகம் மாமியை கூட்​டிட்டு வாடா... எதிர்ல வரச்​சொல்​லு” என்​பார்​கள்.

அவர் எதிரில் வந்​தால் செல்​லும் காரி​யம் நன்​றாக நடக்​கும் என்​பதும் நல்ல சகுனம் என்​பதும் அவர்​கள் நம்​பிக்​கை​யாக இருந்​தது. கற்​பகம் மாமிக்கு கொதிக்​கும் வெயி​லாக இருந்​தா​லும் செருப்பு போடத் தெரி​யாது. செருப்பு அணிந்​தால் ஒரு கால் கீழ்ப்​பக்​க​மும் ஒரு கால் மேல் பக்​க​மும் போகும். அவர்​களுக்கு நான்கு மகன்​கள், ஒரு மகள்.

அதில் ஒரு மகனான கோபி என் நெருக்​க​மான நண்​பன். எப்​போதும் எங்​கள் வீட்​டில்​தான் இருப்​பான். பல நாட்​கள் இரவு​களில் ஒன்​றாக, ஒரே கட்​டிலில் தூங்​கி​யிருக்​கிறோம். பள்​ளி​யில் படிக்​கும் போது அவன் சிறந்த கால்​பந்து வீரன்.

அதே போல கேரம்​போர்​டும் அரு​மை​யாக விளை​யாடு​வான். நானும் அவனும் வீட்​டின் பின் பகு​தியி​லிருந்த அறை​யில் கேரம்​போர்டு விளை​யாடு​வோம். நான் 23 பாயின்ட்ஸ் எடுத்​திருந்​தால், அவன் 28 பாயின்ட்ஸ் எடுத்​திருப்​பான். அவன் 23 பாயின்ட்ஸ் எடுத்​திருந்​தால் நான் 28 எடுத்​திருப்​பேன்.

யார் ரெட் அண்ட் ஃபாலோ போட்​டாலும் ஆட்​டம் முடிந்​து​விடும். அவன் ரெட் போட்​டு​விடு​வான். ஃபாலோ காயின் போடும்​போது​தான், தலை​மைச் செயல​கத்​தில் வேலை​பார்த்​துக் கொண்​டிருந்த என் தம்பி வீட்​டுக்​குள் வரு​வான். அவனைப் பார்த்​ததும் கோபிக்​குக் கொஞ்​சம் பதற்​றம் வரும்.

ஃபாலோ போடும் நேரத்​துக்கு என் தம்பி வேண்​டுமென்றே ‘அச்​’சென்று பலமாக தும்​மு​வான். அந்த ஜெர்க்​கில் ‘பாலோ காயின்’ உள்ளே போகாமல் வெளியே வந்​து​விடும். கோபி அவனை முறைப்​பான்.

பிறகு நான் ரெட் எடுத்து வைத்து போடு​வேன். அடுத்து ‘ஃபாலோ’ போடும்​போது, என்​னை, “கொஞ்​சம் வெயிட் பண்​ணு” என்​பான் கோபி. என் தம்​பியைப் பார்த்​து, “இப்ப தும்​மேண்​டா’ என்​பான் கோபி! ‘எனக்கு வரலை மாமு” என்​பான் என்​தம்​பி! “அதெப்​படி​டா? மத்​தவன் விளை​யாடும் போது வர்ற தும்​மல் சொந்த அண்​ணன் விளை​யாடும் போது வரமாட்​டேங்​குது?” என்று கேட்​பான் கோபி.

இப்​படி கூத்​தும் கும்​மாள​மு​மாக கழிந்த காலங்​கள் அவை. அவனுடைய அப்​பா​வித்​தனத்​துக்கு ஒரு உதா​ரணம் சொல்​கிறேன். ஒரு நாள் மளி​கைக் கடை​யில் பெரிய சண்​டை. “மரி​யாதையா கொடு, என்னை ஏமாத்​தலாம்னு நினைக்​கிறி​யா?” என்று கடைக்​காரரிடம் சொல்​லிக் கொண்​டிருந்​தான்.

கடைக்​காரப் பையன், “அப்​படிலாம் கம்​பெனி​யில கொடுக்​கலை​யே?” என்று சொல்​லிக் கொண்​டிருந்​தான். “டி.​வி-​யில தின​மும் பலவாட்​டிச் சொல்​லிட்​டிருக்​கான், ஏமாத்​தறீங்​களா?” என்று கேட்​டுக் கொண்​டிருந்​தான். நான் அவன் சண்​டை​யிடு​வதைப் பார்த்​து, “என்​னென்னு சொல்​லு​டா, நான் வாங்​கித் தரேன்’ என்​றேன். அவன், “நீ தலை​யி​டாத, உன் வேலையை பாரு” என்று சொல்லி விட்​டான்.

கடைக்​காரனுக்​கும் ஒன்​றும் புரிய​வில்​லை. டி.வி விளம்​பரத்​தில், “வாங்​கிடு​வீர் கோல்​கேட், பெற்​றுடு​வீர் பாது​காப்பு வளை​யத்​தை” என்று சொன்​ன​தில், அவன் பாது​காப்பு வளை​யத்தை கேட்டு அடம்​பிடித்​துக் கொண்​டிருந்​தது பிறகு​தான் தெரிந்​தது. அவனுக்கு அதை விளங்க வைப்​ப​தற்​குள் போதும் போதும் என்​றாகி​விட்​டது எனக்​கு. அவ்​வளவு அப்​பா​வி.

எனக்கு ‘டை​பாய்​டு’ வந்த நேரத்​தில் இரவு பகலும் என்​னுடன்​தான் இருந்​தான்! எப்​போதும் பேசிக்​கொண்​டும் சிரித்​துக் கொண்​டும் இருப்​போம். அங்​குள்ள செவிலியர்​கள், “நீங்க பேஷன்ட் மாதிரி தெரியலை​யே, ஜாலியா டூர் வந்த மாதிரி சிரிச்​சிட்டு இருக்​கீங்​களே?” என்​பார்​கள்.

அந்த மாதிரி ஓர் அரு​மை​யான, அப்​பாவி நண்​பன். அவனுடைய அப்​பா​வித்​தனத்​துக்கு நிறைய உதா​ரணம் சொல்ல முடி​யும். இவனிடம் இருந்​து​தான், பட்டாபி கதா​பாத்​திரத்​துக்​கான அப்​பா​வித்​தனத்தை எடுத்​துக் கொண்​டேன்.

இப்​போது விரு​கம்​பாக்​கத்​தில் இருக்​கிறான், எழுபத்தி மூன்று வயதாகிறது அவனுக்​கு. உடல் உபாதைகளால் அவனுக்கு சில நினை​வு​கள் தப்​பி​விட்​டன. சமீபத்​தில்​தான்​ அவனைப்​ பார்த்​து, பழைய விஷ​யங்​களைப்​ பேசி, சிரித்​து மகிழ்​ந்​துவிட்​டு வந்​தேன்​.

( திங்கள்தோறும் பேசுவோம் )

பட்டாபிக்குள் வந்த அப்பாவி நண்பன்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 11
குப்பப்பாவின் வீர தீர பிரதாபங்கள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in