நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்கிற சாதி எதிர்ப்புக்குரல் புத்தாயிரத்துக்குப் பிறகான தமிழ் சினிமாவில் வலுப்பெற்றது. சாதிக்கு எதிராகவும் சாதிய உணர்வுக்கு ஆதரவாகவும் படங்களை உருவாக்கும் போக்கும் தமிழ் சினிமாவில் உண்டு.
ஆனால், கன்னட சினிமாவில், கடலோர கர்நாடகத்திலிருந்து வந்த ஷெட்டிகள் சாதியின் பெயரைப் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டாலும் சாதிய சிந்தனையுடன் படமெடுப்பதில்லை. மாறாக, தங்களுடைய கடலோர கர்நாடகத்தின் கலாச்சார வாழ்க்கையைக் கதைக் களமாக்கி, கன்னட சினிமாவுக்கு அகில இந்திய அளவில் மரியாதைப் பெற்றுக் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கைக்குக் கன்னட சினிமா இடம் பெயர்ந்ததே ஒரு சுவராசியமான பிளாஷ் பேக்!
கடந்த 100 ஆண்டு கன்னடத் திரையுல வரலாற்றில் பெரும்பாலும் தெற்கு கர்நாடகா- மைசூர் சமவெளிப் பகுதியிலிருந்து வந்த கலைஞர்களின் செல்வாக்கே உச்சம் பெற்று விளங்கியது. குறிப்பாக, கன்னடத் திரையுலகின் பிதாமகர் என்று போற்றப்படும் ராஜ்குமார் குடும்பத்தினர், மைசூரின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல், விஷ்ணுவர்தன் தெற்கு மைசூரைச் சேர்ந்தவர். அம்பரீஷ் மாண்டியா மாவட்டத்துக்காரர்.
தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான கிச்சா சுதீப்பும் தெற்கு கர்நாடகாவின் ஷிமோகா மலைநாடு பகுதியைச் சேர்ந்தவர். புதிய தலைமுறை நடிகர்களில் 'கே.ஜி.எஃப்' வழியாகப் புகழ்பெற்ற யஷ், மைசூரின் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களை இயக்கிய இயக்குநர்களும் பெரும்பாலும் தெற்கு கர்நாடகத்துக்காரர்கள்தான்.
இதனால் பெரும்பாலும் மைசூர் - பெங்களூரு - மாண்டியா பகுதிகளின் 'நிலப்பிரபுத்துவ' கலாச்சாரத்தில் ஊறிய கதைகளையும், கிராமிய சென்டிமென்ட்களையும் இவர்களது படங்களில் பார்க்கலாம். ஆனால், மேற்குக் கடலோர கர்நாடகத்திலிருந்து கன்னட சினிமாவுக்குள் நுழைந்த ரிஷப் ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டி, ராஜ் பி. ஷெட்டி ஆகிய மூன்று இயக்குநர்கள், கர்நாடகத்தின் மேற்குப் பகுதியிலுள்ள கடலோர கர்நாடகாவான கனரா பகுதியிலிருந்து வந்தவர்கள்.
இது மங்களூருவை உள்ளடக்கிய தட்சிணக் கன்னடா , உடுப்பி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி. வெவ்வேறு திரைமொழிகளில் இவர்கள் உருவாக்கிய உருவாக்கிய ‘காந்தாரா’, ‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘கருட கவன விருஷப வாகன’ போன்ற பல படங்களின் தாக்கமும் வெற்றியும் இன்று இந்திய அளவில் பேசப்படுகிறது.
மண்ணின் மணமும் தரமான தொழில்நுட்பமும் கலந்த ஒரு புதிய பாணியை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். உள்ளூர் கலாச்சாரம், நாட்டுப்புறக் கதைகள், மனித உளவியலை மிக நுணுக்கமாகக் கையாள்வது என முழுமையான சினிமா அனுபவத்தை வழங்கும் படங்களைத் தருவதால் இந்தியாவில் மாநில எல்லைகளைக் கடந்து இவர்களின் படங்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால், கன்னட சினிமாவின் இதயம் தெற்கிலிருந்து மெல்ல மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து, இன்று அகில இந்திய அளவில் துடிக்கிறது.
இந்த ஷெட்டிகளின் வரிசையில் தன்னுடைய சீரியல் கில்லர் க்ரைம் த்ரில்லர் படங்களைக் கொடுத்து இணைந்து கொண்டவர் தேவிபிரசாத் ஷெட்டி. கடலோர மலையகக் கர்நாடகாவைக் கதைக் களமாகக் கொண்டு 2021-ல் ‘சீதாராம் பெனாய் கேஸ் நம்பர் 18’, 2024-ல் ‘கேஸ் ஆஃப் கொன்டனா’ என இரண்டு சீரியல் கில்லர் கதைக் களங்களைக் கொண்ட படங்களை பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளாகக் கொடுத்து தற்போது ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ என்கிற தனது மூன்றாவது சீரியல் கில்லர் படத்துடன் வந்திருக்கிறார்.
கன்னடம் மற்றும் தமிழில் மட்டும் இப்படம் வெளியாகியிருக்கிறது. தேவி பிரசாத் ஷெட்டி, தன்னுடைய முந்தைய இரு படங்களிலும் தொடர் கொலை வழக்குகளைப் புலனாய்வு செய்யும் இன்ஸ்பெக்டர் சீதாராம் (விஜய ராகவேந்திரா) கதாபாத்திரத்தை உளவியல் ரீதியாக ஒரு நிதானமான காவல் அதிகாரியாக, தேவைப்படும்போது மட்டும் தன் போலீஸ் உடல் வலிமையைக் காட்டும் ஒருவராக மிக அமைத்திருந்தார். அது இந்த மூன்றாவது படத்திலும் தொடர்ந்ததா? கடலோர மலையகக் கருநாடகம் இக்கதைக் களத்துக்கு உதவியதா? இது வழக்கமான சிரியல் கில்லர் படமாகத் தேங்கியதா அல்லது சீரியல் கில்லர் சினிமாவிலும் ஷெட்டிகள் கெத்துதானா என்று பார்த்துவிடலாம்.
இன்று பெரும்பாலான இந்திய க்ரைம் த்ரில்லர் படங்கள் பெரும்பாலும் விறுவிறுப்பான வேகமும், அதிரடித் திருப்பங்களும், அதிர்ச்சியூட்டம் வன்முறையில் நிறைந்த திரைக்கதைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் ‘சீதாராம் செகண்ட் கேஸ்’ அந்த வழக்கமான பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. இது ஒரு சீரியல் கில்லரை மையப்படுத்திய கிரைம் த்ரில்லர் என்றபோதும், அவனைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் இருக்கும் இன்ஸ்பெக்டர் சீதாராம் உளவியல் ரீதியாகத் தன்னுடைய கடந்த காலம் தந்து சென்ற மனவலியைச் சுமந்துகொண்டிருப்பதால் அவரது விசாரணை அணுகுமுறையில் நிதானமே மேலோங்கியிருக்கிறது. மேலும் விசாரணையில் சரிவுகளை எதிர்கொள்ளும்போது உடைந்துபோகும் அவரது துடிப்பும்தான் அந்தக் கதாபாத்திரத்தை நாம் தொடரும்படி செய்கிறது.
இது ஒரு தொடர் கொலை வழக்கைத் தீர்ப்பதற்கான திரைக்கதையாக விரியாமல், ஒரு வழக்கைத் தீர்க்க முயலும் அதிகாரி எப்படி விழுந்து விழுந்து எழுகிறான் என்பதை எளிய மனிதர்களின் வாழ்வில் நிகழும் அழுத்தமான சம்பவங்கள், உளச்சிக்கல் வழியாக நிகழும் குற்றங்களின் முகத்தை விரித்து வைக்கும் கதை
மேற்குக் கர்நாடகாவில் சமூகக் காடுகளும் மழையும் சூழ்ந்த ‘ஆனேகடா’ என்கிற சற்று பெரிய மலையூரைச் சுற்றிக் கதை நடக்கிறது. அங்கே தொடர்ச்சியாக நடக்கும் சில கொடூரமான கொலைகளின் பின்னால் மனம் சிதிலமான ஒரு சைக்கோ கொலைகாரன் இருப்பது தெரிய வருகிறது. அந்த ஊரின் இன்ஸ்பெக்டராக இருக்கும் சீதாராம் இந்தத் தொடர் கொலை வழக்கைத் துப்புத் துலக்கத் தன்னுடைய நிலையக் காவலர்களுடன் நிதானமாகக் களமாடுகிறது. ஒவ்வொரு முறையும் உண்மையான கொலைகாரனை நெருங்கிவிட்டோம் என எண்ணும்போது தோல்வியில் முடியும் விசாரணையின் பாதையும் அதன் முடிச்சுகளும் இறுதியில் எங்கே கொண்டுபோய் நிறுத்தியது என்பது கதை.
சீதாராம் வேலை செய்யும் ஆனேகடாவுக்கு அவருடைய அக்காள் குடும்பம் குடி வருவது இறுதிப் பகுதியின் ஓட்டத்தில் எதிர்பாராத உணர்வுப் போராட்டத்தை வழங்குகிறது. சீதாராமின் அக்காள் குடும்பத்தைக் கதையுடன் இணைத்த விதம் ‘எமோஷனல் பேக்கேஸ்’ ஆக இருந்தாலும் பல சீரியல் கில்லர் படங்களின் நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இன்ஸ்பெக்டர் சீதாராம் புலன் விசாரணையில் ஒரு புலி கிடையாது. ஆக்ஷனில் சூப்பர் ஹீரோ அளவுக்கெல்லாம் இல்லை. ஆனால், உடல் மற்றும் மனரீதியாக அவரைக் கட்டுப்படுத்தும் எல்லைகள் தான் அந்தக் கதாபாத்திரத்தைச் சுவாரசியம் மிகுந்ததாக ஆக்கிவிடுகின்றன. சீதாராமின் பயம் கலந்த விசாரணையும் அதனால் விளையும் அவருடைய தடுமாற்றங்களும் அவரை தரையில் காலை அழுத்தமாக ஊன்றியிருக்கும் ஒரு இயல்பான அதிகாரியாக உணர வைக்கிறது.
அவருடைய அக்கா தேர்ந்தெடுத்த வாழ்க்கையைத் தன்னுடைய இளமைக் காலத்தில் அப்பா கொடுத்த அழுத்தத்தால் ஆதரிக்க முடியாமல் போய், பின்னாளில் காலம் அவருக்குக் கொடுக்கும் வாய்ப்பில் அதை மீட்டுக்கொள்ளும்போது அந்தக் கதாபாத்திரத்தின் நிதானமும் பயமும் மனவலிகளும் எவ்வளவு நியாயமானவை என உணர வைக்கிறது.
படத்தின் அட்டகாசமான தொழில்நுட்ப அம்சங்களில், கொலைகள் நிகழும் மலையகக் கர்நாடகாவை மர்மமாகக் காட்சிப் படுத்தியிருக்கும் ஹேமந்த்தின் ஒளிப்பதிவும் கதைக் களம் கோரியதை முன்னிட்டு வீணையைக் கொண்டு ஒரு சீரியல் கில்லர் படத்துக்குப் பின்னணி இசை கொடுத்திருக்கும் நவனீத் ஷாமின் திறமையும் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கின்றன.
இன்ஸ்பெக்டர் சீதாராமாக வரும் விஜய் ராகவேந்திரா தனது அனுபவமிக்க நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அவர் காட்டும் நிதானம் கதாபாத்திர நடிப்புக்கு உதவியிருக்கிறது. சிரியல் கில்லர் கதை என்றதும் அதிரடியான வேகத்தை எதிர்பார்த்துச் செல்லாமல், தரமான மேங்கிங், பொறுமையாகக் கதை சொல்லும் பாணி, அதில் அளவான ஆனால் அழுத்தமான திருப்பங்களையும் விரும்பும் ரசனைக்கு ஆர்ப்பாட்டமில்லாத விருந்து.