இளையராஜாவுடன் இசையிரவு 10 | ‘காதலின் தீபம் ஒன்று...’ - மனதை லேசாகக் கீறியதால் கிட்டும் வலியும் சுகமும்

இளையராஜாவுடன் இசையிரவு 10 | ‘காதலின் தீபம் ஒன்று...’ - மனதை லேசாகக் கீறியதால் கிட்டும் வலியும் சுகமும்
Updated on
2 min read

உயிரினங்களின் இயல்பான சுவாசத்தை இரட்டிப்பாக்குகிறது காதல். சாதரண ல்ப் டப் லப் டப் என்ற இதய ஓட்டத்தை இரண்டாவது, மூன்றாவது கியருக்கு மாற்றி தாறுமாறாக்குகிறது காதல். காதல் மலர்ந்த அந்த தருணத்தை நினைக்கும்போது உள்ளுணர்வில் ஏற்படும் மகிழ்ச்சியை கொண்டாடித் தீர்க்க உலக பண்டிகைகள் போதுமானதாக இருப்பதில்லை. காதல் வந்தபின் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படும் பிரக்ஞையை வெளிப்படுத்த உலக மொழிகளில் வார்த்தைகள் கிடைப்பது இல்லை. வெளியே சொல்ல முடியாத அச்சத்தையும், நினைக்கும் போதெல்லாம் மனதுக்குள் இன்பத்தையும் கொடுக்கும் அந்த அழகிய அவஸ்தைதான் காதல்.

பாய மறந்த ஆறுகள், பட்டுப்போன மரங்கள், முகம் காட்ட மறந்த நிலா, பூப்பெய்த மறந்த பூக்கள், பறக்க மறுத்த சிறகுகள், சுற்ற மறந்த பூமிப்பந்தென எது மறந்தாலும் ஒருபோதும் மறவாதது காதல். பனிக்காலத்தின் சிறுபுல் நுனிதாங்கும் பனித்துளி போன்றது காதலும் காதல் சார்ந்த நினைவுகளும். காதலன் காதலி இருவருக்கு மட்டுமே சொந்தமான அந்த உலகில் வாழும் அத்துனை உரிமையும் பெற்ற மூன்றாம் ஜீவன் இசை. இசைஞானி இளையராஜாவின் இசை.

யாரென்றே தெரியாத மனிதர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் சுரப்புகளை தனது ஆர்மோனியத்தால் ஆற்றுப்படுத்துகிறது அவரது இசை. இந்த பாடலைக் கேட்காத, பார்க்காத, கேள்விப்படாத காதலர்கள் யாரும் இருப்பது சாத்தியமற்றது. இது காதலர்களாக இருப்பவர்கள், இருந்தவர்கள், இருக்க நினைத்தவர்கள், துளியோன்டு காதல் துளிர்த்தவர்கள், பிரிந்தவர்கள், மறந்தவர்கள், மறைந்தவர்களென அத்தனை காதலர்களுக்குமான தேசிய கீதம்தான் இப்பாடல்.

1984-ம் ஆண்டு இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'காதலின் தீபம் ஒன்று ' பாடல்தான் அது. ஹெர்னியா அறுவை சிகிச்சையால் வாய்பேச முடியாமல் இருந்த இளையராஜா, விசில் சத்தம் மூலம் எஸ்பிபிக்கு பாடலையும், குழுவினருக்கு இசை குறிப்புகளையும் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த பாடல். பாடலை ஐயா பஞ்சு அருணாச்சலம் எழுதியிருப்பார்.

இந்தப் பாடலின் தொடக்கத்தை ஆஹா ஆஹா ஆஹா... ஹே... ஹோ... ஹ்ம்ம்ம் என்று எஸ்பிபி தொடங்கியிருப்பார். அடுத்த விநாடியில் சீறிப்பாயும் வயலின்களின் ஈர்ப்பிசை, பாடலைக் கேட்கும் எல்லோருக்கும் ஒருகனம் இதுதான் காதல் உணர்வு என்பதை புரிய வைத்துவிடும். பாடலின் பல்லவியை, ஐயா பஞ்சு அருணாச்சல் இப்படி எழுதியிருப்பார்..

"காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க" .. "மயக்கம் என்ன", "காதல் வாழ்க" என்ற இடங்களை எஸ்பிபி பாடும்போதெல்லாம், பாடல் கேட்பவர்களையெல்லாம் ரஜினியாக்கிவிடும் விந்தை இசைஞானியின் இசைக்கு மட்டுமே வாய்த்தது.

அழகிய தைல மரக்காடுகளில் உயர்ந்து நிற்கும் மரங்களும், நீல வானின் திட்டுத் திட்டான மேக கூட்டங்களும், ஆளரவமற்ற நீர்வீழ்ச்சியில் கொட்டுக் கொண்டிருக்கும் வெண்தங்க நீரின் பின்னணியிலும் கருப்பு வெள்ளை கலந்த உடையில் ரஜினி பாடும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் பாடல் கேட்பவர்களின் மனதை லேசான கீறலின் வலியையும், சுகத்தையும் கொடுக்கும். அதுவும் பாடலின் முதல் மற்றும் இரண்டாவது பின்னிசைகளில் வரும் வயலின், புல்லாங்குழல், கிடார், கீபோர்டு, பெல்ஸ் எல்லாம் சேர்ந்து, காதல் அவஸ்தைக்குள்ளான ஆழ்மனதை குளிரவைக்கும்.

பாடலின் முதல் மற்றும் இரண்டாவது சரணங்களை,

"நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆ ஆ..
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் காதலே
எண்ணம் யாவும்
சொல்ல வா

என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும்…ஆ..ஆ..
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம்
சொல்ல வா"

இரண்டாவது சரணத்தில்,
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம்
சொல்ல வா... இந்த வரிகளை பாடும்போது மாதவிக்கு காதல் வந்துவிட்டதையும் , இரண்டு சரணங்களுக்கு முன்வரும் பின்னிசையின் போதும் காதல் குறித்த குழப்பம், ஆசையை மாதவியின் கண்களில் இருந்து பார்வையாளர்களுக்கு கடத்தியிருப்பார் இயக்குநர். எல்லோர் மனங்களிலும் சிவப்புக் கம்பளம் விரித்து அமர்ந்திருக்கும் அழகிய அவஸ்தை காதலின் தீபம் தொடர்ந்து ஒளிரும்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in