

'96' படத்தின் ரீமேக் தலைப்பு சர்ச்சைக்கு உதவி செய்துள்ளார் பிரபாஸ். இதற்குப் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் '96'. இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.
இறுதியாக தில் ராஜு இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கைக் கைப்பற்றித் தயாரித்துள்ளார். பிரேம் குமார் இயக்கியுள்ள இந்த ரீமேக்கில் சர்வானந்த், சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழுக்கு இசையமைத்த கோவிந்த வசந்தாவே, தெலுங்கிற்கும் இசையமைத்துள்ளார்.
'ஜானு' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ள இந்தப் படம் நாளை (பிப்ரவரி 7) திரைக்கு வரவுள்ளது. ஏற்கெனவே பிரபாஸ் நடித்து வரும் படத்துக்கும் 'ஜான்' எனத் தலைப்பு வைக்கப் பரிசீலனையில் இருந்ததால், பெயர் குழப்பம் உண்டானது. ஆனால், 'ஜானு' என்ற தலைப்பை வைத்தே விளம்பரப்படுத்தி படமும் வெளியாகவுள்ளது.
இதனிடையே, இந்தத் தலைப்பு விவகாரம் தொடர்பாக 'ஜானு' தயாரிப்பாளர் தில் ராஜு, "'96' படத்தைப் பார்த்தபோது, அதன் தெலுங்குப் பதிப்புக்கு 'ஜானு' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். பின்னர் 'பிரபாஸ் 20' படத் தயாரிப்பாளர்கள் அவர்களின் படத்திக்கு 'ஜான்' என்று பெயரிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக அறிந்தேன்.
உடனடியாக நான் யுவி கிரியேஷன்ஸைத் தொடர்பு கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, 'ஜானு' என்ற தலைப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தனர். இந்தத் தலைப்பை எனக்குத் தந்த பிரபாஸுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார் தில் ராஜு.
தவறவிடாதீர்: