கொச்சி: நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' (திரைப்படம் உலகளவில் ரூ.325 கோடி வசூலை நெருங்கி புதிய சாதனை படைத்து வருகிறது. படத்தின் இந்த வெற்றி குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் ஃபஹத் பாசில் மனம் திறந்து பேசியுள்ளார்.
பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோருடன் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்த ஃபஹத் பாசில், நேர்காணல் ஒன்றில் படத்தின் வெற்றி குறித்துப் கூறூம்போது, “தரமான மற்றும் புதுமையான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்பதற்கு இப்படத்தின் வெற்றியே சான்று.
இந்த வெற்றியின் முழு பெருமையும் இயக்குநர் கிரீஷ் ஏ.டி மற்றும் நிவின் பாலி உள்ளிட்ட படக்குழுவினரையே சாரும். வயது இடைவெளி கொண்ட காதல், நகைச்சுவை, திரைக்கதையின் இயல்புத்தன்மை மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறை ரிலீஸ் ஆகியவை சரியான நேரத்தில் அமைந்து படத்தை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் வெளியாகி 31 நாட்களைக் கடந்த நிலையிலும், படத்தின் வசூல் குறையாமல் தொடர்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ.157.78 கோடி நிகர வசூலை எட்டியுள்ள இப்படம், உலகளவில் ரூ.321.42 கோடி மொத்த வசூல் செய்துள்ளது.
மலையாள மொழியில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ள இப்படம், நான்காவது வாரத்திலும் வாரநாட்களில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடை போட்டு வருகிறது. கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையமைப்பில் உருவான இப்படத்தில் சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபார்ட், சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.