ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இதில் மகேஷ்பாபு ஹீரோ. இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் ஹாலிவுட்டுக்கு சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா கூறியதாவது: பாலிவுட்டை விட்டு வெளியேற நான் நினைத்ததில்லை. அங்கு பணிபுரிந்தபோது பல காரணங்களுக்காக ஒதுக்கப்படுவதாக உணர்ந்ததால், என் எல்லையை விரிவுபடுத்த நினைத்தேன்.
ஒரு நடிகையாக எனக்கு உற்சாகமாக இருக்கும் வாய்ப்புகளைத் தேடும் ஆசை ஏற்பட்டது. அமெரிக்கா சென்று நடிக்கத் தொடங்கினேன். இப்போது, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன்.
அது எளிதானது அல்ல. எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும். ‘வாரணாசி’மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்து பார்க்க விரும்பவில்லை. நான் 2 உலகங்களையும் கடந்து செல்வது போல் உணர்கிறேன். 2 துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன்.
கலாச்சாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.