தமிழ் சினிமா

'பொன்னியின் செல்வன்' அப்டேட்: த்ரிஷா கதாபாத்திரத்தின் பின்னணி

செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வன்' படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தின் பின்னணி குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி கடற்கரையில் சில காட்சிகளைப் படமாக்கினார்கள். தற்போது ஹைதராபாத்தில் முக்கியமான காட்சிகளைப் படமாக்கத் தொடங்கியுள்ளது படக்குழு.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்கள்.

தற்போது சரவணன் இயக்கத்தில் உருவாகி வந்த 'ராங்கி' படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார் த்ரிஷா. இதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தில் தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இவரது கதாபாத்திரம் குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.

'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடிக்கவுள்ளார் த்ரிஷா. அதாவது வந்தியத்தேவனாக நடித்து வரும் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். ஹைதராபாத்தில் இவருடைய காட்சிகளைப் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT