வண்ணங்கள் எப்போதும் மனதுக்கு நெருக்கமாக இருப்பவை. மலைகள், மரங்கள், புற்கள், பூக்கள், வானம், நிலா, மேகம் என இதில் எதைப்பற்றி பேசினாலும், மனக்கண்ணில் இவைகளின் நிறங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். அதுபோலத்தான் மனது என்ற சொல்லாடலும். அறிவியல் உலகத்திற்கு பெரும் சவாலான இந்த மனதையும் அதில் காதல் குடிகொள்ளும் ரகசியத்தையும், காதல் வயப்பட்டவர்களும் கடவுளும் மட்டுமே அறிந்திருப்பது இன்றுவரை தொடரவேச் செய்கிறது.
மனங்களைப் பற்றிப் படர்ந்த காதலை வேர் பரப்பச் செய்வதில் இளையராஜாவின் இசைக்கும் அவரது குரலில் வெளிவந்த பாடல்களுக்கும் தனியிடம் உண்டு. சுகமான வலி கொண்ட சுமையான காதலின் மென் சோகங்களை 2000-ன் தொடக்கத்திற்கு முன்னர் பாடித் தீர்க்காத இளைய பட்டாளம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. குறைந்தபட்சம் இதுபோன்ற பாடல்களை பாடித் திரியும் நண்பர்களாவது ஒவ்வொருவருக்கும் வாய்த்திருப்பர்.
காதல் உயிரினங்களின் அனிச்சை. பாகுபாடின்றி உயிரினங்களுக்கு கிடைக்கும் அற்புதமான உணர்வு பரிமாற்றம். பெரும் கட்டுப்பாடுகளை மீறி, வீட்டின் முகப்பு கதவை அடித்து சாத்தும் காற்றைப் போல அது கட்டுப்பாடற்ற ஆற்றல் கொண்டது. மனதின் பாரங்களை மேலும் கனமாக்குவதில் காதலுக்கு நிகர் வேறு எதுவுமில்லை. இதுபோன்ற நேரங்களில் மருந்து, மாத்திரைகளைக் கொண்டு குணமாக்க முடியாத துயரின் துருக்களை இசைஞானியின் பாடல்கள் துடைத்தெரியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கப்போவது இல்லை.
அப்படி ஒரு பாடல்தான் இந்த "காதல் என்பது பொதுவுடமை" பாடல். இப்பாடல் 1986-ம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘பாலைவன ரோஜாக்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். பாடலை இசைஞானியின் சகோதரர் கங்கை அமரன் எழுத இளையராஜா பாடியிருப்பார். இரவு நேரத்தில் இந்தப் பாடலை கேட்பது அத்தனை இனிமையான அனுபவமாக இருக்கலாம். காதல் இல்லாத சோகமான மனங்களையும் இந்தப் பாடல் ஈரமாக்கிவிடும்.
சிரிக்கும்போது எல்லோரும் சேர்ந்து சிரிக்கலாம், ஆனால், அழும்போது தனியாகத்தான் அழமுடியும். இதைத்தான் கொஞ்சம் அரசியல் நெடியேற்றி, பாடலின் பல்லவியை இப்படி எழுதியிருப்பார் கங்கை அமரன்,
"காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை
அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா" என்று எழுதியிருப்பார்.
முதல் மற்றும் இரண்டாவது சரணங்களை,
"ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு
அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு
புத்தனும் போன பாதைதான்
பொம்பள என்னும் போதைதான்
அந்த வேகம் வந்திடும் போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகம்தான்
உண்மைய எண்ணி பாரடா
இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா
ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒண்ணாக கலந்த உறவுதான்
எந்நாளும் இன்பம் வரவுதான்
இது காதல் என்கிற கனவு
தினம் காண எண்ணுற மனசு
இத சேரத் துடிக்கும் வயசுதான்
வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்
இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான்" என்று பாடலை முடித்திருப்பார்.
மிக எளிமையான இசைக்கருவிகளின் சேர்க்கை, தாளநடை எல்லாம் சேர்ந்து இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் அடுக்கப்பட்ட மூட்டைகளின் கீழ் திக்கித் திணறிக் கொண்டிருக்கும் மனசை லாவகமாக மீட்டு, இலகாக்கி காற்றில் பறக்கும் சிறகை போல மாற்றிடும் வல்லமை ராஜாவின் குரலில் வரும் இந்தப் பாடலுக்கு எப்போதும் இருக்கும். நில்லாமல் சுரக்கும் இசை சுனை நாளையும் சுரக்கும்...