‘பட்டாபி’ கதாபாத்திரத்தின் காரணகர்த்தாக்களில் ஒருவரான குப்பப்பா பற்றி கடந்த வாரம் பேசியிருந்தேன். அவர் என்னைப் பெறாத அப்பா. தைரியசாலியான அவர், அப்பாவித் தனத்திலும் உச்சமானவர். அவர் கையை பிடித்துப் பார்த்தால் இரும்பு மாதிரி இருக்கும். வலிமை என்றால் அப்படியொரு வலிமை. நான் அவர் கையை அழுத்திப் பார்த்து விட்டு, “இப்படி ஸ்ட்ராங்கா இருக்கே, என்ன நைனா சாப்பிடுவே..? என்று கேட்பேன். அவர், “அந்த காலத்துலே வெள்ளைக்காரன் ஆட்சி...” என்று ஆரம்பிப்பார்.
“இங்க பாரு, என்ன சாப்பிடுவேன்னு கேட்டா, அதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்று சொல்வேன். “ஏய், சொல்றத்த கேள்டா? கழுத்து மேல அடிக்கபோறேன்” என்பார். பிறகு, “காலையில் எழுந்து, பல்லு தொலக்கிட்டு ஒரு சொம்பு நீச்தண்ணி (நீராகாரம்) குடிப்பேன். குடிச்சுட்டு, ரெண்டு அவுன்ஸ் ஜிஞ்சர் சாப்பிடுவேன்” என்பார்.
'ஜிஞ்சர்' என்பது அந்தக் காலத்து மதுபானம். அதைக்குடித்தால், நான்கு இட்லி சாப்பிடுகிறவர், இருபது இட்லி சாப்பிடுவார்களாம். அப்படிப் பசிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
பிறகு, “ விடிகாலை மூன்றரை மணிக்கு போயி, மாடுங்க இருக்கிற லாயத்தை (தொழுவத்தை அவர் லாயம் என்பார்) கழுவுவேன். அப்ப எங்கிட்ட நூத்தம்பது மாடு இருந்ததுடா. கெணத்துல இருந்து நூறு நூத்தம்பது குடம் தண்ணி வலிப்பேன்! அப்பால நாலு நாலரை மணிக்கா அமீன் ஓட்டலுக்கு மாடு ஓட்டிகினு போவேன், பால் கொடுக்கறதுக்கு.
போவ சொல்லோ ரெண்டு அவுன்ஸ் ஜிஞ்சர் சாப்பிடுவேன். ஓட்டலுக்கு பாலு கறந்து ஊத்துவேன். அந்த விடிகாலையிலேயே எல்லாம் சுடச்சுட ரெடியாயிரும். அப்ப கால் பிளேட்டு புலவு (பிரியாணி) ஒரு அணா (6 காசு). எட்டு கால் பிளேட்டு புலவு , 25 பரோட்டா, ஒரு பிளேட்டு சாப்ஸ் துண்டுவேன் ! அப்பால ஊட்டுக்கு வந்து ரெண்டு அவுன்ஸ் ஜிஞ்சர் சாப்பிடுவேன். லாயத்து வேலையை முடிச்சுட்டு வந்தா, உங்கம்மா இட்லி சுட்டு வச்சிருப்பா. ஒரு 40, 50 இட்லி துண்டுவேன்” என்பார்.
அவர் சொல்வது பொய்யாக இருக்குமோ என்று நினைப்பேன். பிறகு அவரே தொடர்வார், “சாயங்காலமா, நம்ம பொன்னன், கிஷ்ணன்னு எல்லா சினேகித காரங்களும் சேர்ந்து, ஆளுக்கொரு (ஆட்டு) தொடை வாங்கினு கோபாலபுரம் மைதானத்துக்குப் போவோம். ஆட்டுத் தொடையை எங்க கால்ல கட்டிக்கினு ‘செடி குச்சு பாணா (சிலம்பம்) விளாடுவோம்.
விளையாண்டு முடிச்சா, ஒடம்பு சூட்டுலயே ஆட்டுத் தொடை வெந்திருக்கும்...” “கொஞ்சம் பொறு, இதுலாம் நம்பற மாரியா இருக்கு?” என்பேன் நான். அவர், “என் ஒடம்பு ஹீட்டு அப்படி இருக்குன்டா” என்று தொடர்வார். அவர் பேசுவதைக் கேட்கக் கேட்க அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். “அதை உப்பு, மிளகு தூவி துன்னுடுவோம். ஊட்டுக்கு வந்து குளிச்சுட்டு முருகரை கும்புட்டு ரெண்டு அவுன்ஸ் ஜிஞ்சர் சாப்பிடுவேன். உங்கம்மா சோறு போடுவா... அப்படியே வளர்த்த உடம்பு இது” என்பார்.
அவர் சொல்வது பொய்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவருக்கு வயதானபோது, மதுபோதையில் என் கையை பிடித்துக் கொள்வார். “ஏய் நைனாவ இட்டுனு போயி வீட்டுல படுக்க வையிடா” என்பார். நான் அழைத்துச் செல்வேன். அப்படிச் செல்வதால், அம்மாவுக்கு என் மேல் கோபம்.
“இந்தாளு குடிச்சுட்டு ரோட்டுல அலையறான், நீ கூட்டுட்டு வந்து படுக்க வைக்கிற?” என்று திட்டுவார். அந்த திட்டு எனக்கு தாலாட்டு மாதிரி. ஒரு நாள் நைனா, 5 ரூபாய் கொடுத்து 30 இட்லி வாங்கிவிட்டு வரச் சொன்னார். வீட்டில் உள்ளவர்களுக்கும் சேர்த்து வாங்கி வரச்சொல்கிறார் என நினைத்துக் கொண்டேன். ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் ராஜேந்திர பவன் என்ற ஓட்டல் இருந்தது. அங்கு ஒரு இட்லி 15 காசு. பெரிய சைஸ் இட்லி. 30 இட்லி, கெட்டி சட்னி, சாம்பார் வாங்கிக் கொண்டு போனேன். அப்போது தையல் இலை என்ற இலை இருந்தது. அதில்தான் இட்லியைக் கட்டிக் கொடுப்பார்கள். அந்த இலையின் மணம் இட்லியின் சுவையைக் கூட்டும்.
வீட்டுக்குச் சென்றதும், “இட்லி வாங்கிட்டு வந்துட்டேன் நைனா” என்றேன். “பிரிச்சு வை” என்றார். தட்டை எடுத்து வரச்சொல்லி எல்லோருக்கும் கொடுப்பார் என நினைத்தேன். சட்னி, சாம்பார் எல்லாவற்றையும் மொத்தமாக அந்த இட்லியில் ஊற்றி, சாதம் மாதிரி குழைத்துச் சாப்பிட ஆரம்பித்தார். ஒரு மனிதர், கண் முன்னால் 30 இட்லியை சாப்பிட்டதால் ஆச்சரியம். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பிறகு சம்பவம் ஒன்றைச் சொன்னார். “ஒரு நாள் விடிகாலைல கோபாலபுரம் பக்கம் பால் கறக்கறதுக்காக போயிட்டிருந்தேன். அப்ப குன்றத்தூரு முருகனுக்கு முடி விட்டிருந்தேன். அப்ப ஒரு பொம்பள நெகா (டைம்) தெரியாம வந்துட்டுடா. யாரோ ஒருத்தன் விரட்டிட்டு வந்திருக்கான் . அந்த பொம்பள பயந்துபோயி, என்னாண்ட சின்ன முட்டை விளக்கு இருக்கு பாரு... அங்க வந்து நின்னுகிட்டு, “எப்பா... வெரட்டிட்டு வர்றாம்பா..' ன்னு சொல்லுச்சு. நான் பார்த்தேன்.
ஆறடி உயரத்துல ஒருத்தன் நின்னுட்டு இருந்தான். செமத்தியா இருந்தாம்பா. ‘ஏம்பா வெரட்டுற?’ன்னு கேட்டேன் பாரு, அவன் என்னமோ இங்லீஸ்ல சொன்னான்டா. உடனே குனிஞ்சு அணை கயித்தை (மாடு உதைக்காமல் இருப்பதற்கு கால்களைச் சேர்த்துக் கட்டுவதற்கான கயிறு) எடுத்தம்பாரு, அந்த நிமிட்ல (நிமிடம்) என் கன்னத்துல ஷூ கால்ல விட்டான்டா ஒரு உதை, சும்மா கிர்ர்ருனு ஆயி போச்சுடா எனக்கு.
ஆனா, செமத்தியா அடிச்சாண்டா அவன்...” “ஐயையோ பின்ன என்ன பண்ணுன நைனா?” “கயித்தை வச்சு அடிச்சேன் பாரு அவனை, என்னமோ சொல்லி கத்துனாண்டா... அப்படியே அடிச்சு செருக்காத்தம்மன் கோயிலு வரை (அரை கி.மீ தூரம்) விரட்டி விட்டேண்டா. ஆனா, அவன் நல்லா அட்சாண்டா என்னைய. ' என்று தன்னை அடித்ததை நினைத்து வருந்தாமல் அவனது வலிமையையும் புகழும் கபடமற்ற மனிதர் குப்பப்பா! அவருடைய வீர தீர பிரதாபங்கள் எக்கச்சக்கம். ஆனால், அவருக்கும் எனக்கும் நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு.
அப்போது, ‘டூத் அண்ட் கிளா' (Tooth and claw) என்ற ஆங்கிலப்படம் பைலட் தியேட்டரில் வந்திருந்தது. விலங்குகளைப் பற்றிய திரைப்படம் அது. அதுபற்றி கேட்டார். “ஏன்டா பைலட் தியேட்டர்ல ஒரு படம் விளையாடுதாமே (ஓடுகிறதாமே), பாத்தியா?” என்று கேட்டார். பார்த்தேன் என்று சொல்லிவிட்டு, “உன்னை இட்னு போறேன் நைனா” என்றேன். “நீ சொல்லிட்டிருப்பே, இட்னு போவமாட்டடா” என்றார்.
பிறகு நாங்கள் போரூக்கு குடிபெயர்ந்ததால் அவருடைய தொடர்பு விட்டுவிட்டது. அவர் காலமாகிவிட்டார். கடைசியாக அவர் முகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அவரை தியேட்டருக்கு அழைத்துப் போகும் ஆசை, நிறைவேறாததாகி விட்டது. இனி எந்த ஜென்மத்தில் நைனாவை பார்க்கப்போகிறேன் என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது.
( திங்கள்தோறும் பேசுவோம் )