தமிழ் சினிமா

'அயலான்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செய்திப்பிரிவு

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

இன்று (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை காலையில் வெளியிட்டது படக்குழு. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே, நீண்ட நாட்களாகத் தயாரிப்பு பிரச்சினையிலிருந்த ரவிக்குமார் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்துக்காக தனக்குச் சம்பளம் எதுவும் வேண்டாம் எனப் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார்.

'அயலான்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் ரகுல் ப்ரீத், சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், மறுபுறம் இந்தப் படத்துக்கான கிராஃபிக்ஸ் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. முழுக்க ஏலியான்களை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை என்பதால், கிராபிக்ஸ் பணிகள் மட்டும் சுமார் 8 மாதம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT