நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்துக்கு உரிமை கோரி எம்.சி.சிவகாமி மற்றும் எம்.சி.நடராஜன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நோட்டீஸ் பிறப்பித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரது குடும்பத்தினரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக அந்த சொத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் மகன் நடராஜன் மற்றும் மகள் சிவகாமி ஆகியோர் அந்த சொத்துக்கு உரிமை கோரி, செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், முழுமையான விசாரணைக்குப் பின்னரே சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், சொத்தை சட்டப்படி விலைக்கு வாங்கி அனுபவித்து வரும் நிலையில் போலி வாரிசு சான்றிதழ் மூலமாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிலர் உரிமை கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனவே, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நிராகரிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேவியின் சொத்தில் பங்கு கேட்டு நடராஜன் மற்றும் சிவகாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், அவர்கள் சொத்தை அபகரிக்கும் நோக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை நிராகரித்து, உத்தரவை ரத்தும் செய்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிவகாமி மற்றும் நடராஜன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகாமி மற்றும் நடராஜன் தரப்புக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரன், “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அந்த சொத்தில் ஐந்தில் ஒரு பகுதி, மனுதாரரின் தந்தையான சந்திரசேகருக்கு சொந்தமானது.
ஆனால் அதை மனுதாரர்களின் தந்தைக்கு தெரியாமல் அவருடைய சகோதர, சகோதரிகள் முறைகேடாக விற்பனை செய்துவிட்டனர்; அதனால் இந்த சொத்தின் விற்பனை ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த போனி கபூர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் வழக்கறிஞர் ஆனந்த செல்வம் ஆகியோர், “கடந்த 1988-ம் ஆண்டு நிலம் வாங்கப்பட்ட நிலையில் 2025-ல் தான் நிலத்தின் மீது உரிமை கோரி வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
மனுதாரர்களுடைய தந்தை உயிரோடு இருந்த காலத்தில் கூட இந்த சொத்தின் மீது உரிமை கோரி எந்த வழக்கும் தொடுக்கவில்லை; அப்படி இருக்கையில் தற்போது சொத்தை அபகரிக்கும் நோக்கில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் அந்த வாதத்தை முழுமையாக ஏற்க மறுத்த நீதிபதிகள், இரு தரப்பும் அமர்ந்து பேசி சமரசமாக ஒரு தீர்வை எட்டலாமே? என தெரிவித்தனர். அதை ஏற்க மறுத்த போனி கபூர் தரப்பு, சொத்தில் மனுதாரர்களுக்கு உரிமையே இல்லை என்று கூறும்போது எதற்காக சமரசத்துக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மனுதாரர்களுக்கு சில உரிமைகள் உள்ளன என தெரிவித்ததோடு, சமரசமாக செல்ல அறிவுறுத்தினர்.
மேலும் மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்தும் உத்தரவிட்டனர். ஒருவேளை, சமரசத் தீர்வு எட்டாத பட்சத்தில் இந்த மனு மீது போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு வழக்கு மீதான விசாரணையை வரும் டிச. 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.