தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘ஸ்லம்டாக் - 33 டெம்பிள் ரோடு’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இதில் சம்யுக்தா, தபு, துனியா விஜய்குமார், பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசை அமைத்துள்ளார். ஆக் ஷன் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் புரி ஜெகன்நாத் திரைத்துறைக்கு வந்து 26 வருடங்கள் ஆனதை ஒட்டி, நடிகர் விஜய் சேதுபதி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமாவில் 26 ஆண்டுகள் என்பது வெறும் மைல்கல் மட்டுமல்ல; அது தைரியம், உறுதி மற்றும் எதற்கும் அஞ்சாத குரலால் உருவாக்கப்பட்ட சகாப்தம். ‘ஸ்லம்டாக்’ திரைப்படத்தில் உங்களுடன் பணியாற்றியது எனக்குக் கிடைத்த பெரிய மகிழ்ச்சி.
நடிகர்களான நாங்கள் எங்களின் எல்லைகளைத் தாண்டி சிறப்பாகச் செயல்பட வைக்கும் இயக்குநர்களையே எப்போதும் தேடுவோம்; அதை நீங்கள் எளிதாகச் செய்கிறீர்கள். இந்தத் திரைப்படம் நம் அனைவருக்கும் தனித்துவமான, என்றும் நினைவில் நிற்கக்கூடியதாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.