சினிமா என்பது வெறும் காட்சிகளின் தொகுப்பு அல்ல. அது பார்வையாளரின் மனதை குறிப்பிட்ட திசையில் இழுத்துச் சென்று உணர்ச்சிகளைத் தூண்டும் ஒர் அற்புதக் கலை. ஒரு காட்சியை எந்தக் கோணத்தில் படமாக்குகிறோம் என்பதே அதன் உள்மனத் தாக்கத்தையும், கதையின் போக்கையும் தீர்மானிக்கிறது. ஒளிப்பதிவாளரின் காட்சிப் பார்வையானது இதயத்தில் ஒலிக்கும் மென்மையான குரல் போன்றது - அது பார்வையாளரின் உணர்வுகளை உயர்த்தலாம், தாழ்த்தலாம் அல்லது குழப்பத்தில் ஆழ்த்தலாம்.
உயரமும் தாழ்வும் - உணர்வுகளின் மாற்றம்: ஹை ஆங்கிள் ஷாட்டுகள் மற்றும் லோ ஆங்கிள் ஷாட்டுகள், மனித உணர்வுகளை எதிரெதிர் திசைகளில் மாற்றும் சக்தி வாய்ந்த கருவிகள் எனலாம். ஆர்சன் வெல்ஸ் இயக்கிய ‘சிட்டிசன் கேன்’ (Citizen Kane 1941) என்ற ஹாலிவுட் திரைப்படத்தில், லோ- ஆங்கிள் காட்சிகள், கதாபாத்திரத்தின் அதிகாரத்தையும் ஆணவத்தையும் அழகாக வெளிப்படுத்தின.
கேமரா தரையிலிருந்து மேல்நோக்கிப் பார்க்கும் போது, நாயகன் ஒரு மாபெரும் ஆளுமையாகத் தோற்றமளிப்பதால் பார்வையாளரின் மனதில் அந்த உணர்வு ஆழமாகப் பதிகிறது. மாறாக, உயர்ந்த கோணங்கள், மனித மனத்தின் அச்சத்தையோ, தளர்ச்சியையோ அல்லது சிக்கலான மனநிலையையோ தெளிவாகக் காட்டுகின்றன. இவை பார்வையாளரை கதாபாத்திரத்தின் பலவீனத்துடன் இணைக்கும்.
சமத்துவத்தின் பார்வை - பாரசைட் உதாரணம்: பொங் ஜூன் ஹோவின் ‘பாரசைட்’ (2019) திரைப்படம், சமூக அடுக்குகளை கேமரா கோணங்களின் வழியே அற்புதமாகச் சித்தரித்தது. செல்வந்தர்களின் வீடு, உயரத்தில் அமைந்திருப்பது போலவும், ஏழைகளின் வீடு அடித்தளத்தில் இருப்பது போலவும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது காட்சி அடுக்குகளாகவும், சமூக அடுக்குகளாகவும் இணைந்து செயல்படுகின்றன.
ஆனால், உணர்வு ரீதியாக செல்வந்தர்கள் ‘கீழே’ இருப்பதை இப்படம் நுட்பமாகக் காட்டுகிறது; அவர்கள் உண்மையில் உள்ளத்தில் நிலைகுலைந்தவர்கள். மாறாக, ஏழை குடும்பம் ஒன்றாக உணவருந்தும் காட்சிகள் கண் மட்டக் கோணத்தில் படமாக்கப்பட்டுள்ளன. இது சமத்துவம், உறவு மற்றும் மனிதத்தன்மையை அழகாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கோணம் பார்வையாளரை அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக இணைக்கிறது.
மலையாள சினிமாவின் கலைநயம்: மலையாளத் திரைப்படங்களில் கேமரா கோணங்கள் மூலம் மனித உணர்வுகள், மிகவும் கலைநயமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ‘ஒரு வடக்கன் வீரகதா’ (1989) திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு, வீரத்தின் பெருமையையும் உள்ளக் கிளர்ச்சியையும் தாழ்ந்த கோணங்கள் மூலம் அற்புதமாகக் காட்டினார். சூரிய ஒளி, வாளின் பிரகாசம், முகத்தில் வழியும் வியர்வை – இவை அனைத்தும் தாழ்ந்த கோணங்களின் வழியே, போரின் அசலான உணர்ச்சிகளைப் பார்வையாளரின் இதயத்தில் பரப்புகின்றன.
அதேபோல், ‘வைஷாலி’ (1988) திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் மது அம்பட் பயன்படுத்திய டைனமிக் கோணங்கள் மூலம் புராணக் காதல் காட்சிகள் ஒரு மாய உலகத்தைக் காட்டின. மேகங்களின் வழியே மேல்நோக்கிய பார்வை, தரையிலிருந்து மென்மையாகச் சுழலும் காட்சிகள்– இவை காதலும் தியாகமும் கலந்த உணர்வுகளை மனதை மயக்கும் வண்ணம் மிக அழகாக வெளிப்படுத்தின.
சத்யஜித் ரே - மனநிலையின் கோணங்கள்: சத்யஜித் ரே தனது திரைப்படங்களின் கேமரா கோணங்களை உணர்ச்சிகளின் மொழியாக மாற்றினார். `பதேர் பாஞ்சாலி' (1955)யில், குழந்தைகளின் பார்வையில் உலகைச் சித்தரிக்க தாழ்ந்த கண் மட்டக் கோணங்களைப் பயன்படுத்தினார். இது அப்பட்டமான நிஜத்தை நுணுக்கமாகவும் அழகாகவும் வெளிப்படுத்தியது.
‘சாருலதா’வில் (1964), ஹை ஆங்கிள் கோணங்கள் கதாநாயகியின் தனிமையையும் விரக்தியையும் துல்லியமாகப் பிரதிபலித்தன. இங்கு கேமரா பார்வை, கதாபாத்திரத்தின் உள்ளத்தின் உண்மையான பிரதிபிம்பமாக மாறியது. ரேயின் திரைப்படங்கள் கோணங்களை வெறும் தொழில்நுட்பமாக அல்லாமல், உணர்வுகளின் கவிதையாக உயர்த்தின.
சப்ஜெக்டிவ், ஆப்ஜெக்டிவ் மற்றும் பாயின்ட் ஆஃப் வியூ – மூன்று மனக் கோணங்கள் ஒளிப்பதிவின் உள்மனப் பயணம் மூன்று முக்கியத் திசைகளில் இயங்குகிறது:
1. ஆப்ஜெக்டிவ் கேமரா - இது தகவல்களை நேரடியாக அளிக்கும் பார்வை. பார்வையாளருக்கு ஒரு வெளிப்புற அனுபவத்தைத் தருகிறது, கதையை தொலைவில் இருந்து காணச் செய்கிறது.
2. சப்ஜெக்டிவ் கேமரா - இது உணர்ச்சிகளை நேரடியாக அனுபவிக்கச் செய்கிறது. கேமரா கோணம் கதாபாத்திரத்தின் மனநிலையை பார்வையாளருக்குள் எளிதாகக் கொண்டு சென்று, அந்த உணர்வில் ஆழ்த்துகிறது.
3. பாயின்ட் ஆஃப் வியூ - இது மேற்சொன்ன 2 கோணங்களையும் இணைக்கும் பாலம். கேமரா ஒரு கதாபாத்திரத்தின் பார்வையை எடுத்துக்கொண்டு, கதையின் உள்முகப் பயணத்தை உருவாக்குகிறது.
ஒரு காட்சியை ஆரம்பத்தில் அப்ஜெக்டிவ் கோணத்தில் தொடங்கலாம். ஆனால் கதை முன்னேறும்போது, ஒரு கேமரா இயக்கம் அல்லது குளோசப் மூலம் அது சப்ஜெக்டிவ் கோணமாக மாறி பார்வையாளரை உள்ளே இழுக்கலாம். இந்த மாற்றம் காட்சியை உயிரோட்டமாக்குகிறது.
திசை மாற்றத்தின் உணர்வு - டச் ஆங்கிள்: சில நேரங்களில், சற்று சாய்ந்த கோணங்கள் மனதின் அமைதியின்மையைக் காட்டுகின்றன. உளவியல் குழப்பம், பயம் அல்லது நம்பிக்கையின்மை போன்ற உணர்வுகளை இந்தக் கோணங்கள் பார்வையாளருக்கு கடத்துகின்றன. இது கதையின் பதற்றத்தை அதிகரித்து, மனதில் ஒரு சிறு திசைமாற்றத்தை உருவாக்குகிறது.
ஒளிப்பதிவில் கோணம் என்பது வெறும் தொழில்நுட்ப அம்சம் மட்டுமே அல்ல – அது ஒரு மனநிலையின் வெளிப்பாடு. கதையின் உள்ளார்ந்த கருத்தை வெளியே கொண்டு வரும் ஒரு அலை போன்றது. ஒளிப்பதிவாளர் தன் கேமராவை எந்த உயரத்தில் வைக்கிறார், எந்தத் திசையில் சுழற்றுகிறார் என்பதே கதையின் உணர்ச்சிப் பாதையை நிர்ணயிக்கிறது.
“கோணம்” என்பது சினிமாவின் மவுனக் கவிதை; அது பார்வையாளரின் இதயத்தில் ஒரு மென்மையான திசை மாற்றத்தை ஏற்படுத்தும் நுட்பமான கலை. ஒவ்வொரு கோணமும் ஓர் உணர்வு, ஒளி, நிழல், மனம்.
(புதன் தோறும் ஒளி காட்டுவோம்)
cjrdop@gmail.com
முந்தைய அத்தியாயம்: சினிமாவில் வண்ணப்புரட்சி கதையின் மொழியாக நிறம்! | ஒளி என்பது வெளிச்சமல்ல 04