தமிழ் சினிமா

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல்: சாந்தனு காட்டம்

செய்திப்பிரிவு

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயலை, தனது ட்விட்டர் பதிவில் சாந்தனு காட்டமாக விமர்சித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் இன்று (பிப்.6) தொடங்கியது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முகாமைத் தொடங்கி வைத்தார். முன்பாக அங்குள்ள கோயிலில் பூஜை நடைபெற்றது. அப்போது கோயிலுக்குள் செல்ல காலணியைக் கழற்ற முனைந்தார்.

உடனே, அங்கிருந்த மக்களுக்கு இடையே நின்றுகொண்டிருந்த பழங்குடியினச் சிறுவனை அழைத்து காலணியைக் கழற்றி விடச் சொன்னார். இந்தச் செயலுக்கு அவரைச் சுற்றி நின்றிருந்த அதிகாரிகள் செய்வதறியாது நின்றிருந்தனர். வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முடியாத வகையில் அதிகாரிகள் மறைத்து நின்றிருந்தனர்.

இந்த வீடியோ பதிவு காலையிலிருந்து ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசனின் செயலுக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தச் செயல் குறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், "இதுதான் இந்தியா. வளரவே மாட்டோம். இதில் இன்னும் மோசமான விஷயம் அவர்களெல்லாம் இப்போது சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவும் அமைச்சரின் செயலைக் குமட்டலான செயல் என்று விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்:

SCROLL FOR NEXT