ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய ஆரவ், சில படங்களில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது மீண்டும் கதாநாயகனாக 2 படங்களில் நடிக்க இருக்கும் அவர், சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். அவருடைய அடுத்தடுத்தப் படங்கள் குறித்து பேசினோம்.
ஹீரோவாத்தானே நடிக்க ஆரம்பிச்சீங்க. ஏன் திடீர்னு வில்லன் பாசம்?
ஹீரோவாகத்தான் ஆரம்பிச்சேன். ஆனா, ஒரு நல்ல கதை இருக்கு; அதுல நம்மை சிறப்பா வெளிப்படுத்தறதுக்கு ஸ்கோப் இருக்கு, வில்லனா பண்ணினா இன்னும் பவர்புல்லா இருக்கும்னு நினைச்சு தான் ‘கலக தலைவன்’ ல நடிச்சேன்.
அப்புறம் அஜித் சாரோட ‘விடாமுயற்சி’ வரும் போது, ஒரு டாப் ஹீரோவோட நடிச்சா நல்ல ரீச் கிடைக்கும், அவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்க முடியும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் பண்ணினேன். அப்படி நடிச்சதுல எனக்கு பெருமைதான். இப்ப ஹீரோவா நடிக்க அதிக வாய்ப்பு வருது. இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு நினைக்கிறேன்.
ஒவ்வொரு படத்துக்கும் ஏன் அதிக டைம் எடுத்துக்கறீங்க?
நான் இன்டஸ்ட்ரிக்கு வந்து 10 வருஷமாகப் போகுது. இன்னைக்கு மக்கள் எல்லாவிதமான படங்களையும் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. பார்வையாளர்களை தியேட்டருக்கு வர வைக்கிற அளவுக்கு உற்சாகமான கதைகள்தான் தேவை. நாம நடிக்கிற படம், தியேட்டர்ல போய் மக்கள் பார்க்கணும்னு நினைக்கிறதா இருக்கணும். இன்னைக்கு பார்வையாளர்கள், இது நல்ல படமா? இல்லையாங்கறதை டிரெய்லர் பார்த்தே முடிவு பண்ணி டறாங்க.
அதனால, வருஷத்துக்கு ஒரு படம் பண்ணினாலும் சரியான படமா கொடுக் கணும்னு நினைக்கிறேன். அதுக்காக நல்ல கதைகளைத் தேர்வு பண்றது கஷ்டமா இருக்கு. ரொம்ப நேரம் எடுக்குது. 2 மணி நேரம் பார்வையாளர்களை மகிழ்விக்கிறதுக்காக ஏழு, எட்டு மாசம் அதுக்குள்ளயே சுத்த வேண்டியிருக்கு.
ஓடிடி வந்த பிறகு நடிகர்கள் பிசியாயிட்டாங்கன்னு சொல்றாங்களே..?
சில ஆண்டுகளுக்கு முன்னால அப்படி இருந்தது. இப்ப அப்படி யில்லை. வெப் தொடர்கள் எண்ணிக்கையே குறைஞ்சிடுச்சே. இப்ப சினிமா நிறைய உருவாகுது. அப்படி வர்றது ஆரோக்கியமானது தான்.
திடீர்னு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கீங்களே, ஏன்?
அது திடீர்னு இல்லை. ஏற்கெனவே முடிவு பண்ணி வச்சிருந்ததுதான். இங்க ஒரு நடிகனா இருக்கறதே பெரிய பொறுப்புதான். இப்ப எப்படி இருக்குன்னா, ‘நமக்கு சம்பளம் கிடைச்சிருச்சு; ஹீரோவா வந்து நடிச்சுட்டுப் போனா போதும்’னு சும்மா உட்கார முடியாது.
அந்த கதையை தேர்வு பண்ணி, அப்புறம் புரொடக் ஷன் கூட உட்கார்ந்து எப்படி பண்ணலாம், எவ்வளவு நாள்ல படத்தை ரிலீஸ் பண்ணணும், எப்படி புரமோஷன் பண்ணணும்?னு நிறைய பிளான் போட வேண் டியிருக்கு. படங்களை சரியா வெளியிடணும்னுதான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன். அதுமட்டுமில்லாம அதுல நமக்கு சுதந்திரம் கிடைக்கும்.
நிறைய ஹீரோக்கள் தயாரிப்பாளரா ஆனதுக்கும் இதுதான் காரணமா இருக்குமா?
இருக்கலாம். தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நிறைய பணம் சம்பாதிக்கணும்னு இல்லை. தயாரிப்பாளர் ஆகறதே பெரிய அழுத்தம். இருந்தாலும் அதை ஏன் தொடங்குறாங்கன்னா, ஒரு ஹீரோவா உங்களை நிலை நிறுத்திக்க, அது தேவையா இருக்கு. முதல்ல பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமா இருந்தது. சினிமா பற்றி நல்லா தெரிஞ்சவங்க இருந்தாங்க.
இந்த ஹீரோவை வச்சு, இவ்வளவு பட்ஜெட்ல படம் எடுத்தா, இவ்வளவு பிசினஸ் பண்ண முடியும் அப்படிங்கற தெளிவு இருந்துச்சு. இன்னைக்கு அப்படி இல்லை. எல்லோருக்கும் சம்பளம் ஏறிபோச்சு, பட்ஜெட் அதிகமாயிடுச்சு. ஆனா, பிசினஸ் மட்டும் அப்படியே இருக்குது. அதனால புதுசா வர்ற சில தயாரிப்பாளர்கள் 2 படங்கள்லயே போயிடறாங்க. அதனால ஹீரோவா நமக்கும் பொறுப்பு இருக்கு.
சினிமா பின்னணி இல்லாம என்னை போல எத்தனையோ பேர் ஊர்ல இருந்து கிளம்பி வரணும்னு ஆசைப்படறாங்க. இப்ப நான் இதுல வெற்றி பெறலைன்னா, என்னை போல வர ஆசைப்படறவங் களுக்கு, ‘சினிமா கஷ்டம், வேண்டாம்’அப்படிங்கற எண்ணம் வந்துரும். அதுக்காகத் தொடர்ந்து வெற்றி கொடுக்கணும். அதுமட்டும்தான் நிறைய பேரை சினிமாவுக்குள்ள வரவைக்கும்.
மற்ற மொழி வாய்ப்புகள் எப்படி?
வந்திருக்கு. தெலுங்குப் படத்துக்காக பேசிட்டு இருக்கிறோம். கால்ஷீட் எல்லாம் சரியா அமைஞ்சா அதுல நடிப்பேன். அதுபற்றி அறிவிப்பு வரும். அடுத்து என் தயாரிப்புல எல்லோரும் ரசிக்கிற மாதிரியான ஒரு படம் பண்றேன். வெளி நிறுவனம் ஒன்றுக்கும் ஹீரோவாக நடிக்கப் போறேன்.