கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள ‘அருள்வான்’ படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ், ஜான் விஜய், பேபி கிருத்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
வரும் 17ம் தேதி வெளியாகும் இப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் எஸ்.ஜி சரவணன் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் வழங்குகிறார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினருடன் இணை தயாரிப்பாளர் சுபா சரவணன், இணை தயாரிப்பாளர்கள் சரண், சரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் அருள்நிதி கூறும்போது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு, 5 நாட்கள் கால்ஷீட் போதும் என்றார். பிறகு படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றவுடன் 5 நாள் என்பது 10 நாளாகவும் பிறகு 15 நாளாகவும் பின் 20 நாளாகவும் சென்றது. இப்படத்தின் கதையைக் கேட்ட பிறகு நான் முழு நீள படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதையை, கதாபாத்திரத்தை என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா ? எனத் தெரியாது.
இந்தப் படத்தில் முத்து வேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து பேசியிருக்கும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.