நடிகர் விஜய் தேவர கொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “வணிக ஆதாயங்களை பெறுவதற்காக தன்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் உள்ளடக்கங்கள், போலி விளம்பரங்கள் மற்றும் போலி இணைய தளங்கள் பொது மக்களைத் தவறாக வழிநடத்துவதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம், டீப்ஃபேக்குகள் மற்றும் டிஜிட்டல் முறைகேடுகள், ஆபாசமான, அவதூறான மற்றும் இழிவான உள்ளடக்கங்களை நீக்கவும் அவர் கோரியிருந்தார். தனது அனுமதியின்றி, தனது ஆளுமைப் பண்புகளைச் சுரண்டும் மொபைல் செயலிகள், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைப்பதையும் அவர் மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி விகாஸ் மகாஜன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வணிக ரீதியான ஆதாயங்களை ஈட்டுவதற்காக, விஜய் தேவரகொண்டாவின் ஆளுமைப் பண்புகள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மெட்டா பிளாட் ஃபார்ம்ஸ், எக்ஸ் தளம், கூகுள், ஃபிளிப்கார்ட், அமேசான், மீஷோ, ரெட் பபிள் ஆகிய தளங்களிலிருந்து அத்தகைய உள்ளடக்கங்களையும், தயாரிப்புகளையும் அடுத்த 72 மணி நேரத்துக்குள் நீக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.