சென்னை: நடிகர் அஜித் குமார் துபாயில் நடந்து வரும் 24H கார் ரேஸில் இருந்து தற்போது விலகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதே வேளையில், அவர், போர்ஸ்ச்சே 992 கப் கார் (எண் 901) ரேஸில் அணிக்காக உரிமையாளராகவும், போர்ஸ்ச்சே கேமன் GT4 (எண் 414) ரேஸில் ஓட்டுநராகவும் பங்கேற்க இருக்கிறார்.
நடிகர் அஜித் குமார் துபாயில் நடந்து வரும் ரேஸில் பங்கேற்க தயாராகி வந்தார். இதையடுத்து, அஜித் குமார் பயிற்சி செய்யும் வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. பயிற்சியின்போது விபத்து ஏற்பட்டதால் அஜித் போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து தற்போது அதிகாரபூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது அணி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த இரு தினங்களுக்கு முன்பு, துபாய் 24H சீரிஸ் கார் ரேஸ் போட்டிக்காக அஜித் குமார் பயிற்சி மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இது குறித்து அஜித் குமாரின் கார் ரேஸிங் கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. அப்போது, ரேஸுக்கான தயாரிப்பு பணிகளின்போது அஜித் குமாருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அவர் ரேஸ் பந்தயத்தில் கார் ஓட்டப் போவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
24H பந்தயம் மிகவும் கடினமானது. அணியின் உரிமையாளர் என்ற முறையிலும், அணியின் நலனுக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு, குழு தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து, பல்வேறு மாற்றங்களைச் செய்தது. கவனமாக சிந்தித்த பிறகுதான் இதை அவர் அறிவித்துள்ளார். அவரின் இந்த முடிவு அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அஜித் குமாரின் இந்த அறிவிப்பு இத்துடன் முடிவடையவில்லை. மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அவரது இடைவிடாத ஆர்வத்தினால், அஜித் குமார் துபாய் 24H தொடரில் தொடர்ந்து தீவிரமாக பங்கேற்பார். அஜித் குமார் நடக்கவிருக்கும் தொடரில் இரண்டு ரோல்களில் பங்கேற்க போகிறார். போர்ஸ்ச்சே 992 கப் கார் (எண் 901) (Porsche 992 Cup Car) ரேஸில் அஜித்குமார் அணிக்காக உரிமையாளராகவும், போர்ஸ்ச்சே கேமன் GT4 (எண் 414) (Porsche Cayman GT4) ரேஸில் ஓட்டுநராகவும் பங்கேற்க இருக்கிறார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரபலமடைந்து வரும் நிலையில், அஜித் குமாரின் அர்ப்பணிப்பு மற்றும் இந்த முடிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, விளையாட்டின் மதிப்பையும் மேலும் உயர்த்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.