நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா, ஜூட் ஆண்டனி இயக்கியுள்ள ‘துடக்கம்’ என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதில் மீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தனது முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பு, மகிழ்ச்சியாக இருப்பதாக விஸ்மயா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தது வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதன் கதாபாத்திரமான மீனுவின் உடல் வலிமையும் சண்டையிடும் திறனும் படத்தின் முக்கியமான பகுதி. சண்டைக் காட்சியைப் படமாக்கும் போதுதான் உற்சாகமாக இருந்தேன். இப்படத்தின் கதாபாத்திரம் இளம் பெண்களுக்கு உத்வேகமாக அமையும்.
என்னைச் சந்திக்க வந்த ஒரு சிறுமி, ‘என்னாலும் மீனுவைப் போல சண்டைபோட முடியும்’ என்று கூறினார். இதுபோன்ற கதாபாத்திரங்கள் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் உத்வேகம் அளித்தால் அது நல்ல விஷயம். திரையில் வலிமையான மனிதர்களைப் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.
என் தந்தை மோகன்லால் சிறந்த நடிகர் என்பதால் அதற்கான அழுத்தம் எனக்கு இருக்கிறது. அடுத்து 2 கதைகளைக் கேட்டுள்ளேன். இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.