தென்னிந்திய சினிமா

“திறந்த மனதுடன் ‘ராமாயணா’ படத்தைப் பாருங்கள்” - நடிகர் யஷ் வேண்டுகோள்

ப்ரியா

‘ராமாயணா’ படத்தை திறந்த மனதுடன் பார்க்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள நடிகர் யஷ், படத்தில் இருக்கும் சிறிய விஎஃப்எக்ஸ் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹைதராபாத்தில் திங்கள்கிழமை நடந்த ‘ராமாயணா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் யஷ் கூறியது: “சில சமயங்களில் சிலர் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய முயற்சிக்கும்போது, அந்தப் படத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல அவர்கள், தங்களது புகழ், பணம் அனைத்தையும் அடகு வைக்கிறார்கள். நான் உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். விஃப்எக்ஸ், அது இது என படத்தில் சிறு சிறு குறைகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள்.

இப்போது இவரைப் போல ஒரு மனிதரை (நமித் மல்ஹோத்ரா) நான் இழந்துவிட்டால், இதுபோல ஒரு முயற்சி நடக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடும். நாம் பல வருடங்கள் பின்தங்கி இருப்போம்.

அதனால் திறந்த மனதுடன் ‘ராமாயணா’ படத்தைப் பாருங்கள். அவர் எல்லா கருத்துகளையும், விமசனங்களையும் ஏற்றுக்கொண்டு, அதனை சிறப்பாக செய்ய முயன்று இருக்கிறார். அதனால் எனது நலம் விரும்பிகள், ரசிகர்கள், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து திரையுலக ரசிகர்களும், ஒரு முறையாவது ஒன்றிணைந்து உலகுக்கு நம்மைக் காட்டுவோம்.

ஓர் இந்தியனாக நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாம் இந்த மனிதரை பாதுகாக்க வேண்டும். அது நமது பொறுப்பும் கூட. ஏனெனில், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து தனது தொழிலை செய்துகொண்டிருக்கும் இவரை நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் என்னிடம் ஒன்றைச் சொல்வார். நாம் அனைவரும் நிறைய விஷயங்களைச் செய்திருக்கிறோம். இந்தியர்கள் நிறைய விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்.

ஆனால், நாம் நமது இந்திய சினிமா துறைக்கு ஏதாவது செய்ய வேண்டும். எனக்கு ஆஸ்கர் விருது பெற்றுள்ளேன். எனக்கு அதில் சந்தோஷம் இல்லை. நமது நாடு அந்த இடத்தை அடைய வேண்டும். அதுதான் நான் மகிழ்ச்சி அடையும் நாளாக இருக்கும். இதைத்தான் அவர் என்னிடம் சொல்வார்” என்று யஷ் பேசினார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில், ராமராக ரன்பீர் கபூரரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. 

நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்  இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT