Published : 11 Jan 2025 03:36 PM
Last Updated : 11 Jan 2025 03:36 PM

"பிஹார் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பொய்" - ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அந்த மாநில அரசே நடத்தியதாகவும், அதற்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்டதாகவும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழக மக்களின் சமூகநீதி சார்ந்த விவகாரத்தில் சட்டப்பேரவையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பட்டமாக பொய் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது, என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அந்த மாநில அரசே நடத்தியதாகவும், அதற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டதாகவும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழக மக்களின் சமூகநீதி சார்ந்த விவகாரத்தில் சட்டப்பேரவையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பட்டமாக பொய் கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி வினா எழுப்பினார். அதற்கு விடையளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பிஹார் மாநில அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்டது. அதனால் தான் சொல்கிறேன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நமக்கு அதிகாரம் இல்லை” என்று கூறியிருக்கிறார். முதல்வர் கூறியது அப்பட்டமான பொய் ஆகும்.

பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மாறாக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது செல்லும் என்று பிஹார் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன. அந்த சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் பிஹார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், ஒவ்வொரு பிரிவு மக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த அளவுக்கு பின் தங்கியுள்ளனர் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று தான் தீர்ப்பளித்திருக்கிறது.

ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பே செல்லாது என்று தீர்ப்பளித்திருப்பதாக கூறியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிவடைந்து விட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பிஹார்உயர் நீதிமன்றத் தீர்ப்பை நல்ல வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் நன்றாகப் படிக்க வேண்டும்; அதனடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர வேண்டும்.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எவரேனும் தவறான தகவல்களை அளித்திருந்தால் அவர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்ப முடியும். முதல்வரே தவறான தகவல்களை வழங்கியுள்ள நிலையில் அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர முடியும். முதல்வருக்கு இப்படி ஒரு தவறான தகவலை வழங்கிய அதிகாரி யார்? என்பதைக் கண்டறிந்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகநீதியை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்களைப் போல பேசும் திமுகவினருக்கு உண்மையில் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி மக்களுக்கு நீதி வழங்க விருப்பம் இல்லை. அதனால் தான் இல்லாத காரணங்களைக் கூறி தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது. ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. திமுக அரசின் சமூகநீதி துரோகங்களுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்." என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x