தமிழ் சினிமா

இளையராஜாவுடன் இசையிரவு 15 | ‘ஆசைய காத்துல தூதுவிட்டு...’- ஏக்கம் தீரல ஆசையில் பார்க்கும்போது!

குமார் துரைக்கண்ணு

காதல்தோறும் 'தூது'க்கு எப்போதும் பிரிக்கமுடியாத பந்தம் இருக்கும். யுகங்களின் தேவைக்கேற்ப காதலும், காதல் தூதும் மாறிக்கொண்டே வருகின்றன. ஆசை காதலுக்காக காற்றை தூதாக்கி 42 ஆண்டுகள் ஆகிவிட்டன. வெறும் காற்றையே இசையாக்கும் ராகதேவன் இளையராஜா ஆசை காதல் தூதை ஆனந்த பூங்காற்றாக மாற்றியிருப்பார். இந்தப்படமும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருப்பவை. கடந்த 1980-ம் ஆண்டு இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜானி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆசைய காத்துல தூதுவிட்டு' பாடல்தான் அது. பாடலை இசைஞானியின் சகோதரரும், பாடலாசிரியருமான கங்கை அமரன் எழுதியிருப்பார். இப்பாடலை எஸ்.சைலஜா பாடியிருப்பார்.

இருள் சூழ்ந்த இரவின் கரிய நிறம் அந்த வெட்டவெளி முழுவதையும் நிறைத்திருக்கிறது. கொட்டும் பனிக்காக உடலினைச் சுற்றியிருந்த ஆடைகளின் கதகதப்பில் உருவான ஆசையின் வெப்பச் சலனத்தில், கண்ணெதிரேயிருக்கும் நாயகனைப் பார்த்த நாயகியின் மனதிலும், உடலிலும் ஆசைத்தீ பற்றிக் கொள்கிறது. இருவரது கண் காந்த உரசல்கள் எரியும் தீயை மேலும் சூடாக்குகின்றன. பற்றியெறியும் காதல் தீயிலிருந்து எழுந்த புகையாய் இந்த சேதி திசைதோறும் பரவுகிறது. இந்த தவிப்பையும் தகிப்பையும் நாயகனுக்கு எப்படி ஒருசேர உணர்த்துவதென காத்திருக்கும் தருணத்தில் பூக்கிறது பாடலின் தொடக்க இசை.

இந்த இடத்தை இசைஞானி இளையராஜா Bass flute - ஐ கொண்டு தொடங்கியிருப்பார். அந்த இசைக்கருவியின் தேர்வும், அதிலிருந்து பொங்கி வரும் ஒலியின் அடர்த்தியும் நமக்கு வெகு சுலபமாக உணர்த்துகிறது, நாயகியின் ஆழ்மனது விருப்பத்தின் அழுத்தத்தை. அழுந்திப் பெருகும் அந்த குழலிசை வெறுமனே வீசும் காற்றாக நில்லாமல், வாடைக் காற்றைப் போல பாடல் கேட்பவர்களை வாரிச்சுருட்டி வசீகரிக்கிறது.

அதைத்தொடர்ந்து வரும் இழுத்துக் கட்டப்பட்ட தோல் கருவிகளிலிருந்து பிறக்கும் பேரொலி கூடியிருப்போரை குதுகலிக்கச் செய்கிறது. பின்தொடரும், கோரஸ் பாடுபவர்களின் கூட்டுக் குரல்களில், ஏற்றி இறக்கி பாடப்படும் 'ஆ' என்ற ஒற்றைச் சொல்லின் ஊடே அழகாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நாயகியின் தகிப்பும், தவிப்பும். இதை கேட்டபடியே லயித்துக் கிடப்பதற்கு இடம் கொடுக்காமல், சைலோபோன் போன்ற இசைக்கருவியை மீட்டி, பல்லவிக்கு அழைத்துச் செல்வார் இசைஞானி.

பாடலாசிரியர் கங்கை அமரன், பல்லவியை தனக்கே உரிய பாணியில்,
"ஆசைய காத்துல
தூது விட்டு ஆடிய பூவுல
வாடை பட்டு சேதிய
கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை
நின்னு" என்று கவித்துவம் குறையாமலும் இசையிலிருந்து சற்றும் பிசகாமலும் வழக்கு சொல்லாடல்களை நேர்த்தியாக கோர்த்திருப்பார்.

சொல்ல வந்த செய்தியை கண்களின் வழியாக துல்லியமாக கடத்த தெரிந்த நாயகி தனது வாஞ்சையை காற்றில் தூதாக அனுப்புகிறாள். இடைமறிப்பது மரமோ, சக மனுஷியோ எந்த தடுப்புகளையும் ஊடுருவும் அவளது கூரான பார்வை நாயகனின் கண்களிலும் வேர் பரப்பி கிளைவிடுகின்றன. இங்கே தொடங்குகிறது பாடலின் முதல் இடையிசை, பாடலுக்கான சூழலின் மெய்த்தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதில் தீர்க்கம் கொண்ட இசைஞானி தொடக்க இசையில் பயன்படுத்தப்பட்ட Bass flute, கோரஸ் மற்றும் தாளக்கருவிகளோடு, ஷெனாய் என சொற்பமான இசைக்கருவிகளை மட்டுமே முதல் மற்றும் இரண்டாவது சரணங்களுக்கான இடை இசைகளில் பயன்படுத்தியிருப்பார்.

நாயகியின் கருவிழி வழிபரவிய பேரன்பின் படிமங்களை தனது வெண்ணிற கண்படலத்தில் சேர்த்துக் கொண்ட நாயகனின் மனது லேசாக வீசும் காற்றில் அசைந்தோடி அவனது காதலியின் கரங்களை, தூரத்தில் கேட்கும் Bass flute இசையுடன் சேர்ந்து இறுகப் பிடித்துக் கொள்கிறது. நாயகி தந்த காதல் கிறக்கங்களை அப்படியே தனது காதலிக்கு கொடுத்திட வேண்டும் என்ற நாயகனின் ஆசையை பூர்த்தி செய்து உற்சாகமூட்டி பாடல் கேட்பவர்களின் மனங்களில் துள்ளி குதித்தோடும் ஷெனாய் இசை போல நாயகனும் அவனது காதலியும் தாவி குதித்தோடுகின்றனர். பெருங்காற்றில் கைப்பொத்தி எடுத்துச்செல்லும் தீபம் போன்ற தனக்கான காதலை நாயகனுக்கு உணர்த்த இந்தப்பக்கம் நாயகி தீபங்களுடன் மின்னுகிறாள். முக்கோண நினைவுகளைச் சுமக்கும் அந்த காதல் தீபம் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அங்குமிங்கும் அசைந்தாடுகிறது. இங்கிருந்து தொடங்குகிறது பாடலின் முதல் சரணம்.

"வாசம் பூவாசம்
வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிகை
பூ மனம் வீசும்

நேசத்துல வந்த
வாசத்துல நெஞ்சம் பாடுது
ஜோடிய தேடுது பிஞ்சும்
வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது
பார்வையில் சொந்தம் தேடுது
மேடையில" என்று எழுதப்பட்டிருக்கும்.

சைலஜாவின் குரலில் நேசத்துல, வாசத்துல வரும் இடங்களைக் ஒவ்வொருமுறை கேட்கும்போது செவியும் மனதும் சிலிர்த்திருக்கும்.
அதேபோல், முதல் சரணம் முடிந்து, மீண்டும் ஆசைய காத்துல தூதுவிட்டு பல்லவியை பாடும் அந்த மாடுலேஷன்தான் நாயகியின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் உன்னதமான இடமாகும்.

இங்கு தொடங்கும் அந்த இரண்டாவது இடையிசையும் Bass flute-ஐ கொண்டு இசைக்கப்பட்டிருக்கும். வெற்றுடல் மீது கொத்து கொத்தாய் கொட்டியப் பனி, உடல் கடந்து எலும்பு வரை ஊடுருவுவது போல, பாடல் கேட்பவர்களின் மன வெளிக்குள் Bass flute-ன் இசை புகுந்த வேவு பார்க்கும் . அதனைத் தொடர்ந்து வரும் கோரஸ் பாடல் கேட்பவர்களை மயங்கி கிறங்கச் செய்யும். படர்ந்து விரிந்து கிளை பரப்பியிருக்கும் அந்த ஆலமரத்தின் வேர் போன்ற நாயகியின் ஆழ்மன உவகையை அறிந்த நாயகனின் கண்களும், நாயகியின் கண்களின் உராய்வில் க அருகில் எரிந்துகொண்டிருக்கும் தீயையும் குளிர்விக்கிறது. அங்கிருந்து தொடங்குகிறது பாடலின் இரண்டாவது சரணம்.

"தேனு பூந்தேனு
தேன்துளி கேட்டது நானு
மானு பொன்மானு தேயில
தோட்டத்து மானு

ஓடி வர
உன்னை தேடி வர
தாழம் பூவுல தாவுற
காத்துல தாகம் ஏறுது
ஆசையில பாக்கும்
போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில" என்று எழுதியிருப்பார் கங்கை அமரன்.

இன்னும் எத்தனை ஆயிரம் முறை ரசித்து கேட்டாலும் மனதுக்கு புத்துணர்ச்சி தரும் ராகதேவன் இளையாராஜாவின் எத்தனையோ பாடல்களில் இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் எப்போதும் ஒரு தனியிடம் உண்டு.

இந்தப் பாடல் இசைஞானி இளையராஜாவால், 2013-ம் ஆண்டு 'Gundello Godari' என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக "ராத்திரி நேரத்து பாட்டு இது" என்றும், 2015-ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'Shamitabh' திரைப்படத்திற்காக sannatta என்றும் இரண்டு முறை மீட்டிருவாக்கம் செய்யப்பட்டது. அதேபோல் ஆனந்த் மிலிந்த் இசையமைப்பில் , 1995-ம் ஆண்டு 'Angrakshak' என்ற திரைப்படத்தில், Dil mere udass hai எனற பாடலாக மாற்றியிருந்தனர். ஆனால், கங்கை அமரன் வரிகளில் எஸ்.சைலஜா குரலில் 1980-ம் ஆண்டு வெளிவந்த ஆசைய காத்துல பாட்டுக்கு முன்னால் எதுவும் நிற்பதற்கில்லை. இளையராஜாவின் இசை காற்று நாளையும் வீசும்.....

SCROLL FOR NEXT