தமிழ் சினிமா

‘சேத்துமான்’ இயக்குநர் தமிழ் மீது நம்பிக்கை பிறந்த தருணம் - எழுத்தாளர் பெருமாள் முருகன் பகிர்வு

செய்திப்பிரிவு

‘வறுகறி’ என்கிற பெருமாள் முருகனின் சிறுகதை தான் ‘சேத்துமான்’ திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்துக்கு எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகனே ‘கதை - வசனம்’ எழுதியிருக்கிறார். ‘சேத்துமான்’ படத்துக்கு அவர் எழுத முன் வந்தது ஏன்? - இது குறித்து மனம்விட்டுப் பகிர்ந்திருக்கிறார் பெருமாள் முருகன்.

“தமிழில் 35 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய முதல் நூலான ‘ஏறுவெயில்’ 1991-ல் வெளிவந்தது. அதை வாசித்த பின் பாலுமகேந்திரா என்னை அழைத்து ‘அதைப் படமாக எடுக்கப்போகிறேன்’ என்று சொன்னார். ஆனால், அது நடக்கவில்லை. அதைப் போல கடந்த 35 ஆண்டுகளில் பல இயக்குநர்கள் என்னைச் சந்தித்து ‘உங்கள் சிறுகதையை, நாவலைப் படமாக எடுக்கவிருக்கிறோம்’ என்று பேசுவார்கள். ஆனால், ஒன்றும் நடந்ததில்லை.

அப்போதுதான் ‘சேத்துமான்’ படத்தின் இயக்குநர் தமிழ் என்னைப் பார்க்க வந்தார். ‘இவ்வளவு காலம் உதவி இயக்குநராக இருந்தேன். இப்போது தனியாகப் படம் பண்ணப் போகிறேன். உங்களுடைய ‘வறுகறி’ சிறுகதையைப் படமாக்க விரும்புகிறேன்’ என்றார். ‘வறுகறி’ கதையை 2012-ல் எழுதினேன். ‘காலச்சுவடு’ இதழில் பிரசுரமானது. ஆனால், இயக்குநர் தமிழ் மீது எனக்கு தொடக்கத்தில் நம்பிக்கை வரவில்லை. இதற்குமுன் வந்தவர்களைப் போல்தான் இவரும் இருப்பார், பேசி அனுப்பிவிடலாம் என்றுதான் நினைத்தேன்.

ஆனால், இயக்குநர் தமிழ், ‘இந்தப் படத்துக்கு கதை - வசனம் நீங்கள்தான் எழுத வேண்டும். படத்திலும் கதை - வசனம் என்று உங்களுடைய பெயர்தான் வரும்’ என்று சொன்னார். இதுவரை என்னை வந்து பார்த்துப் பேசியவர்கள், இவ்வளவு வெளிப்படையாகப் பேசியதில்லை. அதிலேயே எனக்கு அவர் மீது நம்பிக்கை வந்தது.

எல்லாம் சரி! படத்துக்குத் தயாரிப்பாளர் இருக்கிறாரா? என்று கேட்டபோது ‘தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்காக என் வீட்டில் 5 லட்சம் கொடுப்பார்கள். நண்பர்களிடமிருந்து 5 லட்சம் திரட்டிக் கொள்ளலாம். ரூபாய் 10 லட்சத்துக்குள் முழுப் படத்தையும் எடுத்துவிடுவேன்’ என்றார். அப்போது எனக்கு அவர் மேல் 100 சதவீதம் நம்பிக்கை வந்துவிட்டது.

படப்பிடிப்பு முழுவதும் எங்களுடைய ஊரான நாமக்கல் மாவட்டத்தில்தான். இயக்குநரைச் சுதந்திரமாக விட்டுவிடலாம் என்று முடிவுசெய்து நான் போகவில்லை.

பிறகு படம் முடிந்து ‘எடிட்டிங்’கில் இருந்தபோது காட்சிகளைப் பார்த்தேன். உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருந்தது. ‘ஸ்டார் வேல்யூ’ இல்லாத நடிகர்களைக் கொண்டு, அதுவும் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான ஒரு கதையை இவ்வளவு உணர்வுபூர்வமாகப் பண்ணமுடியும் என்று தமிழ் காட்டிவிட்டார்.

கதை நடக்கும் அந்தப் பகுதியுனுடைய இசை, அந்தப் பகுதியினுடைய சத்தம், பன்றியினுடைய உறுமல் எந்தெந்த இடங்களில் எப்படியிருக்கும்? அதாவது அதைப் பிடிக்கும்போது, கால்களைக் கட்டும்போது, அதை வதைக்கும்போதெல்லாம் பன்றியின் கத்தலைப் படம், நேர்த்தி, யதார்த்தத்துடன் கொண்டு வந்திருக்கிறது.

எனது எழுத்துப் பாணி என்பது அரசியலான விஷயங்களை வெளிப்படையாக எழுதாமல் உள்ளார்ந்து வைத்துவிடுவது. படத்திலும் இயக்குநர் தமிழ் அதே பாணியைப் பின்பற்றியிருக்கிறார். இதனால் ‘சேத்துமான்’ ஓர் அசலான படைப்பாகத் தன்னை உருவாக்கிக்கொண்டிருக்கிறது” என்றார்.

> இது, ஆர்.சி.ஜெயந்தன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT