தமிழ் சினிமா

இளையராஜாவுடன் இசையிரவு 11 | ‘அம்மானா சும்மா இல்லடா’ - என்றும் மறவாத முந்தானைச் சேலையின் வாசம்

குமார் துரைக்கண்ணு

'அம்மா' என்று உச்சரிக்கும்போதே அம்மாக்களின் நினைவுகளோடு, சேர்ந்து ஒட்டிக்கொள்வது இசைஞானி இளையராஜாவின் பாட்டுதான். அம்மாக்களின் சேலை முந்தனை வாசனையைப் போலத்தான், அவரது எல்லா 'அம்மா' பாடல்களும். தன் விரல்களால் தலைகோதி, முந்தனையால் தலை துவட்டி, மடியில் சாய்த்து தாலாட்டும் அம்மாக்களை நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது. உலகை ஆளும் அந்த ஒற்றைச் சொல்லின் நினைவை பாடல் கேட்பவர்களின் மனந்தோறும் கனக்க வைத்து, சுமக்க வைத்தவர் இசைஞானி இளையராஜா.

அவரது மற்ற எல்லாவிதமான பாடல்களைக் கடந்தும், அவரது அம்மா பாடல்கள் தனித்துவமானவை. உண்மையில் படத்தில் வரும் கதைக்கு ஏற்றபடி, யாரோ ஒரு தாய்க்காக அது பாடப்பட்டாலும், அந்தப் பாடலைக் கேட்கும் அத்தனை பேரின் தாய்களுக்கும் பொருந்தும் வகையில் அவை இசைக்கப்பட்டிருக்கும்.

ஆகச்சிறந்த இசை நுட்பங்களில் வல்லவரான இளையராஜாவின் அம்மா பாடல்கள் கேட்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். அதனால்தான், வான்மழை போல பாகுபாடின்றி எல்லா தரப்பு அம்மாக்களுக்கும் பொருந்து வகையில் இசைக்கப்பட்டிருக்கும். இதற்கு காரணம், பெரும்பாலான அம்மா பாடல்களை அவர்தான் எழுதியும் இருப்பார். எளிமையான சொற்களைக் கொண்ட அவரது எல்லா அம்மா பாடல்களுமே, விலைமதிப்பற்றவை.

அப்படியொரு பாடல்தான், 1989-ம் ஆண்டு இயக்குநர் கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில் வெளிவந்த ‘திருப்புமுனை’ திரைப்பட்டத்தில் இடம்பெற்ற 'அம்மானா சும்மா இல்லடா' பாடல். வார்த்தைகளின் எளிமை தாண்டி, அம்மா - மகனுக்கான உறவின் அடர்த்தியை மிக அருமையாக எழுதியிருப்பார் இளையராஜா. இதெல்லாம் விட அவரது குரலிலே இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், பாடல் கேட்பவர்களுக்கு அம்மாக்களின் நினைவு சுகமாய் மலரும்.

பாடலின் பல்லவியை,

"அம்மானா சும்மா
இல்லடா ஆ
அவ இல்லேனா
யாரும் இல்லடா ஆ
தங்கம் கொண்ட பூமி பூமி
ஒன்ன தாங்கிக் கொண்ட சாமி சாமி

பெத்தவள மறந்தா
அவன் செத்தவனே தான்டா
அந்த உத்தமிய நெனச்சா
அவன் உத்தமனே தான்டா…" என்று எழுதியிருப்பார் இளையராஜா. பெத்தவளை மறப்பவன் செத்தவன் என்ற வரி எக்காலத்துக்கும் பொருந்தும் உயிர்ப்பான வரிகள்.

அதேபோல் பாடலின் தொடக்கத்தில் வரும் ஒற்றை வயலினின் இசை மனதை உலுக்கும். இந்த மாயத்தை பாடலைக் கேட்பவர்களுக்கு எளிதில் கடத்திவிடம் மந்திரம் அறிந்தவர் இளையராஜா. அதனால்தான், திரைப்படங்களில் அம்மாவாக வரும் கதாப்பாத்திரங்களைக் கடந்து, பாடல் கேட்பவர்களுக்கு அவர்களது அம்மாக்களின் நினைவு மனதுக்குள் வருகிறது.

பாடலின் முதல் மற்றும் இரண்டாவது சரணங்களை,

"நல்ல பேர நீ எடுத்தா
அப்பனுக்கு சந்தோஷம்
நாலு காச நீ கொடுத்தா
அண்ணனுக்கும் சந்தோஷம்

போற வழி போக விட்டா
புள்ளைக்கெல்லாம் சந்தோஷம்
வாரதெல்லாம் வாரித் தந்தா
ஊருக்கெல்லாம் சந்தோஷம்

நெஞ்சு நெகிழ்ந்து
மந்திரம் சொன்னா
வந்திருந்துதான்
தெய்வம் மகிழும்
ஒண்ணக் கொடுத்து
ஒண்ணு வாங்குனா
அன்பு என்னடா
பண்பு என்னடா...

தந்தாலும் தராமப் போனாலும்
தாங்கும் அவ கோவில் தான்டா..

இராவு பகல் கண் முழிச்சு
நாளும் உன்னப் பாத்திருப்பா
தாலாட்டு பாடி வெச்சு
தன் மடியில் தூங்க வைப்பா

புள்ளைங்கள தூங்க வெச்சு
கண்ணுறக்கம் தள்ளி வைப்பா
உள்ளத்துல உன்ன வெச்சு
ஊருக்கெல்லாம் சொல்லி வைப்பா

கொஞ்சம் பசிச்சா ஆ
நெஞ்சு கொதிக்கும்
தாயி போலத்தான்
நண்பன் அவனே
சாமி கிட்டத்தான்
ஒன்ன நெனச்சு
வேண்டி இருக்கும்
அன்பன் அவனே

அன்னையப் போல்
நண்பனும் உண்டு
தெய்வத்தப் போல்
அன்னையும் உண்டு" என்று வரிகளால் மனங்களை வருடியிருப்பார் இளையராஜா. இதோடு மட்டுமின்றி, சரணங்களின் முதல் 4 வரிகளை அறிவுரை கூறுவதுபோல், அழுத்தந்திருத்தமாக பாடும் இளையராஜா, அடுத்த இரண்டு வரிகளில் மேலே பாடும்போது, தானாகவே நமது மனங்களும் அம்மாக்களை நினைத்து உயர பறக்க ஆரம்பித்துவிடும். அதேபோலத்தான், சரணங்களின் கடைசி வரி பாடல் கேட்பவர்களுக்கு பசுமரத்தாணிபோல பதிய வேண்டும் என்பதற்காகவே அந்த வரியை சரணத்தின் தொடக்க வரிகளைப் போல பாடி பதியவைத்திருப்பார். இளையராஜாவின் தாய் பாடல்களும், தாலாட்டும் நாளையும் மீட்டும்....

SCROLL FOR NEXT