தமிழ் சினிமா

‘மாநாடு’ வெளியாகி 4 ஆண்டுகள்: படக்குழு பகிர்ந்த பாசிட்டிவ் ‘வைப்’

ஸ்டார்க்கர்

‘மாநாடு’ படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு படக்குழுவினர் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குறிப்பிடும்போது, “எனக்கு, எஸ்டிஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு ‘மாநாடு’ படம் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. கோவிட் தாமதம், மற்ற தாமதங்கள் நிகழ்ந்த போதும் அந்தப் படத்திற்கு ஒரு பாசிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது. வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக்கொண்டே இருந்தது.

சிம்பு, வெங்கட்பிரபு, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கல்யாணி ப்ரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி, பிரேம்ஜி அமரன், கருணாகரன், மகத், மனோஜ் பாரதிராஜா, டேனியல் மற்றும் இசையமைப்பாளர் யுவன், ஒளிப்பதிவு செய்த ரிச்சர்ட் எம்.நாதன், எடிட்டர் ப்ரவீன், சண்டை காட்சிகளின் இயக்குநர் சில்வா, கலை இயக்குநர் உமேஷ், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் மற்றும் உழைப்பாளிகள் லைட் மேன்ஸ்... தயாரிப்பு நிர்வாகம் செய்த அனைவரும் தந்த உண்மையான உழைப்பே மாபெரும் வெற்றிக்கு காரணம்.

நான்கு வருடங்கள் தொட்டாலும் இந்த நிஜமான வெற்றி இன்னும் இனிக்கிறது. எஸ்டிஆரின் ரசிகர்கள் வைத்த நம்பிக்கை வெற்றிக்கு வித்திட்டது. உடன் நின்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் ‘மாநாடு 2’ தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT